Monday, April 27, 2009

இப்படியும் உண்ணாவிரதம்!

கருணாநிதியின் 7 மணி நேர உண்ணாவிரதம் பற்றி அவருக்கு மிகவும் பிடித்த வடிவேலு பாணியில் சொல்வதானால், ஸ்டார்ட்டிங்கு நல்லாதான் இருந்துச்சு, பினிஷிங்கு சரியில்லயேப்பா! மிகக் குறுகிய நேர உண்ணாவிரதம் என்றவகையில் கின்னஸ் சாதனை படைத்திருகும் இந்த உண்ணாவிரதத்தின் அவசர அவசியம்தான் என்ன?.

ஜெயலலிதா, தனி ஈழம் அமைவதை ஆதரித்தது கருணாநிதிக்கு உண்மையில் பயங்கர அதிர்ச்சி வைத்தியமாகத்தான் இருந்திருக்கும்! இதைவிட ஒருபடி அதிகமாக என்ன அரசியல் ஸ்டண்ட் அடிப்பது என்று இரவு முழுக்க தூங்காமல் யோசித்திருப்பார்! "நான் இரவு முழுவதும் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அரசின் அறிவிப்பு வருமென்று எதிர்பார்த்து விழித்திருந்தேன் என்பதில், விழித்திருந்ததற்கான காரணம் ஜெயலலிதாவின் அதிரடி அறிவிப்பாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை!


அதுபோகட்டும்... கருணாநிதியின் உண்ணாவிரதம் நம்முள் பல்வேறு கேள்விகளை எழுப்புவதை தவிர்க்க இயலாது. அவற்றை கீழே தந்துள்ளேன்.

1. கருணாநிதியின் வீட்டினருக்கே தெரியாமல் எடுக்கப்பட்ட உண்ணாவிரத முடிவு, கடந்த ஜூனியர் விகடன் இதழில் அப்படியே கவர் ஸ்டோரியாக வந்திருந்தது எப்படி?

2. திடீரென நினைத்த இடத்தில் உண்ணாவிரதம் இருப்பவர், இதே இலங்கைப் பிரச்சனைக்காக தொடர் உண்ணாவிரதமிருந்த தாய்மார்களை, நாயினும் கேவலமாக போராட்டத்திற்கு இடம்தேடி அலைய வைத்தது நியாயமா?

3. கருணாநிதி தந்தியனுப்பியும், தீர்மானம் போட்டும், கதறியழுதும் திரும்பிப் பார்க்காத மத்திய அரசு, இப்போது சுறுசுறுப்பாக பேச்சுவார்த்தை நடப்பதுபோல காட்டிக் கொள்வதும், அதற்கு இலங்கை இசைவது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முனைவதும் பெரிய அரசியல் சதியை வெளிப்படுத்துகிறதே? அது என்னவென்றால், கிட்டத்தட்ட, பெரும்பான்மை ஈழப் பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தபிறகு, போர் நடவடிக்கையை நிறைவுக்குக் கொண்டு வரும் தருணத்தில், நீ அடிக்கிற மாதிரி அடி! நான் அழுவுற மாதிரி அழுவுரேன்! என்று கருணாநிதி, மத்திய அரசு, இலங்கை அரசு ஒரு கூட்டு நாடகத்தில் நடிப்பது போலவும், அதற்கும் நாமறிந்த வசனகர்த்தாவே இதனை இயக்கி இருப்பது போலவும் தெரிகிறதே?

4. மத்திய அரசு அழுத்தம் கொடுத்தால் இலங்கை கேட்டு நடக்கும் என்பது உண்மையாகி விட்டது அல்லவா? இப்பொது எங்கே போனது இலங்கையின் இறையாண்மை?

5. கருணாநிதி நினைத்தால் மத்திய அரசை சில மணி நேரத்திற்குள்ளாகவே ஆட்டிவிக்க முடிகிறது. அப்படியானால் இத்தனை காலம், இவ்வளவு படுகொலைகள் நடந்து முடிவதற்காகத்தான் காத்திருந்தாரோ?

6. இப்போது, போர் நிறுத்தமெல்லாம் கிடயாது என்று இலங்கை அரசு மீண்டும் மறுத்திருக்கிறது. இனி, அடுத்ததாக யார், எங்கே உண்ணாவிரதம் இருக்கப் போகிறார்கள்?

7. கருணா - கருணாநிதி; இருவருமே கிட்டத்தட்ட ஒன்றுதானா?

எப்படியோ, காங்கிரஸ் கூட்டணியின் அழிவுக்கு கருணாநிதியே தனது பங்கை தொடங்கி வைத்திருக்கிறார்! இன்னும் தொடரும்...

