Saturday, March 28, 2009

கர்வப்படு; கறுப்பாய் பிறந்ததற்கு...

கறுப்பு...
நிறங்களின் தாய்
மற்றதெல்லாம் சேய்!

வண்ணக்கலவையின்
உச்சமிது
மற்றதெல்லாம் மிச்சமே!

நிறமிகளின் நிறையே
கறுப்பு
குறைபாடே வெண்மை!

இல்லாமையின் நிறம்
கறுப்பு
எல்லாமிருப்பதின் நிறமும்
கறுப்புதான்!

துக்கத்தின் நிறமென்று
யாரிதைச் சொன்னது?
தூக்கத்தின் நிறமென்றால்
அதில் உண்மையிருக்கும்!
தூக்கம் வந்தாலே
கரு'மை" பூசிய இமைகள்
கண்களுக்கு
கருமை போர்த்தும்!

வெண்மேகம்
கருமை சூடினால்
பூமியெங்கும்
பூப்பூக்கும்!

கருவண்டு
சுவைத்திடவும்
மலர்களெல்லாம்
தேன் வடிக்கும்!

கருமை மூடிய
இரவில்தான்
அடுத்த தலைமுறைக்கான
தேடல் நடக்கிறது!
கருவறை தொட்டு
உலகைக் காணும்வரை
கறுப்பின் கதகதப்புதான்
பாதுகாப்பே!

இயற்கையின்
தொலைக்காட்சியில்
பிறை நிலவும்
நட்சத்திரமும்
கருமை தந்த
அலுக்காத
நெடுந்தொடரல்லவா?!

வெண்மையை
ஆதிக்கமாகவும்
கருமையை
அடிமையாகவும்
வரலாறு பேசுகிறது!
இன்றோ
வெண்மையை
ஆதிக்கம் செய்கிறது
கறுப்பு!

கறுப்பாய் பிறந்ததற்கு
வருத்தப்பட்டால்
புன்னகை தொலைத்திருக்கும்
வைரம்!

கர்வப்படு;
கறுப்பாய் பிறந்ததற்கு...
சில நிமிடங்களாவது!

Thursday, March 26, 2009

தேர்தல் வந்திடுச்சு! - மூன்றாம் பாகம்!

கொத்துக் குண்டுகளால்
செத்து மடியுது
தமிழினம்...
முதுமையைச்
சொறிந்துவிட்டு
அறிக்கைமேல் அறிக்கையாய்
அனுதாபம் தேடுது
சாணக்கியத்தனம்!
---------------------------

அரசியலில்
தலையெடுப்பதற்காக
தலையெடுப்பதாக
மூன்றாந்தர அரசியலில்
நேருவின்
மூன்றாவது தலைமுறை!
எதையெதையோ இடிப்பவர்கள்
இடித்துக் கூறாமல்
குழப்பத்துடன்!
---------------------------

தமிழுணர்வாளர்கள்,
தேர்தலுக்காக
மரத்துக்கு மரம்
தாவியபடி...
சற்று
பொறுமை காக்கட்டும்
முத்துக்குமரன்கள் ஆவி!
---------------------------

காந்தி கடிகாரமும்
மூக்குக் கண்ணாடியும்
பேசிக்கொண்டன...
ஏலத்திலெடுக்கப்பட்ட
டோனிக்கும்கூட
இந்தியாவில்
பாதுகாப்பில்லையாமே!
---------------------------

சென்றமுறை
வெளிநாட்டு வீரர்களை
விலைக்குவாங்கிய ஐ.பி.எல்,
அடுத்தமுறை
தென்னாப்பிரிக்காவை
விலைக்கு வாங்கும்
அதே கிரிக்கெட்டுக்காக!

Wednesday, March 18, 2009

தேர்தல் வந்திடுச்சு! - இரண்டாம் பாகம்!

கூடி வாழ்ந்தால்
'கோடி" நன்மை
உண்மை உணர்ந்தவன்
அரசியல்வாதி!
உணராத ஜனமோ
அப்பாவி!
-----------------------------

கொள்கைச் சட்டையை
உரித்துப் போட்ட
நிர்வாணப் பாம்புகள்
இன்னமும் புற்றுக்குள்ளேயே...
பேச்சுவார்த்தை முடியாமல்!
-----------------------------

காத்து 'கருப்பு" பட்டதோ?
'கறுப்பு" எம்ஜியார்
தேய்ந்து
'கறுப்பு" ஆடாக
கசாப்புக் கடையில்!

Sunday, March 15, 2009

தேர்தல் வந்திடுச்சு!

