Tuesday, December 25, 2007

கடல் மாதாவே!

(ஒரு மீனவரின் புலம்பல்!)

கடற்கரை...
பலருக்கு பொழுதுபோக்கு;
அட, உனக்குமா?!
நீ வந்து
பொழுதுபோக்கிய தினமே
டிசம்பர் 26, 2004!

ஜப்பானிய மொழி
கற்பது கடினமாம்...
சுனாமி
எனும் சொல்லை
இனி நான் மறப்பது
அதைவிட கடினம்!

படிப்பறிவு ஏதுமில்லை
மீன்
பிடிப்பறிவைத் தவிர
எங்களுக்கு நாதியில்லை...
நாங்கள்தான்
வேறுவழியில்லாமல்
மீன்பிடித்து வாழ்கிறோம்...
உனக்கென்ன வந்தது?
எங்களைப் பிடிக்க வந்தாய்!

நம்பிக்கையே வாழ்க்கை...
மரணத்தின் மீதுதான்
தினமும் பயணம்...
கட்டுமர(ண)த்தின்மீதுதான்
தினமும் பயணம்!
உறுதியாகத் தெரியாது
அது இறுதிப் பயணமாயென்று!
ஆம்,
நம்பிக்கையே வாழ்க்கை!

தினம்தினம்
வலை வீசுகிறோம்;
ஏனோ
கவலையை வீச முடியவில்லை...
மூன்றாண்டுகளாகி விட்டது
என் குழந்தைகளைக்
கடலில் தொலைத்து;
இன்றுவரை சிக்கவில்லை
என் வலையில்!

நான் காக்க மறந்த
குழந்தைகளை
உனக்கு இரையாக்கினாய்...
என் வீட்டைக் காக்கும்
இறையாக்கினாய்!
கடல் நோக்கிக்
கும்பிடுகிறேன்...
குழந்தைகள் கூப்பிடும்குரல்
தொலைதூரத்தில் கேட்கிறது!

Sunday, December 23, 2007

மார்கழி


கொடியிலே பூசணிப்பூ
விடிய விடிய காத்திருக்கிறது...
அவளுக்காக!


அடுத்த வீட்டுக் கோலத்தை
எனக்கு முன்பே
யாரோ மிதித்திருக்கிறார்கள்!


கடவுள் புண்ணியத்தில்
நாய் பயமின்றி வாக்கிங்...
பஜனை கோஷ்டி!


கோலமிட வழியில்லாத அபார்ட்மென்டில்

நீர் தெளித்துச் சென்றது

பனி!

Tuesday, December 18, 2007

பருவமழை...

பருவமழை தொடங்கியதும்தான்
எத்தனை மாற்றங்கள்!
பருவமங்கை போல்
கொல்லையில் குவிந்துள்ள
சாணம் கரைத்து
மேனியெங்கும்
மருதாணி பூசிக்கொள்ளும்
கட்டாந்தரை!

உடைந்து
சிதறிய பானையை
மீண்டும்
கரைத்துப் பூசியதுபோல்
முதல் மழையால்
கரடுகள் கரைத்து
கீறல்கள் அடைத்து
மழைநீரை அடைகாக்கும்
பெரியகுளம் கண்மாய்!


அரிவாளின் நுனி தப்பி
உயிர்காத்து நிற்கும்
கருவேல மரங்கள்
அவசர அவசரமாய்
மனச்சுமை இறக்கி
பசுமை காட்டி
மூச்சிழுக்கும்!


அவரைப்பந்தலுக்கு
நட்டுவைத்த
கூவாப்புல் மரக்கழியும்
தன்னிலைமறந்து
களிப்போடு தழைப்பதுபோல்
வெள்ளாமை போட்டவன்
மனதின் ஒரு மூலையில்
நம்பிக்கை துளிர் விடும்!

Thursday, December 13, 2007

சில நேரங்களில் சுவர்களுக்கும் காதுண்டு!



இதுக்குப் பயந்துதான்
பல வீட்டுக் குடும்பச்சண்டை
நடுவீதியில்!

நன்றாகத் தேடிப் பாருங்கள்
ரகசியமாகக்
கண்ணும் இருக்கும்!

கல்லறைச் சுவர்கள் மட்டுமே
காது மூடித்
தூங்குகின்றன!

Wednesday, December 5, 2007

இது
யார் மூளைக்குள்
எரிந்த பல்பு?!

முட்டாளே!
எந்த தலைவனுக்காக
இந்த தற்கொலை முயற்சி?!

மெல்ல நட...
இழுத்துக்கட்டிய உயிர்
அறுந்துவிடாமல்!

நறுக்! நறுக்!


Tuesday, November 27, 2007

கொஞ்சம் பயணம்... கொஞ்சம் தூக்கம்!

அத்தனை குலுக்கலிலும்
விடாப்பிடியான தூக்கத்தில்...
பெண்கள் இருக்கையில் அவன்!

ஓடும் பேருந்தில் தூங்கிய குழந்தை
அடித்தெழுப்பப்பட்டது...
அரைடிக்கெட்டுக்கு அளவெடுக்க!

என்னருகே அமர்ந்திருப்பவர்
எனக்கும் முன்பே தூங்கிவிட்டார்...
தூங்காமல் நான்!

Friday, November 16, 2007

ஆனந்த விகடன் தீபாவளி இதழில்...

ஆனந்த விகடன் தீபாவளி இதழில் எனது நகைச்சுவைத்துணுக்குகள் இரண்டு வெளியானது...

கவிஞர் வைரமுத்து அவர்களோடு நான்...

குங்குமம் இதழ் நடத்திய வாசகர் கவிதைப் போட்டியில் தேர்வு பெற்ற கவிஞர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. அவ்விழாவில் கவிஞர் வைரமுத்து அவர்களோடு நான்...






Friday, October 19, 2007

வயக்காட்டுப் பக்கம்…


நானும் மேட்டுக்குடி தான்…
நாள்முழுக்க
வரப்புமேட்டில் தான்!


நாற்று
நட்டுக்கொண்டே இருக்கிறோம்…
இன்னமும் நிமிரவில்லை!


இம்முறையும்
யாரும் கல்லூன்றவில்லை…
விரைவாய் நீ வேரூன்று!

Sunday, October 7, 2007

கம்பளிப்புழு!

உத்திரத்தை நோக்கிய
என் சிந்தனை வலையை அறுத்தபடி
குறுக்குக் கட்டையில்
மெல்ல நகருது கம்பளிப்புழு!

கம்பளி போர்த்திய புழுவே!
குத்திட்டு நிற்கும்
மயிர்க்கால்களே உன் ஆயுதம்!
உன்னைப் பார்த்த மறுநொடி
என்னையும் மீறி
எனது ரோமங்களனைத்தும்
எழுந்து நின்று
பயமரியாதை செய்யும்!
கம்பளிப் புழுவல்ல...
நீ ஒரு கம்பீரப்புழு!

மழைக்காலத்திலே
மண்டிய புதர்ச்செடியிலே
இலைமறைகாயாக
தலைமறைவாகத் தான்
தலைமுறை தலைமுறையாக
உனது
வளர்சிதை மாற்றமெல்லாம்!
நீ பதுங்குவது
பாய்வதற்கா?
இல்லை, பறப்பதற்கு!
அஹிம்சாவாதி நீ!


மழைக்காலத்தின் அடையாளமே!
வெயில் காலத்தின்
புழுக்கமான இரவுகளில்
கனவில் நீ வந்தாலும்
என் ரோமக்கால்களனைத்தும்
சிலிர்த்து நிற்க...
நானும் உன்னைப் போலவே...
தூக்கத்தில் நெளிந்தபடி!

Friday, October 5, 2007

செந்தில், வடிவேலுவுக்குப் போட்டியாக புட்டபர்த்தி சாய்பாபா!

ஒரு படத்தில் ஊருக்கு அருகே இருக்கின்ற மலையைத் தூக்குவதாகச் சொல்லி ஊர் மக்களை ஏமாற்றுவதாக நடிகர் செந்தில் காமடி பண்ணியிருப்பார்! இன்னொரு படத்தில் நடிகர் வடிவேலு, தனது கண்ணில் கடவுள் தெரிவதாகச் சொல்லி ஊர் மக்களை ஏமாற்றுவார்! இதையெல்லாம் மிஞ்சும்படியாக நேற்று சாய்பாபா வழக்கம்போல ஒரு "தில்லாலங்கடி" வேலை செய்திருக்கிறார்!

நேற்று (04.10.2007) சாய்பாபா குடியிருக்கும் பிரசாந்தி நிலையத்திலிருந்து, மாலை 6.30 மணிக்கு "விஸ்வரூப விராதி" நிகழ்ச்சி நடக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. அதாகப்பட்டது, பால்கனி வழியே "தரிசனம்" கொடுத்து வந்த சாய்பாபா நேற்று மாலை 6.30 மணிக்கு நிலவிலிருந்து தரிசனம் தரப்போவதாக அறிவிக்கப்பட்டது!

வழக்கம்போல இதுபற்றி அறிவுப்பார்வை பார்க்க மறுக்கும் அவரது பக்தகோடிகள் பலரும் பிரசாந்தி நிலையத்திலிருக்கும் மைதானத்தில் கூடி விட்டனர். இவர்களோடு ஏமாற்றுக்கார சாய்பாபாவும் அங்கு வந்து சேர்ந்து கொண்டார்! பூமியில் இருக்கும் பாபா நிலவில் காட்சி தரும் அற்புதத்தைப் பார்க்கும் ஆர்வத்தோடு அனைவரும் வானத்தைப்பார்க்க, அங்கு நிலா ஆப்சென்ட்!!

நம்மளை வைத்து பாபா "காமடி கீமடி" பண்றாரோ என நினைத்துக் கொண்ட நிலா மேகத்தினுள் மறைந்துகொண்டு வெளியே தலைகாட்டவேயில்லை!! நிலவில் தரிசனம் தரக்கூடிய சாய்பாபாவாலும் நிலவை மூடி மறைத்திருக்கும் மேகக்கூட்டத்தை ஊதித்தள்ளி விலக்க முடியவில்லை!! இறுதியாக, இன்னொரு நாள் காட்சி தருவதாக பாபா சொன்னதும் கூட்டம் ஏமாற்றத்துடன் கலைந்தது!!!

தமிழ்த் திரைப்படத்துறையினர் இந்த காமெடி நிகழ்ச்சியை தங்கள் அடுத்த படத்தில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்!!!

Friday, September 28, 2007

மீண்டும் ஹைக்கூ!

சாலையோர ஓவியத்தில்
யேசுபிரான்...
சில்லரைகளையும் சேர்த்துச் சுமந்தபடி!

சிறுபுள்ளி கூட சிக்காததால்
செல்வி
தற்போதைக்கு "செலவி"யாக!

குழந்தை அழுதது...
அதட்டினார் அப்பா..
சமாதானம் பேசினான் பலூன்காரன்!

குழாயடிச் சண்டை
தயங்கியபடி
நல்ல தண்ணீர்!

அப்பா அம்மா சண்டை
கன்னம் வீங்கியது
எனக்கு!