Saturday, April 25, 2009

கூஜ பக்க்ஷே Vs கேனன் & கோ


இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை தடுத்து நிறுத்த அனுப்பபட்ட சிறப்பு தூதுவர்கள் என்று "கவிதை சுனாமி" வருணாநிதியால் பாராட்டப்பட்ட சிறப்பு தூதுக்கிளிகள் “கேனனும், சாராயணனும்” "அகிம்சைப் பேரொளி" கூஜ பக்ஷேவுடன் அப்படி என்னதான் பேசி இருப்பார்கள்? இதோ அங்கு நடந்த உரையாடலை என்னுடய "ரா!ரா! சரசக்கு ரா!ரா!" அமைப்பு துப்பறிந்து அப்படியே வழங்குகிறது!

கூஜ பக்க்ஷே: என்ன இது திடீர்னு இந்தப்பக்கம்? வாக்கிங் போறப்ப வழிதவறி வந்துட்டிங்களா?

கேனன் & கோ: (தலையைச் சொறிந்தபடி) வழியெல்லாம் தவறல... நம்ம தன்மோகன்கிங்குதான் சும்மா உங்கல பார்த்து வரச்சொன்னாரு...

கூஜ பக்க்ஷே: அந்தாளுக்கு வேற வேலயே கிடயாதா? ஹார்ட் ஆபரேசன் பண்ணியிருக்காறேன்னு பார்க்கறேன்.. இல்லைன்னா அசிங்க அசிங்கமா திட்டிடுவேன்!

கேனன் & கோ: ஏன் எங்க மேல எறிஞ்சு விழுறீங்க? நாங்கதான் உங்களுக்கு இன்னைக்குவரைக்கும் ஹெல்ப் பண்ணிட்டு இருக்கோம்கறத மறந்துடாதிங்க!

கூஜ பக்க்ஷே: நீங்க என்கிட்ட இப்ப சொல்றத மட்டும் இன்னும் கொஞ்சம் சத்தமா சொன்னீங்க, தமிழ்நாட்டுக்கே தெரிஞ்சிடும்! அப்புறம் தேர்தல்ல நீங்க நாமம்தான் போட்டுக்கணும்!

கேனன் & கோ: அதுவிஷயமாத்தான் உங்களைப் பார்க்க வந்தோம்..

கூஜ பக்க்ஷே: அது விசயமாவா? எந்தமாதிரி நாமம் போடுறதுன்னா?

கேனன் & கோ: அதில்லைங்க, தமிழ்நாட்டு தேர்தல்ல ஜெயிக்கிறது விசயமா...

கூஜ பக்க்ஷே: யோவ், அதுக்குத்தான் அங்கயும் ஒரு வருணாவை வச்சிருக்கோம்ல? எதிர்க்கட்சிகளை ஒண்ணுசேர விடாம போராட்டத்தை அமுக்குறதுதான அவருக்கு நாம குடுத்த அசைன்மென்ட்டு? சரியா பண்ண மாட்டிங்கிறாரோ?

கேனன் & கோ: அதெல்லாம் சரியாத்தான் நடக்குது... "தமிழ்நாட்டு புலி" “குருமா”வையே புல்லைத் திங்க வச்சுட்டார்னா பாருங்களேன்!

கூஜ பக்க்ஷே: பின்ன என்னைய்யா பிரச்சனை?

கேனன் & கோ:அரசியல்கட்சிகளை அடக்கியாச்சி... ஆனா, இன்னொருபக்கம் கொஞ்சம் பொம்பளைங்க ஒண்ணு சேர்ந்துக்கிட்டு சாகும்வரை உண்ணாவிரதம்னு சொல்லிட்டு பிரச்சனையை கிளறிவிடுறாங்க... அந்தப்பக்கம் சாரதிராஜான்னு ஒரு டைரக்டர், "என் இனிய தமிழ் மக்களே"ன்னு கெளம்பிட்டாரு!

கூஜ பக்க்ஷே: என்னய்யா பண்றாரு வருணாநிதி? சாரதிராஜாவையும் தூக்கி உள்ளபோட வேண்டியதுதான? எங்க நாட்டுல உள்ள போட மாட்டோம்.. மொத்தமா போட்டுத்தள்ளிடுவோம்!

கேனன் & கோ: அதான் "அசந்த"க்கு என்ன நடந்ததுன்னு தெரியுமே! அதிருக்கட்டும்... நீங்களும் கொஞ்சம் எங்களுக்கு ஹெல்ப் பண்ணணுமே...(திரும்பவும் தலையைச் சொறிகிறார்கள்)

கூஜ பக்க்ஷே: (கேனனைப் பார்த்து) உன் தலைல என்ன இருக்குதுன்னு இந்த சொறி சொறியுற?

