Monday, August 29, 2011

செங்கொடி உயரட்டும்!

அன்று
ஒரு முத்துக்குமார் பற்றவைத்தான்
இன்று பற்றவைத்திருக்கிறாள்
செங்கொடி!
செங்கொடியேந்திப் போராடும்
மனிதரிடையே
செங்கொடியே போராடி
வீழ்ந்திருக்கிறது!
கொடிகாத்த குமரனின் கூட்டமோ
எள்ளி நகையாடுகிறது!

படுகொலையைத் தடுக்க
தன்னையே தொலைத்திருக்கிறாய்...
ஆம்;
"என்னுயிரை எடுத்துக்கொண்டு
என் மகனைக் காப்பாற்று"
என வேண்டும் தாய்க்கும்
உனக்கும் வித்தியாசமில்லை!
இந்திய ஜனநாயகத்தின் கோரப்பசிக்கு
இன்னொரு உயிர் கிடைத்ததே
மிச்சம்!

நம் தமிழ்நாட்டிலேயேதான்
பாதுகாப்பாக இருக்கிறது...
நம் தமிழர்களை
கொல்லக் காத்திருக்கும்
தூக்குக் கயிறு!
அறுத்தெரியவும் முடியாமல்
எரிக்கவும் முடியாமல்
தன்னையே எரித்துவிட்டாயே!
உன் மனது
எவ்வளவு தூரம் எரிந்திருக்கும்?

அன்னாஹசாரேக்களால்
இருட்டடிக்கப்பட்ட
சகோதரர்களின் உயிர்ப்பிரச்சனையில்
ஊடக வெளிச்சமில்லாததால்
உன்னையே வெளிச்சமாக்கி
மாய்ந்தாயோ?

அறிவாளித்தனமாக
ஒதுங்கிச் செல்ல மட்டுமே
பழகிப்போன கூட்டம்,
முட்டாள்த்தனமென்று
எளிதாகச் சொல்லிவிடுகிறது...
துருப்பிடித்த
இரும்பு மனதோடு!

தமிழகத்தில் வாழும்
இந்திய காங்கிரஸ்வாதிகளே!
உங்கள் அரசியல் நலன்வேண்டி
பணிவான வேண்டுகோள்;
"ராஜீவ்காந்தி படுகொலை!
ராஜீவ்காந்தி படுகொலை!"
என்றே இனியும்
அரசியல் நடத்துவதற்காகவாவது
விட்டு விடச்சொல்லுங்கள்
எங்கள் சகோதரர்களை!

இன்று,
தங்களைத் தாங்களே
மாய்த்துக்கொள்பவர்கள்,
மாற்றி யோசிக்க நேரம் பிடிக்காது!

Wednesday, August 24, 2011

என்னை நனைத்த மழைத்துளிகள்

தேங்கிய நீரை
வாரியிறைத்தபடிதான்
வாகனங்கள் நகர்கின்றன
இருந்தும் குறைவதாயில்லை
மழைநீர்க் குட்டை!

சவ ஊர்வலம்போலதான்
போக்குவரத்து ஊர்ந்து செல்லும்
ஊர்வலத்தின் முன்னே
உண்மையிலேயே
செத்துக்கிடந்தாலும் கிடக்கும்
எதாவது அரசு பேருந்து!

தேரைகள், பாம்புகள், எல்லாமே
சொல்லாமல் கொள்ளாமல்
வந்து குடியேறும்
கண்ணுக்கு அகப்படாத மூலைகளில்...
வாடகை பயம் போல!


என் சமாதானத்தை
கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது
என் மனதுக்கு;
எனக்காகவே
சமாதானமானதுபோல
நடிக்கவும் கூட...
இன்னமும்
நடிக்கப் பழகாத அவளுக்காகவே
நானும் என் மனதும்
ஒவ்வொரு நொடியும்!
என்னை வழிநடத்தும்
கைத்தடியின்
முனை பற்றிய கரத்தில்
மெலிதாய் கிளம்பிய நடுக்கத்தில்
அவளிடம்
காதல் கடிதத்தை நீட்டிய பொழுது
மீண்டும் மலர்ந்தது!
மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு
சிந்தித்துத் திட்டமிட்டு
திரும்பவும் அது நடக்காமல்
மனதை
பக்குவப்படுத்தியே வந்தாலும்
ஏதோ ஒரு நொடியில்
எனை மறந்த சிந்தனையில்
கடித்தே விடுகிறேன்
உதடு தீண்டும் மீசையை!

Tuesday, August 16, 2011

எண்ணிலடங்கா வாகனங்கள்
கடந்துகொண்டேயிருக்கின்றன
எந்த வண்டும் வரவில்லை;
சாலையோரப் பூச்செடிகள்!

Tuesday, August 9, 2011

வெற்றிலை!

குளித்ததுமுடித்து, தலைசீவி
முகப்பூச்சு பூசி,
பொட்டுவைத்து, பூ வைத்து
அலங்காரமாய் வீதியில் திரிகிறது...
பீடாக்காரனுக்கு வாக்கப்பட்ட
வெற்றிலை!