Wednesday, September 26, 2007

ஹைக்கூ


வாஸ்து பார்க்கவும் நேரமில்லாமல்
கூட்டு முயற்சியில்
தேனீக்கள்!

வெளிச்சத்தை விழுங்கிவிட்டு
விடிய விடியத் தூக்கமில்லாமல்
நிலவு!

விருந்துக்கு யாருமே வரவில்லை
கவலையில்
வலையில் சிலந்தி!

முல்லைக்குத்
தேர் கொடுத்தவன் நினைப்பு
பேருந்தில் தொங்கும்போது!

பரிணாம வளர்ச்சியா?
பரிதாப வளர்ச்சியா?
துப்பட்டாவாக தாவணி!

நறுக்! நறுக்!

கழைக்கூத்தாடி
உயரமான கம்பியில் தான்
அவள் நடக்கிறாள்...
தெருவே நெருக்கடியில்!

ஏ டி எம்
விடிய விடிய
தூக்கமில்லாமல்...
புதுப்பணக்காரன்!

கோடை காலம்
வழிநெடுக
வியர்த்துக்கொட்டியபடி...
தண்ணீர் லாரி!

கிளி ஜோசியம்
அள்ளிக் கொடுத்துக் கொடுத்துச்
சிவந்து போனது
கிளியின் மூக்கு!

கருவாடு
ஈரமில்லாததால்...
ஈரமில்லாததால்...
கருவாடாக இன்று!

Monday, September 24, 2007

குங்குமம் இதழில்...

குங்குமம் இதழில் கவிஞர் வைரமுத்து அவர்களால் தேர்வு செஇயப்பட்ட எனது கவிதை.

Monday, September 17, 2007

சொல்லாமல் வந்தது மழை...

சொல்லாமல் வந்தது மழை...

நினைவுகளில்

குடை சுமக்கும் மனிதர்கள்

நிராயுதபாணியாய்

ஒதுங்க இடந்தேடியபடி!


நொடிகளில் சாலைகள் நனைய,

நிமிடங்களில்

முட்டி மூழ்கும் உடனடி வெள்ளம்!

நடைபாதைக் கடைகள் மூட

நடக்கத் தடை நீங்கியது...

நடக்கத்தான் யாருமில்லை!


ஓட்டுனரின்

கோபத்தையும் சாபத்தையும்

சேர்த்துச் சுமக்கும்

படிதாண்டா பத்தினி(!)கள்...

வேறுவழியின்றி

படி தாண்டி

உள்ளே முண்டியபடி!


அடித்துத் துவைத்துத்

தொங்கவிடப்பட்ட துணிகள்

வியர்வை சொட்டச் சொட்ட

அவசரமாய் அள்ளப்பட்டன!


மிஞ்சிய சோற்றைப்

பக்குவமாய்ச் சேர்த்து

பார்த்துப் பார்த்து

வார்த்த வடகம்...

மொட்டை மாடி முழுக்கச் சேறாக!


கூரை ஓட்டைவழியே

அத்துமீறிய

அம்பு மழையை

கேடயமாய்த் தடுத்திட

வீட்டிலுள்ள பாத்திரங்கள்

அத்தனையும் அணிவகுத்தன!

வழக்கம்போல்

தோற்றுப்போன மழை

சொல்லாமல்

சொல்லிச் சென்றது...

"திரும்பவும் வருவேன்!"

Monday, July 23, 2007

ரசம் பூசிய கண்ணாடி

மீண்டும்
பெண் பார்க்கும் படலம்
இது
ஏழாவது என நினைக்கிறேன்...

வழக்கம்போல்
கண்ணாடிமுன் அமர்ந்து
ஒற்றை வகிடெடுத்து
சிறு கற்றை முடி
நெற்றியில் தவழவிட்டு
படியத் தலைவாரி
சவுரியைத் தொங்கவிட்டு
பூக்களால் மூடிமறைத்து
இமைக்குக் கருமையிட்டு
முகத்துக்கு வெண்மையிட்டு
படபடக்கும் இதயத்தால்
வழியும் வியர்வையில்
முகப்பூச்சு நனையாமல்
ஒரு கையால் துடைத்தபடி...
மறு கையால் விசிறியபடி...
இதோ
தயாராக நான்!

எனது மனக்குமுறல்
என் வீட்டுக் கண்ணாடிக்கு
மட்டுமே புரியும்...
பிறர் பார்வைக்காக
அலங்கரிக்கும் எனக்கும்
ரசம் பூசிய கண்ணாடிக்கும்
வித்தியாசம் அதிகமில்லை!

பொய்நிலவு

நிலவு
எனக்கு அறிமுகமான காலத்தில்
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்!
இரவுகளில்
உண்ண மறுத்தபோது
எனக்கான உணவை
என்னோடு பகிர்ந்து சினேகமானது!
மொட்டை மாடியில்...
தூக்கம் தொலைந்த இரவுகளில்
நிலவோடு நான்
கண்ணாமூச்சி விளையாடியிருக்கிறேன்!
ராகுவும் கேதுவும்
விழுங்கிய நேரங்களில்
முழுதாகத் திரும்பும்வரை
கண் விழித்திருக்கிறேன்!
இன்றும்கூட
நிலவினைப் பார்க்கும்போதெல்லாம்
காதல் பிறக்கிறது...
உடன் கவிதையும் பிறக்கிறது!
உண்மை ஒருபுறம் இருக்கட்டும்...
பொய்நிலவு தான்
எனக்குப் பிடித்திருக்கிறது!

Tuesday, July 17, 2007

ஞாபகம் வருதே!

பேருந்திலே பயணம்;
பேருந்து முன்னோக்கிச் செல்ல
என் மனமோ பின்னொக்கிய பயணத்தில்...
யாரோ வீடு கட்ட
குவித்து வைத்த மணல்...
எங்களது மைதானமாகும்!

அடுக்கி வைத்த செங்கலை
பேருந்தாக உருமாற்றி...
மணல்குன்று முழுவதும்
கொண்டை ஊசி வலைவுப் பாதையமைத்து
வண்டி ஓட்டி விளையாடிய நினைவு!

வளைந்து நெளிந்து ஓட்டுவதும்,
இடிக்காமல் திருப்புவதும்,
மோத விட்டுச் சிரிப்பதும்,
மணல், மண்ணாகும் வரை தொடரும்!

இன்றும் என் மகன்
வண்டி ஓட்டி விளையாடுகிறான்;
கணிணித் திரையில்
கண்களைப புதையவிட்டு!
அவனது மைதானம்
"மவுஸ்பேட்" அளவு தான்!
என்னொடு ஒப்பிடும்போது
கொடுத்து வைக்காதவன் அவனே!
கொடுத்து வைத்தவனும் அவனே!

"டிக்கெட்ட எடுப்பா"
நினைவுகள் நொறுங்க,
நிகழ்காலத்தில் நான்;
பயணச்சீட்டு வாங்க மறந்தது
இப்போது என் ஞாபகத்தில்!!

Thursday, July 12, 2007

தெருவோரக் கவிதை

பறையோசையின் அதிர்வில்
அவிழும் கைலியைப் பற்றியபடி
தொடரும் குத்தாட்டம்...
இவர்களின் சாராய நெடி கரைக்க
ரோஜாப்பூவைச் சுமந்தபடி
பிணம் பின்னால் வரும்!
கடைசிவரை
அழவைத்த பெற்ற உறவு
முதன்முறையாய்
அழுதபடி முன்செல்லும்!
தலையைக் காட்ட வந்த உறவுக்கூட்டம்...
ஊருக்குக் கிளம்பும்
நேரம் பார்த்தபடி உடன்செல்லும்!
பாதை மறித்து
இறுதி யாத்திரை செல்ல...
காத்திருப்போரின் சாபத்தையும்
பிணம் சுமந்து செல்லும்!

Tuesday, July 10, 2007

வழக்கம் போல!

யாரோ
யார் மீதோ மோத
நடுத்தெருவில் ரத்த ஆறு
எல்லோரும் கூடி நின்று
'உச்'சுக் கொட்ட,
எல்லோரும் எதிர்பார்த்த
யாரோ ஒருவர்
அவர்களை
ஆட்டோவில் தூக்கிச் சென்றார்...
பார்த்ததைப் பகிர்ந்தபடி
எல்லோரும் கலைந்தோம்,
வழக்கம் போல!

Monday, July 9, 2007

ஜனனம்

காலடியில் பூமி பிளக்க

அதலபாதாளச் சறுக்கலில்

அடங்கா உயிர்வலியின் அலறல்...

பூமி விலகவிலகத்

தொடரும் உரசலில்

கீறல்களில் உயிர் கசிய...

முடிவில்லா ஆழத்தில்

இமை இறுக்கி உடல்குறுக்கி

இதயமும் சற்று சுருங்க...

இடைவிடாது அலறியபடி

முடிவிலாது விலகும்

புவியின் பாதம்வரை தொட்டு

மறுபக்கம் கீறி விண்ணில் வீழ,

மெல்லிய அழுகைச் சத்தம்

உலகம் நிரப்பும்!

வலியின் வீரியம் மரத்து

விழி நீர்பிரிக்க...

உதடுகள் விரிந்து மெல்லச் சிரிக்கும்!

மரணம் வென்ற ஜனனம்...

வலிமையின் அடையாளமே!

அபார்ட்மென்ட் வாழ்க்கை!

ஐந்தடுக்கு அபார்ட்மென்ட்டில்
எனது இறுதி நாட்கள்...
படுக்கையிலே நான்;
கைக்கெட்டும் தூரத்தில்
டைஜின் மாத்திரைகளும்
இருமல் சிரப்புகளும்...
மகனும் மருமகளும்
நாள் முழுக்க
அலுவலகத்திலே...
அடுத்த தலைமுறைக்குப்
பொருள் சேர்க்க!
புது ஏசி போட்டதிலிருந்து
இறுகப் பூட்டிய கதவுகளால்
கொசு வருவதில்லை...
வியர்வையும் கூட!
இதனையும் மீறி
முறுக்கேறிய ஆட்டோ அலறலும்,
தள்ளுவண்டி
வியாபாரிகளின் கூவலும்,
மேண்டலின் சீனிவாசின்
மெல்லிசையும்,
பக்கத்து வீட்டு
மீன் குழம்பு வாசனையும்,
செவியோடும், நாசியோடும்
பேசிச் செல்லும்!
அறையினுள்ளே
நடைபயிலும் போது
இடிக்கப்படும் எதிர்வீடு
என் கண்களோடு பேசும்...
எனக்கு மட்டுமே
அதன் வலி புரியும்!
இப்போது சில நாட்களாக
ஏதுமில்லா தனிமையிலே
என் மனதோடு பேச
மரணம் மட்டுமே இங்கு வரும்...
மறக்காமல்
விடைபெற்றுச் செல்லும்!

Sunday, July 8, 2007

அம்மா...