கேனன் & கோ: அதில்லைங்க, கொஞ்சனாளைக்கு போரை நிறுத்துற மாதிரி அறிக்கை விட்டிங்கன்னா, தேர்தல் முடிஞ்சதும் அன்னைக்கு நைட்டே மொத்தமா ஒரே குண்டுல அவனுங்கள போட்டுத்தள்ளிடலாம்...

கூஜ பக்க்ஷே: போர நிறுத்துறதா? அதான் சுத்தி வளைச்சாசுல்ல? திரபாகரன் ஒருத்தந்தான் பாக்கி... நாளைக்கே அவன் கதையும் க்ளோஸ்!

கேனன் & கோ: என்ன இது? பத்திரிக்கைக்காறங்களுக்கு பேட்டி குடுக்குற மாதிரியே எங்க கிட்டயே பொய் சொல்றீங்க? அதான் திரபாகரன் அங்க இருக்கானா இல்லையான்னே நமக்கு ஒரு மண்ணும் தெரியாது... சும்மானாலும் அதை பிடிச்சாச்சு, இதைப் பிடிச்சாச்சு, அவன் மாட்டிக்கிட்டான், இவன் மாட்டிக்கிட்டான்னு கதை விட்டுக்கிட்டிருக்கோம்...

கூஜ பக்க்ஷே: நாம சொல்றதத்தான் ஐநா சபைல இருந்து அத்தனை பேரும் நம்புறாங்கல்ல? பிறகென்ன?

கேனன் & கோ: அதுசரி, இருந்தாலும் ரெண்டு நாளுக்குள்ள ஒரு லட்சம் மக்களும் வெளியேறி வந்துட்டங்ககறத யாரும் நம்ப மாட்டாங்கலே? அப்படியே நம்பினாலும், அத்தனை பேரையும் எங்க தங்க வச்சிருக்கீங்கன்னு கேட்டா என்ன சொல்றது?

கூஜ பக்க்ஷே: (கடுப்புடன்) உன் வீட்டுல தங்க வச்சிருக்கேன்னு சொல்லு! யோவ்! நீங்க என்ன முடிவோட வந்திருக்கீங்கய்யா? என்னையே குழப்பிடுவீங்க போல!

கேனன் & கோ: அதில்லை நண்பா, ரெண்டுகட்ட தெர்தல் முடிஞ்சுடுச்சு, அடுத்து தமிழ்நாட்டுக்கும் தேர்தல் பிரச்சாரம் பண்ண “போனியா” வந்தாகணும். அவங்க வந்தாலும் 40தொகுதியில் ஜெயிக்க முடியாதுங்கறது வேற விசயம்... ஆனா கொஞ்சத்துக்கு கொஞ்சமாவது ஜெயிக்கணும் இல்லயா? அவங்க ஜெயிச்சுவந்தாதான வழக்கம்போல உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்? என்ன நான் சொல்றது?

கூஜ பக்க்ஷே: அதுசரி, அவங்க தமிழ்நாட்டுக்கு வர நான் என்ன பண்ணனும்? "அன்னை போனியாவே! வருக வருக!"னு போஸ்டர் அடிச்சு ஒட்டணுமா?

கேனன் & கோ: அடக்கடவுளே! அப்படி போஸ்டர் அடிக்கத்தான் ஏற்கனவே மாங்கிரசுக்குள்ளயே ஆயிரத்தெட்டு கோஷ்டி இருக்குதே! இதுல நீ வேறயா?! கொஞ்ச நாளைக்கு போரை நிறுத்தறோம்னு ஒரே ஒரு அறிக்கை மட்டும் விடு.. அது போதும் இப்போதைக்கு!

கூஜ பக்க்ஷே: என்னப்பா இது! உங்க இந்திய அரசியல்வாதிகளோட ஒரே அக்கப்போரா இருக்கு! இங்கபாரு, சொந்த நாட்டு மக்கள் மேலயே குண்டு போட்டு தினமும் ஆயிரக்கணக்குல கொன்னுக்கிட்டு இருக்கேன்... அத்தனை கட்சிக்காரங்களும் கம்முன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காங்க... உங்க நாட்டுல என்னடான்னா, ஆளாளுக்கு அறிக்கை விடுறானுங்க! எங்களை மாதிரி அதிபர் ஆட்சிதான் உங்களுக்கும் லாயக்கு!