வெள்ளித்திரை விலக்கி
"பிரச்சார பீரங்கி" பவனி!
கையசைக்கிறார்...
புன்னகைக்கிறார்...
வியர்வை துடைக்கிறார்...
சூட்டிங் முடிந்ததும்
கூட்டம் கலைகிறது
"நல்ல கலருடா!"
கொள்கை பேசியபடி!
------------------------

ஈழப் பிரச்சனைக்காக
தெருவில் நின்று
போராடிய பட்டியல்
போகுமிடமெல்லாம்
பறையடிக்கப்படும்!
தானே தமிழனென்றும்
தானைத் தலைவனென்றும்
திரும்பத்திரும்ப
நினைவுபடுத்தப்படும்!
------------------------

தேர்தல் பிரச்சாரத்தில்
யாராவதொரு
"அடுத்த பிரதமர்"
"நன்றி வணக்கம்"
என்று தமிழில் பேச,
ஒரு வரி மட்டும் புரிந்ததில்
புல்லரித்துப் போகும்
கூட்டி வந்த கூட்டம்!
------------------------

தேர்தல் கமிஷனின்
கடுமையான விதிகள்...
கெடுபிடிகள்...
கட்டுப்பாடுகளையெல்லாம்
உடைத்தெறிந்துவிட்டு
எப்பாடுபட்டாவது
காப்பாற்றப்படுகிறது
இந்திய இறையாண்மை!
------------------------

சுவற்றில் இடம்பிடிக்க
போட்டா போட்டி!
யாருக்கும் நம்பிக்கையில்லை...
மக்கள்
மனதில் இடம்பிடிக்க!
------------------------

வரிசையாகப் பலரும்
தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்கும் அகப்படவேயில்லை!
------------------------

தேர்தலன்று
நாம் செய்யும் தவறு
சில நாட்களாவது உறுத்துகிறது
கரும்புள்ளியாக!
சிலர்
வெட்கமில்லாமல்
துடைத்தபடி...
மீண்டும் கரும்புள்ளி குத்த!
------------------------

காந்தி
மறைந்தும் வாழ்கிறார்...
மறைந்து மறைந்து
வாழ்கிறார்;
ஆரத்தித் தட்டிலும்
வாழை இலைக்கடியிலுமாக!
அர்த்தம் புரிகிறது
காந்தியின் புன்னகைக்கு!

Wednesday, March 11, 2009

கூட்டணி கூத்துக்கள்!

"எங்களுக்குள்ள 'கெமிஸ்ட்ரி' ஒர்க்அவுட் ஆனதால கூட்டணிக்கு ஒத்துக்கிட்டேன்னு தலைவர் சொல்றாரே, அதென்ன கெமிஸ்ட்ரி?"

"ஒத்துக்கலைன்னா 'ஆசிட்' ஊத்திடுவோம்னு அவங்க மிரட்டினதத்தான் சொல்றாரு!"
------------------------------------------------------
"அதென்ன கூட்டணி ஜோசியர்?"

"கிரக ராசிப்படி கூட்டணியில எத்தனை கட்சிகள் இருக்கணும், எத்தனை சீட்டு கொடுக்கணும், எந்தெந்த சீட் கொடுக்கணும், கூட்டணிக்கு என்ன பெயர் வைக்கணும்னு எல்லாத்தியும் புட்டுபுட்டு வைப்பாராம்!"
------------------------------------------------------
"கூட்டணி அமைக்கமாட்டேன்னு சொன்ன நம்ம தலைவரை குண்டர் சட்டத்துல கைது பண்ணிட்டாங்களாமே?"
பின்ன? இந்திய இறையாண்மைக்கு எதிரா செயல்பட்டா சும்மா விட்டுடுவாங்களா?!!"

"இவரு கூட்டணி அமைக்கிறதுக்காகவே கட்சி ஆரம்பிச்சிருக்காருன்னு எப்படி சொல்ற?
கட்சியோட பெயரே 'கூட்டணி முன்னேற்றக் கழகம்"னு தான வச்சிருக்காரு!"
------------------------------------------------------
"எதிர்கட்சித் தலைவர், செல்போன்ல ரொம்ப நேரமா உங்ககிட்ட எதுக்காகவோ கெஞ்சிக்கிட்டிருந்தாரே, ஏன்?"

"இருக்கிற எல்லாக் கட்சிகளையும் நாமளே விலைபேசிட்டதால அவரு மட்டும் தனியா போட்டியிட வெட்கமா இருக்குதாம்... வேணும்னா ஃப்ரியாவே அவரும் நம்ம கூட்டணியிலேயே சேர்ந்துக்கலாமான்னு கேக்குறாரு!"
------------------------------------------------------