குழந்தைப் பருவந்தொட்டே
தொட்டதெற்கெல்லாம்
அம்மாவிடம் அடிவாங்கியே
வளர்ந்து வந்தவன்...
பென்சில் தின்றதற்காக
இடக்கையிலே சூடுபட்டது
உற்றுநோக்கினால் இன்றும் தெரியும்!
இன்று அதே அம்மா
என் குழந்தையோடு குழந்தையாக...
கண்ணில் கண்ணீர்வர
கொஞ்சிக் கொஞ்சிச் சிரிக்கிறாள்!
சாக்பீஸ் தின்றாலும
சோற்றைக் கொட்டினாலும்
அதட்டாமல் திருத்துகிறாள்!
கை சூப்பச் சொல்லி
வேடிக்கை பார்க்கிறாள்!
எனக்கும் வேடிக்கையாக இருக்குது...
இத்தனை நாளாய்
இந்த மனதை
எங்கே ஒளித்திருந்தாய்?

Thursday, July 5, 2007

குட்டிச்சுவர்

நான்கு சுவற்றுக்குள்
என்ன கஷ்டமோ தெரியவில்லை
மூன்று தரைமட்டமாக,
ஒன்று மட்டும்
இன்று குட்டிச்சுவராக!
பத்தாண்டுகளுக்கும் மேலாக
இதே மாதிரிதான்;
இதே இடத்தில்தான்;
ஒன்றிரண்டு
செங்கல் மட்டுமே குறைகிறது!

ராஜா வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை;
தனிச் சரித்திரம்
இருந்திடவும் வாய்ப்பில்லை!
ராஜா மாதிரி
யாரோ வாழ்ந்திருக்கலாம்...
தலைமுறை இடைவெளியால்
பாகப்பிரிவினை வந்திருக்கலாம்;
பங்குச் சண்டையால்
குட்டிச்சுவரு
இன்றுவரை குட்டிச்சுவராகவே...
இதைத்தவிர தல புராணம்
வேறிருக்க வாய்ப்பில்லை!

வாரப்பத்திரிக்கை,
திரைப்படங்கள்,
அரசியல்,
அனைத்து விளம்பரங்களும்
ஒட்டப்பட்டும்
கிழித்தெறியப்பட்டும்
போர்க்களமாயத் தெரிகிறது!
சுருக்கமாகச் சொன்னால்
சுவரொட்டி பலத்தால்தான்
சுவரே நிற்கிறது!

தேர்தல் நேரங்களில்
இதற்கும் புதுவாழ்வு வரும்...
முன்பதிவு செய்யப்பட்டு
வெள்ளையடிக்கப்படும்!
உடன்
ஏதேதோ பெயர்களைக் கிறுக்கி
திருஷ்டி கழிக்கப்படும்!
குட்டிச் சுவற்றின் ராசியால்
சில நேரங்களில்
சிலர் வெல்வதும் நடக்கும்!

வெற்றுச் சுவர்தான்...
இன்றும்
'நெருக்கடி' நேரங்களில்
'அவசரமாய்' ஒதுங்க
இதைவிட்டால் வழியில்லை...
செத்தும் கொடுத்த சீதக்காதி போல்!

Wednesday, July 4, 2007

பள்ளிக்கூட நினைவுகள்...

அரிது அரிது
திட்டாத ஆசிரியர் அரிது!
அதனினும் அரிது
திகட்டாத ஆசிரியர்!

குருசாமி வாத்தியார்
பாடம் நடத்தினால்
படம் பார்ப்பதுபோல
அத்தனை இன்பம்!
பிரம்பினால் அடித்து
உடம்பை உழுததில்லை...
சிரிக்கப் பேசி
மனதை உளவு பார்த்து
உழுது போட்டுப்
பாடங்களை விதைப்பதில்
அவருக்கு நிகர் அவரே!

'பச்சைமா மலைபோல் மேனி..."
திருமால் வாழ்த்துப்பாடலும்
'தன்னருந்திருமேனி..."
இரட்சணிய யாத்திரிகமும்
அவர் சொல்லி நாம் கேட்டால்
மதம் கடந்து மனதினை உருக்கும்!

வீட்டுப்பாடம் தந்ததில்லை
மனப்பாடம் தேவையில்லை
அவர்நடத்திக் கேட்டது
கனவினில் கேட்டாலும்
'கடகட"வெனக் கொட்டும்!

குப்தர்கள் காலம் பொற்காலம்...
வரலாற்றில் படித்திருக்கிறேன்
எனது பள்ளி வரலாற்றில்
அவரும் ஒரு குப்தரே!

எல்லோர் பள்ளி வரலாற்றிலும்
குருசாமி வாத்தியார்
இருந்திருப்பார்
வேறு பெயர்களில்...
வேறு வேறு உருவங்களில்!

குருவும் தட்சணை கொடுக்கும்
இக்கால குருகுலக் கல்வியில்
இன்னமும் மறையாத
குருசாமி வாத்தியார்களுக்கு
வாழ்த்துக்கள்!!!

Monday, July 2, 2007

அமெரிக்கா "மாதிரி" சென்னைப்பட்டணம்!

(இது ஒரு பாமரத்தனமான கவிதை)

அமெரிக்கா "மாதிரி"
மாறப்போகுது
சென்னைப்பட்டணம்!
அதுல வாழ்வதற்கு
நமக்கு நாமே
பெருமப்பட்டுக்கணும்!
ராசா மாதிரி வாழ்க்கை!
அதில்
தினம் நடக்குது வேடிக்கை!

தாயத்து வித்த காலம் மாறிடுச்சு...
இப்போ தகடு விக்கிறது
பேஷனாப்போச்சு!
ரேஷன் கார்டே
இன்னும் கிடைச்சபாடில்லை...
கிரடிட்டு கார்டை வைக்க
பாக்கெட்டு பத்தலை!
அடயாளம் தெரியாதவனும்
போன் போட்டுப் பேசுறான்...
கூடப்பொறந்த மாதிரி
அட்வைசு பண்ணுறான்!
கடைசியில்
வேண்டாத வீட்டுக்கு
கடன் வாங்க வைக்கிறான்!

"சிம்ரன்" மாதிரி
பார்த்துக் கட்டின மனைவி
வேர்த்துக்கொட்டுவதோ
அண்ணாச்சி கடையில்?
இன்னைக்குப் பறிச்ச "மாதிரி"
நறுக்கி வச்ச காரட்டு...
பளபளக்கும் பாக்கெட்டு
ரிலயன்சு ப்ரெஸ்சு
அது நம்ம ஸ்டேட்டசு!

பணத்துக்கில்லை திண்டாட்டம்...
சாட்டர்டேன்னாலே கொண்டாட்டம்!
தேவலோகம் மாதிரி
டிஸ்கோதே கிளப்பு...
தேவதைகள் ஜோடி சேர
பட்டையக் கெளப்பு!
ஏதுமில்லாதவனுக்கு
ரஸ்னா...மோரு...
நம்ம லெவலுக்கு
விஸ்கி... பீரு!
தள்ளாடு... தடுமாரு...
விடிய விடிய தடம்மாறு!
ரகசியம் ஏதுமில்லா
ரகசிய உலகமிது!

சண்டே என்றாலே ஷாப்பிங்கு!
கடல் மாதிரி கடைகள்...
கண்ணைப்பறிக்கும் உடைகள்!
போத்தீசு, ஜெயச்சந்திரன்,
சென்னை சில்க்ஸ்...
பேண்டலூண், குளோபஸ்சு
லேண்ட்மார்க்கு...
லொட்டு, லொசுக்கு
எல்லாமே சுத்தியாச்சு!
வாரிக்கொட்டிக்கொட்டி
குட்டிக்காரை நிறச்சாசு!
சாணை தீட்டித்தீட்டியே
கிரடிட்டுக் கார்டெல்லாம்
கூர்மழுங்கிப் போச்சு!

வெளிநாட்டுக் கம்பனியெல்லாம்
அணிவகுக்குறான்...
வெயிலு நமக்கு பலவீனம்...
அவனுக்கோ
அது தான் மூலதனம்!
குளிரவச்சு குளிப்பாட்டி
பணம் கறக்குறான்!
டீசென்ட்டா உழைச்ச பணத்த
டீசென்ட்டா கொள்ளையடிக்கிறான்
ஏசி ஷோரூமிலே!!

தீண்டாமை எனப்படுவது...

குருவாயூர் கோவிலுக்குள்
மதம் பிடித்த யானைகளுக்கு
அனுமதியுண்டு...
மதம் பிடிக்காத
மனிதர்களுக்கோ அனுமதியில்லை!


ஐயப்பன் கோவிலுக்குள்
கன்னிச் சாமிகளுக்கு
அனுமதியுண்டு...
கன்னிகள் சாமிகளாக
அனுமதியில்லை!


சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு
தமிழ்நாட்டில் இடமுண்டு...
கோவிலுக்குள் மட்டும்
தமிழுக்கு அனுமதியில்லை!


பள்ளியில் படித்த நினைவு;
தீண்டாமை
மனிதத்தன்மையற்ற செயல்...
உண்மைதான்
அது தெய்வீகச் செயல்!

Thursday, June 14, 2007

ராமர் பாலமும் அனுமார் கூட்டமும்!

கல்லைக் கடவுளென்று
காட்சியாக்கி
காசு பார்க்கும் கூட்டம்
கடல்
கொட்டிக் குவித்த
மணல் திட்டுகளைப்
பாலமென்று சொல்லுது...
சீதையை மீட்கச் சென்ற
பாதையென்றும் சொல்லுது!

இன்று
ராவணனும் இல்லை...
சீதையும் இல்லை...
அட,
ராமனும் கூட
கோர்ட்டுக்கு வரவில்லை...
சாட்சி சொல்ல!
யாரிடம் விசாரிக்க?
கேட்குது நீதிமன்றம்...
பதிலைக் காணோம்!

ஈழத்தமிழரை
மீட்க வழியில்லை...
இல்லாத சீதையை மீட்க
சொல்லுது புதுக்கதை!
நல்லவேளை...
இந்த நாசவலையில்
வீழவில்லை நாசா!

ராமனே
கட்டினால் தான் என்ன?
வெட்டியாய் இருப்பதை
வெட்டினால்தான் என்ன?
ராமாயண கதையில்
சுயநலமாக எழுந்ததை
மகாபாரதத்தின்
பொதுநலனுக்காக
குடைவது தவறா?

சீதையை காப்பாற்றிய
ராமன்...
இன்று மீண்டும்
யுத்தகளத்தில்...
ராஜபக்சேவை காப்பாற்ற!

அண்டைநாட்டுக்கு,
நம் வளர்ச்சியில்
பயம் கொண்ட
அயல்நாட்டுக்கெல்லாம்
ஆகாத திட்டம்...
இவர்களுக்கும்
ஆகாமல் போனதில்
வியப்பில்லை!
செவிகிழியக் கேட்குது
இவர்களின்
கோஷமும் வேஷமும்...
பாரத் மாதாகீ ஜே!

Monday, March 19, 2007

பருத்தி வீரனும் பொணந்திண்ணியும்

பருத்திவீரன் படம் நேற்று பார்த்தேன். இயல்பான கிராமத்து வாழ்க்கைமுறைகளை வெளிப்படுத்தும் மிகச்சில படங்களின் வரிசையில் பருத்திவீரனும் அமைந்துள்ளது. "ரோஜாப்பூ ரவிக்கைக்காரி" படத்தில் சிவகுமாருக்கு கிடைத்த நல்ல கதாபாத்திரம், சிவகுமாரின் மைந்தர் கார்த்திக்கு முதல் படத்திலேயே கிடைத்திருப்பது நல்ல தொடக்கம்.