கேனன் & கோ: உங்க நாட்டுல அதிபர் ஆட்சி நடக்குது... எங்க நாட்டுல எங்களை மாதிரி அதிகாரிங்க ஆட்சி நடக்குது! அவ்வளவுதான் வித்தியாசம்! பிரதமரா இருந்தாலும் நான் சொல்ற யோசனயத்தான் கேட்டு நடக்கணும்!

கூஜ பக்க்ஷே: இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல, நீங்க சொல்றதுல்லாம் புரியுது. எதுக்கும் என் சகோதரர்ககிட்ட கலந்து பேசிட்டு நான் அறிக்கை விட முடியும்.

கேனன் & கோ: அப்போ சம்மதம்தான்னு எடுத்துக்கலாமா? அப்படியே போற வழியில வருணாநிதிகிட்ட சொல்லிட்டுப்போனா, அடுத்த நாள் காலைப் பேப்பருக்கு ஒரு கவிதை ரெடி பண்ணிடுவாரு! அப்படியே உங்களுக்கு "அகிம்சைப் பேரொளி" பட்டமும் குடுத்தாலும் குடுப்பாரு!

கூஜ பக்க்ஷே: அந்த பட்டத்தை அப்படியே காத்துல எங்க நாட்டுப் பக்கமா பறக்க விடுங்க புடிச்சுக்கறேன்!

(ஜோக்குக்கு சிரித்தபடி கைகுலுக்கி விடை பெறுகிறார்கள்!)

விடைபெற்றபின்...
------------------
கூஜ பக்க்ஷே: இந்த கோமாளிகள் இப்படி எதாவது சொல்லிக்கிட்டேதான் இருப்பானுங்க... இறுதித் தமிழன் இருக்கும்வரை நம்மளோட படுகொலைப் பொழுதுபோக்கை நிறுத்தவே கூடாது!

Sunday, April 19, 2009

அரசியல் அதிரடிச் சிரிப்புகள்!

"இந்த தொகுதியில கள்ள ஓட்டு பதிவாகியிருக்கலாம்னு சந்தேகப்படுறாங்களாமே?"

"பின்ன, இங்க மட்டும் நூற்றிநாற்பது சதவீதம் வாக்கு பதிவாகி இருக்குதே!"
-----------------------------------------------------------------------------------

"செத்தவங்க ஓட்டெல்லாம் போடாதடான்னு என் பையன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன்!"

"ஏன், போலீஸ்ல மாட்டிக்கிட்டானா?"

"இல்ல, பேய்ங்ககிட்ட மாட்டி, அறை வாங்கிட்டு பேச்சு மூச்சில்லாம படுத்திருக்கான்!"
-----------------------------------------------------------------------------------

"தலைவரோட தேர்தல் ஸ்டண்ட் அளவுக்கதிகமா போகுது!"

"எப்படி சொல்ற?"

"பிரச்சாரத்துக்குப் போற வழியில, தரையில படர்ந்திருந்த பூசணிக் கொடிக்காக தன்னோட பிரச்சார வேனையே நிறுத்திட்டு இன்னொரு வேன்ல கிளம்பிட்டாரே!"
-----------------------------------------------------------------------------------

"தலைவரோட பிரச்சாரம் சூடு பிடிச்சுடுச்சு!"

"எப்படி சொல்ற?"

"இப்பல்லாம் அடிக்கடி டாய்லெட் போறாரே!"
-----------------------------------------------------------------------------------

"எதிர்க்கட்சிகளின் சூழ்ச்சியால் நமது கட்சிப் பொதுக்கூட்டங்களில் அதிக அளவு பிக்பாக்கெட் நடப்பதால், பேச்சைக் கவனிப்பதோடு பாக்கெட்டையும் கவனித்துக் கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக் கொள்ள்கிறேன்!"

Monday, April 13, 2009

குறி தப்பாத காலணிக் கவிதைகள்!

குப்பையில்
காலணிகளை வீசுங்கள்
குறி தப்பாமல்!
------------------------

குறி தப்பிய காலணியில்
புதைந்து கிடந்தது
வரலாற்று சோகம்!
------------------------

முடிவு கட்ட வேண்டாம்
இந்த
காலணி ஆதிக்கத்திற்கு!
------------------------

ராமாயணக் கதையில்
ஆட்சி செய்த காலணிகள்
புரட்சியில் இன்று!
------------------------

நசுக்க நசுக்க
புரட்சி வெடிக்குமாம்...
புரியவைத்தது காலணி!
------------------------

காலணிக்குத் தடை வந்தால்
எறிகணையாகுமோ
எழுதுகோல்கள்?