ரோ.ர. படத்திற்கும் பருத்திவீரனுக்கும் சில ஒற்றுமையை என்னால் உணரமுடிந்தது. இரண்டு படமுமே பொருந்தமில்லாத ஜோடிகளின் தோல்வியைத்தான் காட்டுகின்றன. முன்னது, திருமணமானபின் மணவாழ்க்கையின் தோல்வியென்றால், பின்னது காதலின் தோல்வி. முன்னதில், மனதிற்கு பிடிக்காத கணவனைவிட்டு விலகி தவறான உறவில் வீழும் மனைவியையும், பின்னதில், காதலைப் புரிந்துகொள்ளாத காதலன், தறிகெட்டு, முறைகெட்டுத் திரிவதையும் காட்டுகிறார்கள்.

சிவகுமாரின் கதாபாத்திரம், வெளிஉலகம் தெரியாத, கிடைத்ததை உண்டு உறங்கும் அப்பாவியை வெளிப்படுத்தும். கார்த்தியின் கதாபாத்திரமும் கிடைத்ததை அனுபவித்து ஒரு வரையரையின்றி காலத்தை கடத்தும் ஒருவனின் வாழ்க்கைதான். ஆனால் இவன் அப்பாவிக்கு நேர் எதிரான முரடன். இவனிடம் கள்ளங்கபடம் நிறைய உண்டு.

கார்த்திக்கு ஜோடியாக வரும் பிரியாமணி தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மேக்கப் இல்லாமல் முகத்தைக் கட்டியிருப்பதற்காகவே பாராட்டலாம். சரிக்குச்சரியாக தகப்பனோடு வாதம் செய்யும்போது நடிப்பில் எகிறுகிறார்!

மற்றபடி, ஜாதியைத் தோளில் சுமக்கும் பொன்வண்ணன் கதாபாத்திரமும், சித்தப்பாவாக வரும் சரவணனின் கதாபாத்திரமும், பல படங்களில் பார்த்ததுதான். இதில் குறிப்பிடும்படியான இன்னும் இருவர், அம்மாவாக வரும் பெண்ணின் பதைபதைப்பும், பொன்வண்ணனுக்கு ஆலோசனை சொல்லும் பொணந்திண்ணியின் நடிப்பும்.

பொணந்திண்ணி, பெயர்க்காரணமே வித்தியாசமாக உள்ளது. நானும்கூட எனது கிராமத்தில் இதுபோன்ற சொந்த பெயர் மறந்து, பட்டபெயர் மட்டுமே நிலைக்க வாழும் பலரைப் பார்த்திருக்கிறேன். பொணந்திண்ணி போன்ற ஆலோசனை சொல்லும் பெரிய மனிதர்களை எல்லா சமூகத்திலும் நாம் காணலாம். இவர்கள், தன்னால் வெல்லமுடியாத காரியத்தை, அடுத்தவரை உசுப்பேற்றி வெற்றிபெற முயற்சிக்கும் ரகம். பெரிய மனிதனாக காட்டிக்கொள்ளும் குள்ளநரிகள்!

மொத்தத்தில், இந்த படத்தில் கதை சொல்லியிருப்பதை விட, கிராமங்களில் இன்னமும் வாழும் சில மறக்கமுடியாத கதாபாத்திரங்களை கண்முண் நிறுத்தியிருப்பது இயக்குனரின் பார்வையைக் காட்டுகிறது.

கதையிலும் கூட வழக்கம்போல, தேவர் சமூகத்தையே கிராமமாகக் காட்டியிருந்தாலும், ப்ளாஷ்பேக்கில், தேவர் சமூகத்து வாலிபன், தனது சமுகத்தின் எதிர்ப்பைமீறி, உறவுகளை ஒதுக்கி, தன்னை முன்னுக்குக் கொண்டுவந்த குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற பெண்ணை மணப்பதாகக் காட்டியிருப்பது வித்தியாசமான முயற்சி.

பருத்திவீரனை ஹீரோ என்று போற்றாமல் போக்கிரித்தனமானவனாகத்தான் இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இப்போது வருகின்ற ஹீரோயிசத் திரைப்படங்களில் இதுபோன்ற போக்கிரிகளைத்தான் ஹீரோ என்று சொல்லி பஞ்ச் வசனங்களைப் பேசவைக்கிறார்கள்!!

Saturday, March 17, 2007

டாக்டர் ராமதாஸின் உணர்வுப்பூர்வமான பேட்டி!

இந்த வார ஆனந்த விகடன், குமுதம் இரண்டிலுமே டாக்டர் ராமதாசின் பேட்டி வந்திருந்தது. உண்மையிலேயே மிகவும் உணர்ச்சிகரமான பேட்டி.

"சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் 5000 ஏக்கர் விவசாய நிலத்தை அந்நிய நாட்டு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டு, அந்த பரப்பளவிற்குள் அவர்களின் ராஜ்ஜியம் மட்டுமே நடக்க வழிவகுப்பதை எடுத்துச் சொல்லியிருந்தார். விவசாயத்தை ஒழித்து, விவசாயிகளை ஒழித்து பொருளாதார மண்டலம் வருவதை எதிர்த்து களமிறங்கி போராடுவேன் என்று கூறியிருக்கிறார்.

பல்லாயிரக்கணக்கான வியாபாரிகளை நசுக்கி, கீரைக்கட்டு விற்கும் பெரியம்மாவின் வயிற்றிலடித்துவிட்டு, ரிலையன்ஸ் போன்ற திமிங்கலங்களிடம் சில்லறை வணிகத்தை கொடுப்பதை கடுமையாக எதிர்த்துள்ளார்."யார் சொன்னார் என்பதைப் பார்க்காமல், என்ன சொல்லியிருக்கிறார் என்று பார்த்தால் நாட்டுப்பற்றுள்ள அனைவருக்கும் அவரது பேட்டியில் வெளிப்படும் உண்மை புரியும்.

நம் நாட்டின் வளர்ச்சி, எதிர்கால திட்டம் அனைத்தையும் உலகமயமாக்கலுக்கு முன், உலகமயமாக்கலுக்கு பின் என பிரித்துப் பார்த்துதான் இனி நாம் மதிப்பிட வேன்டும்.
வெள்ளைக்காரன் கொள்ளையடித்துச் சென்று முழுதாக நூறு ஆண்டுகள்கூட ஆகவில்லை... அதற்குள் மீண்டும் அவர்களை அழைத்துவந்து நீங்கதான் எங்க நாட்டு பொருளாதாரத்தை சரி செய்யணும், உங்களுக்கு நிலமும் தர்றோம், நிலத்தடி நீரும் தர்றோம். தயவுசெய்து வாங்க... வாங்க... வாங்க... என்று ஒவ்வொரு மாநிலமும் போட்டிபோட்டு கூப்பிடத்தொடங்கி விட்டன.

"படிச்சவனை வேலை தர்றதா சொல்லி வளைச்சுப் போட்டுக்கோ... பெரிய மனுஷங்கள பங்காளியாக்கிக்கோ!" என்ற தத்துவத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு நூற்றுக்கணக்கான கம்பனிகள் இந்தியாவை நோக்கி படை நகர்த்தி வருகின்றன. நம்மவர்களும் தினமும் பூரணகும்ப மரியாதை தந்து இழுத்து வந்து கையெழுத்துப் போட்டு "இதோ பார்! எனது மாநிலத்திற்காக எங்கள் ஆட்சியில் இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் அந்நிய நாட்டு முதலீட்டைக் குவித்திருக்கிறோம்!" என்று மார்தட்டிக்கொள்கிறார்கள்!

குளிர்பான வியாபாரத்தைத் தொலைத்தோம்! துட்டு தந்து தண்ணீர் வாங்கப் பழகிக் கொண்டோம்! அடுத்து "மொத்த வியாபார"ங்களைத் தொலைத்தோம்! இப்போது சில்லரை வியாபாரத்தையும் தொலைத்துக்கொண்டு இருக்கிறோம்! இவை அனைத்தையும், நமது நம்பிக்கை நட்சத்திரங்களாக, காலங்காலமாக வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் எந்த கட்சியும் தட்டிக்கேட்காமல் கைதட்டி வரவேற்பதில்தான் முன்னின்றன. தமிழ்நாட்டு சிறுபான்மை கம்யூனிஸ்ட்டுகளும்கூட ஒன்றும் செய்வதறியாது நிற்கும் நிலையில் ராமதாசின் பேட்டி நம்பிக்கை தருவதாகவே இருக்கிறது.

மேற்கு வங்க அரசாங்கமே தனது போக்கை மாற்றிக்கொண்டு விவசாயத்தைப் புறக்கணிக்கும் இக்காலகட்டத்தில் தமிழக அரசியல் கட்சி ஒன்றிடமிருந்து அந்நிய முதலீட்டுக்கு எதிர்ப்பு வந்திருப்பது பாராட்டுக்குரியது!

அப்படியே கொக்ககோலா நிறுவனம் நம்நாட்டு நீர்வளத்தை சுரண்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்தால் நல்லது... இவ்விஷயத்தில் அன்புமணிக்கு மணிகட்ட ராமதாசால் தான் முடியும்!

Friday, March 16, 2007

அந்நியப்பட்ட பூமி!

ஊரில் எல்லாமே மாறிப்போச்சு!
முண்டியடிச்சு டிக்கெட் வாங்கின
தியேட்டருல
இப்போ
பத்து பேருக்காக படம் ஓடுது...
பேருக்காக படம் ஓடுது!

கந்து வட்டி புல்லட் மணி
ஹார்ட் அட்டாக்ல போயிட்டானாம்...
சந்தோசமா பேசிக்கிறாங்க!

கூடப் படிச்சவனுங்க எவனும்
இப்போ ஊருக்குள்ள இல்ல...
"கூட"ப் படிச்சதால
என்னைப் போலவே
ஏதோவொரு பட்டணத்தில்...
ஊருக்குள்ள ஒரே நண்பன்
பழனிக்கும் கல்யாணமாயிடுச்சு;
அடிக்கடி பார்க்க முடியல...

ஒரு காலத்துல
பசங்கள அலையவிட்ட கனகாவுக்கு
இப்போ ரெண்டு பசங்களாம்!
பழனி சொன்ன ஒரே
உருப்படியான தகவல்!

கிணற்று போரிங்
என்னோட சம்பளம்
எல்லாத்தியும் பேசினதுபோக
பஸ் ஸ்டாண்டு வரைக்கும்
அப்பாவும் நானும்
யோசிச்சி யோசிச்சி
இப்படிப் பேசியபடியே...

பஸ் ஸ்டாண்டு புதுசு;
நெறய பஸ்சு புதுசு;
பஸ்சுக்குள்ள
வடிவேலும் பார்த்திபனும்
வீடியோவுல கலாய்க்கிறாங்க!

எனக்கான பஸ்சும் வந்திடுச்சு
ஜன்னல் வழியே
அப்பாவைப் பார்க்கிறேன்...
எல்லாம் மாறிப்போன ஊரில்
அப்பாவின் கண்கள் மட்டும்
வழக்கம் போல...
என்னையே பார்த்தபடி...
பேருந்து மறையும் வரை!

மனசு என்னும் அதிசயம்!

திரும்பத் திரும்ப முயற்சிக்கிறேன்...
வறண்டு போன நாக்கு,
மருண்ட பார்வை,
இருண்டு போன முகம்
அனைத்தையும் கழற்றி
சிரிப்பினை அணிய
தொடர்ந்து முயற்சிக்கிறேன்...
இருக்கையில் நான் அமர்ந்தாலும்
அமராத மனசு
பழகாத பொதிமாடு போல
நிலைகொள்ளாமல்
இங்குமங்குமாய் அலைந்தபடி...
நேர்முகத்தேர்வு புதிதல்ல,
தேர்வாகாதுபோவதும் புதிதல்ல!
இருந்தும் புரியாதபுதிராய்
எனக்கான அழைப்பினை
எதிர்நோக்கும்வேளையிலே...
எதிர்வரிசையிலே
புதிதாக ஒரு பெண்முகம்...
பார்த்ததும் மனதில் பதிந்தது;
பொதிமாடு அடங்க...
என் முகத்திலும் புன்னகை!
தேர்வறைக்குள் நுழையுமுன்
என் மனசு வேண்டியது
"அவளுக்குமிங்கே வேலை கிடைக்கட்டும்!"

Thursday, March 15, 2007

கூவம் - திரைவிமர்சனம்

நாயகன் விஷால் நடித்து வெற்றிபெற்ற தாமிரபரணி படத்தை அடுத்து அவர் நடித்து வெளிவந்துள்ள படம் "கூவம்". தூத்துக்குடிக்கு பக்கத்துல இருக்குற ஒரு கிராமத்துல ஏழை விவசாயி விஜயகுமாருக்கு மகனா விஷாலைக் காட்டுறாங்க. கிராமத்துல பிழைக்க முடியாமல் வேலை தேடி சென்னைக்கு வர்றார் விஷால். அங்கயும் நிறைய கம்பெனிகளில் வேலைகேட்டு கிடைக்காமல் நொந்துபோய் கூவம் கரையோரமா நடந்து வர்றார். அப்பொ கால்தடுக்கி கூவத்துக்குள்ள விழுந்த விஷாலை தன்னோட துப்பட்டாவைப்போட்டுக் கைகொடுத்து தூக்கி காப்பாத்துறாங்க ரீமாசென்!

கூவம் கரையோரமா காதல் மலர சுவிட்சர்லாந்துல ஒரு டூயட்!

கூவம் இவ்ளோ நாற்றம் அடிப்பதை அனுபவத்தால் உணர்ந்த ஹீரோ விஷால் இதைப் பற்றிய விவரங்களை ரீமாசென்கிட்ட கேட்கிறார். நல்ல ஆறாக ஓடிக்கிட்டிருந்த கூவத்தை தொழிற்சாலைக் கழிவுகளால அசுத்தமாக்கிய தொழிலதிபர்களைப் பற்றி ரீமாசென் எடுத்துச் சொல்றாங்க. அந்த தொழிலதிபர்களை எப்படி பழி வாங்கறார்ங்கறது தான் மீதி கதை!

இந்த படத்துல ரீமாசென் கொஞ்சம் குண்டா இருக்கறதப் பார்த்தால் அவங்கள "பீமா"சென் அப்படீன்னு சொல்லலாம்னு தோணுது!

விஷால் கூவத்துல மீன்பிடிக்கறதுக்காக தூண்டில் போட்டு மணிக்கணக்கா உட்கார்ந்திருக்கறது நம்மை சிரிக்கவைத்தால், அதைப்பார்த்த ரீமாசென் தூண்டில் போட பெரிய ஆறா காட்டுறேன்னு சொல்லி மெரினா பீச்சுக்கு கூட்டிட்டு போய் தூண்டில் போடவைப்பது மேலும் சிரிக்கவைத்து நம் வயிற்றைப் புண்ணாக்குது!

நாற்றமெடுக்கும் தோல் பதனிடும் தொழிற்சாலையை சென்னைக்கு மத்தியில் மவுண்ட்ரோட்டுக்கு அருகிலேயே பல ஆண்டுகளாக அரசாங்கத்திற்குத் தெரியாமல் வில்லன் பிரகாஷ்ராஜ் நடத்தி வருவதும், அதன் கழிவு நீரை அண்டர்கிரவுண்ட் பாதை மூலமாக கூவத்தில் கலக்க வைப்பதும் புதுமையான வில்லத்தனம்! விஷால் அதனை தனது மூக்கினாலேயே மோப்பம் பிடித்து கண்டுபிடித்து ஆலையை இழுத்துமூட வைப்பது த்ரில்லிங்!

இறுதிக் காட்சியில் அனைத்து தொழிலதிபர்களையும் ஒட்டுமொத்தமாக பிடித்துவந்து கூவத்திலுள்ள நேப்பியர் பாலத்திற்கடியில் ஒருநாள் முழுக்க சிறைவைத்து கூவத்தின் நிலையைப் புரியவைத்து திருத்துவது பரபரப்பான கிளைமாக்ஸ்!

கடைசியில் மீண்டும் சுத்தமான கூவத்தில், நாயகன் விஷால் தூண்டில் போட்டு மீன்பிடிப்பதோடு படம் முடிகிறது! கூவம் - வாசம்!

................................................................................................................................................................................................விஜய டி.ஆர். நடித்து இயக்கிய "கீரைச்சாமி" விமர்சனம் விரைவில்...

Monday, March 12, 2007

மெளனம்

கூச்சலான போர்க்களத்தில்
தலையை கூட்டுக்குள்ளிழுக்கும்
இயலாமையாய் நாவின்
கூர் மழுக்கிய மெளனம்...
பேசாமல் பேசி,
அசையாமல் அணைத்து,
உள்ளச்சூட்டினில்
பொறுமையை அடைகாக்கும்;
என்றாவது
கூடுகள் உடைய
அக்கினிக்குஞ்சுகள் வெளியேறும்;
அனலில்
கூச்சல்கள் அலறிப் பொசுங்கும்!

Wednesday, February 28, 2007

3 மாநில தேர்தல் முடிவுகளும் - தமிழக அரசியல் ஜோதிடமும்

பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு நெருக்கடி இல்லையென்று சொல்கிறார் மன்மோகன்சிங். அவரோட கஷ்டம் அவருக்கு!

இந்த தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துமா? கண்டிப்பாக.

தமிழக பாஜக - 50% மகிழ்ச்சி: குருபார்வை மீண்டும் கிடைக்க வாய்ப்பிருக்குது! அதிமுகவுடன் தேர்தல் கூட்டணிக்கு தயார் என்று தமிழக பாஜக அறிவித்துள்ள நிலையில் வெளிவந்துள்ள முடிவு, இன்னமும் இந்தியாவில் பாஜகதான் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதுவே தமிழ்நாட்டில் அனாதையாக நிற்கும் பாஜகவை அணிசேர வைக்க உதவுமென்று நம்பலாம்! நிச்சயமா நம்பலாம்!

அதிமுக - 50% மகிழ்ச்சி: மேற்கூறிய காரணங்கள் தவிர வைகோ என்ற பியூஸ் போன பல்பை நம்புவதைவிட பாஜக போன்ற அரிக்கேன் விளக்குகளை நம்பலாம் என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்திருப்பார். 60ஆவது வயதை நெருங்கும் காலத்தில் இந்திய அளவில் அரசியலில் நுழைந்தால் பிரதமராக மாறலாம் என்ற எண்ணமும் தோன்றலாம்! நிச்சயமா தோன்றலாம்! அதோட தொல்லை பண்ற ஆந்திர காங்கிரஸ் அரசையும் கொஞ்சம் அதட்டிப் பார்க்கலாம்!

திமுக - 50% மகிழ்ச்சி: சனியோட உக்கிரம் குறைய வாய்ப்பிருக்குது! காமராஜர் காலத்துக்குப் பிறகு கொஞ்சம்கொஞ்சமாக வட மாநிலத் தலைவர்களிடம் மதிப்பிழந்து வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு கூட்டணி மந்திரிசபை கனவு சில காலமாக அடிக்கடி வந்து திமுகவை இம்சை பண்ணுகிறது. பத்திரிக்கையில் பேட்டி அளிக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கூட்டணி மந்திரிசபை பற்றி பேசி சந்தோசப்பட்டுக்கொள்ளும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இனி மறந்தும் அதுபற்றி வாய்திறந்து பேசமாட்டார்கள். இவர்கள் பேச, சோனியாவிடம் தயாநிதிமாறன் போட்டுக்குடுக்க யார் டோஸ் வாங்குவது?!

தமிழக காங்கிரஸ் - 50% வருத்தம்: மேற்கூறிய காரணங்கள் தான்! சனி வழக்கம்போல உச்சத்துலயே இருக்குது!

Saturday, February 24, 2007

தலைக்கவசம் - மூளைக்கு மரியாதை!

குழியினுள் புதைந்தும்
மேடாக உயர்ந்தும்
ஓடாகத் தேய்ந்தும்
இலைமறைகாயாக
மாநகரச் சாலைகள்!

திரும்பிய திசையெல்லாம்
கண்களைக் கவர்ந்து
கவனத்தைச் சிதறடிக்கும்
கவர்ச்சி விளம்பரங்களும்
விளம்பர நடிகைகளும்
வழிநெடுக... வானுயர பேனர்களில்!


அலுவலக அவசரத்தில்
பறந்து வருவதும்
குறுக்கே புகுந்து வருவதும்
சிக்னலில் சிக்கி வருவதும்...
குழம்பிய குட்டையாய்
சாலைப் பாதுகாப்பு!

சாலை விதிகள்
நமக்குத் தெரியும்
எதிரே வருபவருக்கு?
மோதினால்தான் தெரியும்...
தெரியாதென்பது!

அன்று
போருக்கு மட்டுமே தலைக்கவசம்
மற்ற நாளெல்லாம்
பேருக்கு... அலங்காரமாய்!
இன்றோ
சாலைப்பயணமே
போருக்குச் சமம்!
நேருக்கு நேர்,
கெரில்ல யுத்தம்,
விழுப்புண்
அனைத்துமே உண்டு...
கப்பமும் கட்டலாம்!

இன்னுமென்ன தயக்கம்?
தலைக்கவசமணிவதே உன்னதம்!
இது சுமையல்ல...
மூளைக்கு மரியாதை!

Friday, February 23, 2007

உரத்த சிந்தனை!

ஆத்தா குடுத்த ஒத்த ரூவா
ராட்டினம் சுத்தயில தொலஞ்சுடுச்சு
அன்று
தொலஞ்சது ஒரு உண்மை!
இன்னமும்
தொலைக்கப்படும் உண்மைகள்
வயதுக்கேற்ப வளர்ந்தபடி...
ராட்டினம் சுத்தியது தவறா?
ஒத்த ரூவா தொலச்சது தவறா?
உதைக்குப் பயந்துஉண்மை தொலச்சது தவறா?
குறுக்கிட்டது பெண்குரல்;
"சார், சிதம்பரம் லைன்ல இருக்கார்"
"நான் இல்லைன்னு சொல்லு"
தொடர்ந்தது உரத்த சிந்தனை!

Thursday, February 22, 2007

"மாங்கா மன்னன்" நான்காம் மகேந்திரவர்மன்

"மன்னர் இன்றிரவு மாறுவேடத்தில் இந்த தெருவிற்குதான் நகர்வலம் வரப் போகிறார்னு எப்படி அடித்து சொல்கிறாய்?"

"அவசர அவசரமாக தெருவை சுத்தப்படுத்தி புதுசா சாலைகள் போடுறாங்க பார்!"
.......................................................
"மன்னர் சிம்மாசனத்தில் அமராமல் அரசவையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருக்கிறாரே! ஏதேனும் வியாதியோ?!"

"மண்ணாங்கட்டி! "F TV" பார்த்து பார்த்து இப்படிக் கெட்டுப்போய் விட்டார்!"
.......................................................
"புலி வேட்டையாடக் கிளம்பிய மன்னர் ஏன் பாதியிலேயே திரும்பி விட்டார்?"

"போகும் வழியில் பூனை ஒன்று குறுக்கே வந்துவிட்டதாம்!"
.......................................................

Tuesday, February 20, 2007

பசுமை

அகண்டபூமியின் பரந்த புல்வெளியில்
முகம்பார்த்து
என் கருவிழியில் தீட்டிய பசுமையை
திட்டுத்திட்டாக அழித்தபடி
இறங்கும் மழைத்துளிகள்!

விஜய டி ராஜேந்தர் Vs நயந்தாரா Fun @ Fun only!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்செயலாக சன் டிவியில் அரட்டை அரங்கம் பார்க்க நேர்ந்தது. விசு இருந்தவரை தாய்குலத்தைக் கட்டிப்போட்டு கண்கலங்க வைத்துக்கொண்டிருந்த அந்நிகழ்ச்சியில், விசு கழன்றுகொண்ட பிறகு பெருத்த தொய்வு. சாலமன் பாப்பையாவினாலும் நிலைமையை சரிக்கட்டமுடியவில்லை போலும். திடீரென விஜய டி ராஜேந்தரை அங்கு இழுத்து விட்டார்கள்! (விஜய டி ராஜேந்தர் இப்போது எந்தப்பக்கம் என்று சரியாகக் கணித்துச் சொல்பவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம்!)

இவரும் அடுக்குமொழியில் பேசுவார் என அனைவரையும்போல ஆவலோடு எதிர்பார்த்து பார்த்துக்கொண்டு இருந்தால், சிறிது நேரத்தில் ஜீன்ஸ் பேன்ட்டினுள் பதுக்கிவைத்திருந்த மிக நீளமான கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத் துடைக்கத் தொடங்கி விட்டார்! விசுவுக்கு அக்மார்க் அண்ணன்!

இடையிடையே பக்திச் சொற்பொழிவு! இவரால் சன்டிவிக்கு வரப்போகுது அழிவு!

என் மனதில்பட்ட ஒரு சின்ன யோசனை:
தனக்கு சிம்பு தருகின்ற தொல்லைகளைப் பற்றி விஜய டி ராஜேந்தரின் அரட்டை அரங்கத்தில், நயந்தாரா கண்ணீர் விட்டுக் கதறிப்பேசி, விஜய டிஆரைரையும் அழவைத்து, அதற்குத் தீர்வு காணலாம் அல்லவா?

Saturday, February 17, 2007

தீர்ப்பெழுதும் நேரம்...

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து
தலைவனின் மனதைப் பிடிக்கும்
போட்டா போட்டி...
குறுக்கே விழுந்த மனிதனைக் கடித்து
மலர்களைக் கருக்கி
அடங்காமல் ஓடிச்சு பதவிப் பசி...
தப்பிக்க விட்டது அரசியல்
போராடிப்பிடித்து இழுக்குது சுத்தியல்
பிடி இறுகுவதும் நழுவுவதுமாய்...
மக்கள் முழிக்கும்முன்னே
பட்டிமன்றம் அரசியல் மேடையிலே
தவறு தொண்டன் மேலா?
தலைவன் மேலா?
யோசித்தது போதும் மக்களே!
இது
நீங்கள் தீர்ப்பெழுதும் நேரம்...
தூக்கிலிடுங்கள் அடிவருடி அரசியலை!

Friday, February 16, 2007

"மாங்கா மன்னன்" நான்காம் மகேந்திரவர்மன்

1. "மன்னர் பயங்கர "மூட்-அவுட்"ல் இருக்கிறார்!"
"என்ன காரணம்?"

"அந்தப்புரத்தில் யாரோ ரகசிய கேமரா வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாம்!"


2. "மன்னருக்கு பயங்கர பணக்கஷ்டம்"

"அதற்காக "கொக்ககோலா" விளம்பரப்படத்தில் குத்தாட்டம் போட்டு நடித்திருப்பது டூ மச்!


3. "சபையில் இன்று ஏன் எல்லோரும் ஒருவித பதட்டத்தோடு அமர்ந்திருக்கிறார்கள்?"

"மன்னருக்கு "வீக் எண்ட்" சோமபான மப்பு இன்னமும் குறையவில்லையாம்! அவர் திடீரென "உவ்வே" பண்ண வாய்ப்பிருக்கிறதாம்!"

Thursday, February 15, 2007

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் தனது மைனாரிட்டி நிலையை உணர்ந்து பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக, சாதுர்யமாக கையாண்டு வருகிறது. பல்வேறு இலவச திட்டங்களுக்காக பணத்தை செலவழித்து வந்தாலும் நிதிநிலையை மறைமுகமாக சரிக்கட்டி வருகிறது. அதில் ஒன்று தான் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை. கடந்த சில ஆண்டுகளாக பேருந்து கட்டண உயர்வு இல்லாமல் இத்துறை செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையை "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்ற விதத்தில் சரிக்கட்டுகிறது. ஆம், புதிதாக அறிமுகம் செய்துவைத்துள்ள பேருந்துகளை நினைத்து நாம் ஒருபக்கம் பெருமையாக நினைத்தாலும், இந்த பேருந்துகள் அனைத்துமே "மஞ்சள் பலகை", "பச்சை பலகை", "மஞ்சள் நிற சிறப்பு பேருந்து" "நீல நிற சிறப்பு பேருந்து" என்ற அதிக கட்டணம் வசூலிக்கும் வகையை சேர்ந்த பேருந்துகளாகவே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்!

இந்நேரம் பழைய ஜெயலலிதாவாக இருந்தால் பல பக்கங்களுக்கு காட்டமான அறிக்கைகள் விட்டு பந்த் போராட்டம், ஆர்ப்பாட்டம் என இறங்கி இருப்பார். பாவம், விஜயகாந்த் வருகையால் "கால்குலேஷன்" போட்டுப்போட்டுப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறார்! விஜயகாந்தோ தனது மனைவி பெயரில் உள்ள மண்டபத்தை காப்பாற்றி தன் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்கும் போராட்டத்திலேயே குறியாக இருக்கிறார். இதுபோதாதா கலைஞருக்கு! மனிதர் மிகவும் தெம்பாக இருக்கிறார்!

மக்கள்தான் உடல் சொகுசாக சீட்டில் குந்தினாலும், மனதால் குமுறிக்கொண்டு பயணம் செல்கிறார்கள்!

Wednesday, February 14, 2007

இப்படிக்குக் காதல்!

உன் உதடும் என் உதடும்
பேசாத தருணங்களில்
பேசட்டும் நம் உதடுகள்!


நிறையை மட்டும் பேசுவதல்ல
நிறைய பேசுவதே
காதல்!


தலைக்கவசம் உனக்கு அவசியம்
பலரையும்
விபத்திலிருந்து காப்பாற்றும்!


உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
மறந்து விடுகின்றேன்
இமைப்பதற்கு!


இது உனது கவிதை
உன்னைப் பார்த்துப் பார்த்து
எழுதியது!

Tuesday, February 13, 2007

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூக சேவை!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக வெளிநாட்டுக் கலாச்சாரமான "காதலர் தினத்தை" எதிர்த்து, காதலர் தினத்தன்று சென்னை நகர வீதிகளில் ஜோடியாக திரியும் காதலர்களைப் பிடித்து கட்டாயத் திருமணம் நடத்தி வைக்கும் சமூக சேவை நடக்க இருக்கிறதாம்! அவர்களின் விழிப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அவர்களின் நன்மை கருதி கூடுதலாக சில யோசனைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.

1. ஜோடிகளைப் பிடித்து கட்டாய திருமணம் செய்யும் முன்பு அவர்கள் காதலர்கள் தானா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அண்ணன், தங்கைகூட சாலையில் சேர்ந்து செல்லக்கூடும், அப்புறம் உங்களுக்கு தர்ம அடி விழுவது நிச்சயம்!

2. ஜோடி மேஜர் தானா என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பால்ய விவாகம் செய்து வைத்த குற்றத்திற்கு ஆளாகக்கூடும்! ஜெயிலில் கம்பி எண்ண வேண்டும்!

3. ஜோடிகளின் பெற்றோர் எந்த கட்சி என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சொந்த கட்சிக்குள்ளேயே அடிதடி நடக்கவும் வாய்ப்புண்டு!

4. உங்கள் சமூக சேவையை இதோடு நிறுத்தாமல் தொடர வேண்டும். உதாரணமாக, தமிழ் மக்கள் வீட்டிற்குள்ளேயே அமைதியாக கும்பிட்டு, கொண்டாடி வந்த பிள்ளையார் சதுர்த்தி திருநாளை வடநாட்டு கலாச்சாரதோடு குழப்பி ஆயிரக்கணக்கில் பிரம்மாண்டமான பிள்ளையார்களைச் செய்து, ஊர்வலம் நடத்தி மக்களின் நிம்மதியையும், பிள்ளையாரின் நன்மதிப்பையும் கெடுக்கும் சக்திகளை ஒடுக்க முன்வர வேண்டும்!

5. தமிழ் மக்களின் மஞ்சள் நீரூற்றும் பொங்கல் விழாக்களை அழித்து, வண்ணக்கலவைகளை ஊற்றும் வட நாட்டு ஹோலிப்பண்டிகைகளை வளர்க்கும் சக்திகளை ஒடுக்க வேண்டும்!

6. தமிழ் நாட்டுக் கடவுள் அல்லாத ராமருக்காக, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி செங்கற்களை வாங்கிச் சென்ற கூட்டத்தைக் கண்டுபிடித்து முருகப்பெருமான் சன்னிதியில் நிறுத்த வேண்டும்! இப்போதைக்கு இது போதும்!

Sunday, February 11, 2007

பேய்க்கு டீக்குடிக்க காசு!

நேற்று தமிழக அரசின் சுற்றுலா பொருட்காட்சிக்குக் குடும்பத்தோடு சென்றிருந்தேன்.வழக்கம்போல இருமடங்கு விலையேற்றத்துடன் சில்லரை விற்பனை களைகட்டியிருந்தது.

அரசுத்துறை சார்ந்த அரங்குகளில் பெரும்பாலும் சலிப்பூட்டுவதுபோல பெரும்பாலும் புகைப்படக் கண்காட்சியாகவே இருந்தன. சுகாதாரத்துறை, துறைமுகக்கழகம் சார்ந்த அரங்குகளில் மட்டும் ஏதோ கல்லூரி அறிவியல் கண்காட்சியில் நுழைந்ததைப்போல சற்று வித்தியாசத்தை உணர முடிந்தது. ஓரளவு பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன. மக்களிடமும் கொஞ்சம் ஆர்வம் தெரிந்தது.

டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, விதவிதமான ராட்டினங்கள் தவிர கிங்காங் உலகம், வவ்வால் உலகம், அதிசய மிருகங்கள் உலகம் என சிறுவர்களைக் கவரும் சில புதிய அரங்குகளும் இருந்தன. வவ்வால் உலகத்தினுள் நாம் நுழைந்ததும் மெல்லிய இருளுக்குள் வளைத்துவளைத்து பாதை அமைத்து, ஆங்காங்கே தொங்கும் வவ்வால்களும், திடீரென நம் வழியில் குறுக்கிடும் பேய் முகமூடி போட்ட சிறுவர்களையும் வைத்து பயமுறுத்தப் பார்க்கிறார்கள். இவர்களில் ஒரு பேய் எங்களைப் பயமுறுத்திவிட்டு மறுநிமிடமே முகமூடியை கழற்றிவிட்டு டீக்குடிக்க காசு கேட்டது. நானும் "பேய்க்கு டீக்குடிக்க காசு கொடுத்த" அனுபவத்தோடு அரங்கை விட்டு வெளியேறினேன்!

காதலை நம்பாதே!

காதலை நம்பாதே!
காதலியையும் நம்பாதே!
காதல் ஒரு பித்தலாட்டம்!
ஒரு ஏமாற்று வேலை!
முட்டாள்தனமானது!
வெட்டித்தனமானது!
.....
.....
என்னிடத்திலே
வத்தி வைக்கிறது...
நீ பறிக்க மறந்த
அந்த ஒற்றை ரோஜா!

தேடல்

நீ
கை நீட்டிய திசையில்
தொலைதூரத்தில்
தொடுவானத்திலே
நீண்டு பரந்த மேகக்கூட்டம்;
ஏதோ ஒரு மேகச்சிதறலில்
உன் மனதில் பட்ட உருவத்தை
என் மனதில் பதிய வைக்க
நெடுநேரமாய் போராடுகிறாய்!
புரிந்தும் புரியாமல் நான்...
விடா முயற்சியில் நீ...
தேடல் இன்னமும் முடியாமல்...
என்னருகே நீயிருப்பதால்!

Friday, February 9, 2007

அழியாத காதல்

உனக்குத் திருமணமாகி இருக்கலாம்,
குழந்தைகள் பிறந்திருக்கலாம்,
உன் குழந்தைக்கும்கூட
திருமணமாகி இருக்கலாம்...
என் அழியாத நினைவுகளின்
இனியதொரு பக்கத்தில்
உன்னிடம் சொல்லாத காதல்
இன்னமும் கிழியாமல்!

''நறுக்'' கவிதைகள்!

எழுதுவதற்காக வாங்கிய பேனா
முதல் முறை மட்டும்
கிறுக்கப்படும்!


சொல்லாமல் வந்தது மழை
நினைவுகளில்
குடை சுமக்கும் மனிதர்கள்!

தொலைந்த காதல்

நாம்
தினம்தினம்
சந்திக்கும் பூங்காவில்
இப்போதெல்லாம்
பறவைகள் கீச்சொலி
குறைந்து விட்டதாம்!

பூக்காரப்பாட்டி,
சுண்டல்பையன்,
நம்மை நாள்தோறும் வாழ்த்தும்
பிச்சைக்காரனிடமும்
நானே சொல்லிக்கொள்கிறேன்...
கொடுக்கல் வாங்கல்
முடிந்ததென்று!

உன் வரவினை
எதிர்பார்த்தே வாழ்ந்தவன்
இனி
வரவும் இல்லை...
செலவும் இல்லை!

இனி
நிறைய நேரமிருக்கும்
உன்னால் மறந்துபோன
என்னை நினைத்துக்கொள்ள
கண்கள் நனைத்துக்கொள்ள!

நீ சொல்லியோ
நான் சொல்லியோ
ஒன்றும் ஆகப்போவதில்லை
கிடக்கட்டும்
என்னுள்
உன் நினைவுகள் மட்டுமேனும்!

Thursday, February 8, 2007

உலக காதலர்களே!

இது விளம்பர யுகம். வியாபார உலகம். வியாபாரத்தைப் பெருக்க புதுமையான விளம்பரங்களை, உத்திகளை கையாள வேண்டிய கட்டாயத்தில்தான் பல நிறுவனங்கள் உள்ளன.

வியாபாரம் குறைவாக உள்ள காலங்களில் மக்களை இழுக்க பலவிதமான "மேளா"க்களை நடத்துகிறார்கள். மேலும், வருடத்தின் 365 நாட்களுக்கும் ஏதேனும் ஒரு விஷேசத்தைக் கண்டுபிடித்து "அன்னையர் தினம்" முதல் "உலக வயிறு குலுங்க சிரிப்போர் தினம்" வரை விதவிதமான செயற்கை வரலாறுகளை உண்டாக்கி, கொண்டாட்டம் என்ற பெயரில் பணம் பறிக்கும் வேலையை தொடங்கி உள்ளன!

இதில் குறிப்பிடத்தக்க ஒருநாள் தான் காதலர் தினம்! இந்த காதலர் தினத்தை முன்னிட்டு "பணக்கார"க் காதலர்களை தங்கள் ஓட்டலுக்கு வரவழைக்க விதவிதமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மண்டையைப் பிய்த்துக்கொள்வது வழக்கம்.

இம்முறை அவர்களின் குழப்பத்தைத் தீர்க்க என்னாலான யோசனைகளை இப்பகுதியில் கூறுகின்றேன். இலவசமாகத் தான்!

KISSAAN'2007

Special Quest: Jennifer Lopaz

Discothae with Contest: share kisses with ur lovely heart... One pair will be selected as "Pair of the kissaan"

They will get lot of gifts with three days jolly trip to Andamaan Island!

'Lip'erty' 07

(By numerology 'masala' converted as 'massaalaa'!)

Special Quest: Ricky Martin

Discothae with Contest: Slip & Stick Ur lovely lips on' Valentine Wall'. Lovely lips will be selected as "lips. Liperty"

Lots of fashion gifts & one day dating with "Ricky Martin"


Hot Night Massaalaa' 07

Special Quest: Shakeeraa

Hottest Pajans: 'cheenaa thaanaa' Ragasiyaa

Dance! Dance! Dance! with our guests! Anybody can pair with them...

உங்கள் யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, February 7, 2007

சமூக சேவை

பார்வையற்ற பெரியவரை
சாலைகடத்தி விட்டதை
பலரும் பார்த்திருப்பார்கள்...
முகம் முழுக்க
சமூக சேவகனென்ற முத்திரை...
மனதுள் பறந்தபடி நடக்கையில்
'சுருக்'கென்று காலில் தைத்தது
முள்!

Tuesday, February 6, 2007

இந்த தாகம் பெருசு!

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நமது இந்தியா பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தது. ஊருக்கு ஒரு ராஜா, பேருக்கு ஒரு ராஜா என ராஜாக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதனால் வெள்ளைக்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நாம் எளிதில் பலியாகி நமது அரசாளும் உரிமையை வெள்ளையர்களிடம் இழந்தோம். சுதந்திரம் பெற்று ஆகிவிட்டது 60 ஆண்டுகள்.. இன்னமும் நமது உள்நாட்டுக் குழப்பங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. வட இந்திய மக்களை ஒன்றுக்கும் உதவாத மதவாதம் ஆட்டுவிக்கிறது என்றால், தென்னாட்டு மக்களை வாழ்வின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனை ஆட்டுவிக்கிறது! கொக்கோகோலா, பெப்சி போன்ற அமெரிக்க கம்பெனிகள் இந்திய வயல்வெளிகளில் எலி போல துளையிட்டு நம் நீர்வளங்களை சுரண்டும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் இத்தருணத்தில் நமக்குள்ளே நாமே அடித்துக்கொள்கிறோமே, இது கொடுமை அல்லவா? ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடி அமெரிக்காவுக்கு அல்லவா கொண்டாட்டமாக இருக்கும்? பிளாச்சிமடாவும், கங்கைகொண்டானும் நமக்கு வெவ்வேறு மாநிலமாக இருக்கலாம்... அமெரிக்கக் கம்பெனிக்கு அப்படியில்லை. நம் எல்லைகளை இணைக்கும் ஆறுகளே நம்முள் பிளவுகளை வளர்க்கும் சூழ்நிலை தற்போது நிலவுகிறது. குறிப்பாக காவிரிப் பிரச்சனையில் நடுவர் மன்றம் தீர்ப்பு சொன்னபிறகு கர்நாடகத்தில் வெடித்துள்ள கலவரம் மிகவும் வருந்தத்தக்கதாகும். இப்பிரச்சனையில் தொடர்புடைய நான்கு மாநிலங்களுமே கேட்ட அளவினைவிட குறைவான அளவுதான் நீரினைப் பெறவுள்ளன. இதில் பலமுறை மன்றாடி நீரினைப் பெற்றுவந்த தமிழகம், கிடைத்ததே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது. ஆனால் கர்நாடகமும் கேரளாவும் இதனை விடுவதாக இல்லை. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மை, அத்தியாவசியப்பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் என பல்வேறு குழப்பத்தில் தென்னிந்தியா தடுமாற, கையாலாகாத மத்திய அரசாங்கம் பஞ்சாப் தேர்தல்களத்தில் மும்முரமாக இருக்கிறது! தேர்தல் முடியவும் தென்னக மக்களைத்தேடி வருவார்கள் வரிசையாக! மாநிலங்களுக்கு இடைப்பட்ட பிரச்சனைகளில் தேசியக்கட்சிகள் தெளிவில்லாமல், உறுதியில்லாமல் இருப்பது நம்நாட்டு அரசியலின் சாபக்கேடு! வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் வாசகம். இதற்கு அர்த்தம் வேற்றுமை பாராட்டுவதில் ஒற்றுமை என்பதுதானா? சகோதர யுத்தம் தவிர்ப்போம். தீர்ப்பினை ஏற்றுக்கொள்வோம். நம் எதிரி அமெரிக்க கம்பெனிகள்தான் என்பதை உணர்வோம். தணியட்டும் நம் தண்ணீர் தாகம்... பெருகட்டும் எதிரிகளை விரட்டும் தாகம்... ஆம், இந்த தாகம் தான் பெருசு!

Monday, February 5, 2007

கவுண்டமணியும் நகைச்சுவையும்

நேற்று கேபிள் டிவியில் கவுண்டமணி நகைச்சுவை தொகுப்பினைக் காண நேர்ந்தது.அதில் ஒரு காட்சியில் சொந்தமாக கடை நடத்தும் சவரத் தொழிலாளியாக கவுண்டமணி நடித்திருப்பார். தங்கள் அலுவலகக் குழப்பங்களைப்பற்றி பேசிக்கொள்ளும் இருவர், இந்த வேலை பார்ப்பதற்குப் பதில் பார்பர் வேலைக்குப் போகலாம் என்று சலிப்புடன் கூறுவார்கள். சவரம் செய்தபடி இந்த பேச்சுக்களை கவனிக்கும் கவுண்டமணி, உடனே அவனைப்பார்த்து "சவரம் செய்யத் தெரியுமா என்று கெட்கிறார். அவனோ தெரியாது எனச் சொன்னதும், "பிறகு எதற்காக எங்கள் தொழிலைப் பற்றி கேவலமாக பேசுகிறாய்? நாங்க உன்னோட தொழிலைப் பற்றி எதாவது கேவலமா பேசுறோமா? இந்தத் தொழிலை பார்க்கறதுக்கு பதிலா ஒரு ஆபீசர் ஆகலாம், டாக்டர் ஆகலாம்னு சொல்றோமா? என கேள்வி கேட்டு அவர்களையும் சிந்திக்க வைத்து பார்ப்பவர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறார். கவுண்டமணிய் என்றதும் செந்திலை உதைப்பதும், கோவை சரளா போன்ற மனைவியாக நடிக்கும் பெண்களிடம் பம்முவதும் மட்டுமே பலருக்கும் தெரியும். நகைச்சுவை உலகத்தில் சில நடிகர்கள் ப்ரேமில் வந்து நின்றாலே மக்கள் சிரிக்கத் தொடங்குவார்கள். அவர்களில் நாகேஷ், சந்திரபாபுவிற்கு அடுத்து கவுண்டமணியை சொல்லலாம். தற்போது வடிவேலு அந்த வரிசையில் வருகிறார். கோவில் பூசாரி வேடம் முதலாக சுடுகாட்டில் வெட்டியான் வேலை வரை அத்தனை கதாபாத்திரங்களையும் ஏற்று அதிலும் தனது எகத்தாளமான நகைச்சுவையை வெளிப்படுதியதாலேயே இன்றும் அடித்தட்டு மக்களால் கவுண்டமணி மிகவும் ரசிக்கப்படும் நடிகராக வலம் வருகிறார். கீரோயிசம் தோற்றுப்போன பல நாயகர்கள் கவுண்டமணியை நம்பி திரையுலகில் காலம் கடத்திய வரலாறும் உண்டு. இருந்தும் இன்றுவரை மேடை ஏறி யாரையும் துதி பாடாமலும், பேட்டி என்ற பெயரில் யாரையும் சீண்டிப் பார்க்காமலும், வீணான கிசுகிசு வம்புகளில் சிக்காமலும் இருப்பது இவரின் மதிப்பைக் காட்டுகிறது... கூட்டுகிறது.முக்கியமாக ஒன்றை சொல்வதென்றால் இதுவரை எந்த கட்சியையும் சாராமல், தனது ஜாதியையும் முன்னிருத்தாமல் இருப்பதை இவரது திரையுலக சாதனை என்றே சொல்லலாம்! மிதி வாங்க பல செந்தில்கள் வந்தாலும் உதை கொடுக்கும் கவுண்டமணியின் இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். "பொறந்த வீடா? புகுந்த வீடா?" படத்தில் நடித்தது போல, குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் இனிவரும் படங்களில் நடித்து டி.எஸ். பாலையா விட்டுச்சென்ற இடத்தையும் கவுண்டமணி நிரப்ப வேண்டும்.

Friday, February 2, 2007

கவிதை

பேருந்துப் பயணத்தில்
மயிர்க்கற்றைகள்
மூச்சுத் திணரும் நிமிடங்களில்
என்னோடு நசுங்கிப்
பிரசவித்தது இக்கவிதை!

சிந்தனை

நாட்டைப் பற்றிய சிந்தனையுடன்
நாள்முழுக்க
டீக்கடை பெஞ்சிலேயே
தவம் கிடந்தாராம் என் தாத்தா
அவரைப்போல எனக்கு
அதிகமாய் சிந்திக்க நேரமில்லை...
சிக்னல் விழுந்து விட்டது.

Thursday, February 1, 2007

உதிர்ந்த மயிலிறகு...

உதிர்ந்த மயிலிறகு
பூஜையறையில்
முருகபெருமான் படத்திலே;
பிய்ந்த சில கற்றைகள்
என் குழந்தையின்
நோட்டுப் புத்தகத்தினுள்;
மயிற்பீலியால்
நாட்டு வைத்தியம் பார்த்த
என் பாட்டி

Tuesday, January 30, 2007

வருமானவரி சோதனையும், ஜெயலலிதாவும்!

அரசியல் வரலாற்றில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தல், அடாவடியாக அடுத்தவர் நிலஙளை அபகரித்தல் உள்பட பல்வேறு பிரச்சனைகளால் பல்வேறு வழக்குகளை சந்தித்ததில் அகில இந்திய அளவில் பிரபலமான அரசியல்வாதி செல்வி ஜெயலலிதா அம்மையார் ஆவார்.

இது ஒருபக்கம் அவரது செல்வாக்கையும், வாக்கையும் சரித்தது என்றாலும், தனி ஒரு பெண்ணாக துணிந்து நின்று பல்வேறு வழக்குகளையும் சமாளித்து வெற்றி பெற்றவர் என்று அவரது பரிவாரங்களாலும், கூட்டணி தர்மர்களாலும் மேடைகளில் புகழப்பட்டும் வந்தது!

இந்நிலையில் சமீபத்தில் நடந்த விஜயகாந்த் வீட்டு வருமானவரி சோதனை பெரும்பரபரப்பை தமிழக அரசியலில் ஏற்படுத்தியது. கருணாநிதிக்கு உணர்ச்சிபொங்க விஜயகாந்த் சவால் விடுப்பதும், மத்திய அமைச்சர் அதனை மறுப்பதுமாக பத்திரிக்கைகள் "பரபரப்பை" விற்பதில் தீவிர கவனத்தில் இருந்ததன.

நிருபர்களுடன் விஜயகாந்த் பேசியபொது நகைச்சுவை என்ற பெயரில் " தி. மு. க. - அ. தி. மு. க." என்பதற்கு பதில் தி. மு. க. - தே. மு. தி. க. மாதிரி சண்டை போட கூடாது என்றார். இதன்மூலம் தி. மு. க. வுக்கு சரிசமமான எதிரி தனது கட்சிதான் என்பதை சொல்லாமல் சொன்னார்.

இதை ஜெயலலிதா படித்திருக்ககூடும். ஏற்கனவே தனது கட்சி "முன்னாள்"கள் பலரை விஜயகாந்த் கட்சிக்கு தாரை வார்த்துள்ள ஜெயலலிதாவிற்கு கடுமையான கோபம் வந்து விட்டது. இன்று தனது கொபத்தை அறிக்கையாக வெளியிட்டு மீண்டும் விஜயகாந்தை தானே வலிய முன்வந்து நார்நாராக திட்டி உள்ளார்!

விஜகாந்தை "திடீர்" அரசியல்வாதியென கிண்டல் செய்துள்ளார். தனது கட்சி பல சோதனைகளை சந்தித்த போதும் வன்முறைகளில் ஈடுபட்டதில்லையென்றும், எதிர்த்து அறிக்கைகள் விடவில்லையென்றும், போராட்டம் நடத்தாமல் சட்டத்தின் வழியிலேயே அனைத்தையும் சந்தித்ததாகவும், கொடும்பாவிகளை எரித்ததில்லை என்றும் கூறி உள்ளார்.

அவர் சொன்ன இந்த வரிகள் தான் என்னை பழைய நினைவுகளை எண்ணிப் பார்க்க தூண்டியது. அறிக்கை என்ற பெயரில் ஒட்டுமொத்த உண்மைகளை மறைக்கும் சாமர்த்தியம் ஜெயலலிதாவிற்கு நிறையவே உன்டு! அது தான் அவரது துணிவு!

ஆம். ஜெயலலிதாவிற்கு எதிராக தீர்ப்பு வந்ததும் அவர்கள் கொடும்பாவி எரிக்கவில்லை... உயிரோடு இருக்கும் மாணவிகளைத்தானே கொளுத்தினார்கள்!
கருணாநிதியை இரவோடிரவாக கைது செய்து அலைக்கழித்தது, வைகோவை உள்ளே தள்ளியது (இதனை வைகோ மறந்திருப்பார்!) எல்லாமே பழி வாங்கும் நடவடிக்கை இல்லை என்று சொல்கிறாரா?

ஜெயலலிதா அறிக்கைக்கு விஜயகாந்த் பதில் சொல்லமாட்டார் என்றே நம்புகிறேன். அப்படி பதில் சொல்ல நினைத்தால் எனது நினைவுகளை அவரும் நினைத்து கொள்வது நல்லது!

மொத்ததில் தினகரன் பத்திரிக்கைக்கு இன்று தலைப்புச் செய்தி கிடைத்தது தான் இந்த அறிக்கையினால் கலைஞருக்கு கிடைத்த லாபம்! அவரைப்போல நாமும் வேடிக்கை பார்ப்போம்! இதுவும் டென்னிசைப்போல ஒரு பணக்கார விளையாட்டு தான்!

Monday, January 29, 2007

பாபாவும் கலைஞரும் சந்திப்பு!

கலைஞர் வீட்டில் பாபா காலில் விழுந்து வணங்கினார் தயாளு அம்மாள். அருகில் கலைஞர்! நல்லவேளை, பாபாவுக்கும் கலைஞருக்கும் கிட்டதட்ட சமவயதாக இருப்பதால் இவர்களிருவரும் ஒருவர் காலில் மற்றவர் விழவில்லை! பத்திரிக்கைகளுக்கு மிகவும் சூடான ஒரு செய்தி கிடைக்காமல் போய் விட்டது! மக்களுக்கும் வீண் குழப்பம் தீர்ந்தது!துரைமுருகனுக்கும் தயாநிதிக்கும் கேட்கக்கேட்க மோதிரம் "வரவழைத்து" கொடுத்த பாபாவுக்கு அதோடு கையிருப்பு தீர்ந்து விட்டது போலும்! கலைஞருக்கு மோதிரம், கேட்டும் கிடைக்கவில்லை! பாபாவின் சித்து வேலை பொய்த்ததால், குழப்பமான நேரங்களில் கலைஞருக்கு கை கொடுக்கும் அண்ணா பெயரை சொல்லி அண்ணா மோதிரம் கலைஞர் கையில் இருப்பதால் என் மோதிரம் கலைஞருக்கு தேவை இல்லை என சமாளித்து விட்டார் பாபா!விழா மேடைக்கு சக்கர நாற்காலியில்(!) வந்த பாபாவிடம் மீண்டும் மூன்று கோரிக்கைகள் வைத்து பண உதவி கேட்டார் கலைஞர். இதில் ஒன்றுக்காவது மேடையிலேயே பணம் "வரவழைத்து" கொடுத்து இருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்!