Tuesday, July 3, 2012

சொகுசு கார்கள்!

மூச்சு முட்டும் போக்குவரத்து நெரிசலில்
ஒற்றை மனிதர்களைச் சுமந்தபடி
குட்டி தேசங்களாக நகரும்
சொகுசு கார்கள்!
----------------------------



வெள்ளையடிக்கப்படாத சுவற்றை மறைத்தபடி
வெள்ளையடிக்கப்பட்ட முகங்கள்
புகைப்படத்தில்!

வாசம்!

டாஸ்மாக் பார் கடக்கையில்
புளிச்ச பீர் வாசம்
அடுக்களையிலிருந்து வரும்
அரைத்த மசாலா வாசம்
கோவில் பிரகாரத்தின்
விளக்கெண்ணெய் வாசம்
சாவு வீட்டில் போர்த்திய
ரோஜாப்பூக்களின் வாசம்
நேற்றைய மழையில்
கிளம்பிய மண்வாசம்
அத்தனையுமற்ற
வெறிச்சோடிய உலகம்
புதிதாயிருக்கிறது
ஜலதோஷம் பிடித்த எனக்கு! 

தாமரைக் குளம்







பகலிலும்
நிலவுகள் குளிக்கும்
தாமரைக் குளத்தில்!


---------------------------------


வற்றிக்கொண்டிருக்கும் கண்மாயில்
நிறைந்திருக்கக்கூடும்மீன்களின் கண்ணீர்...


---------------------------------

Tuesday, February 7, 2012

தரை வீழ்ந்த இலை

ஒரு காலத்தில்
பச்சையம் நிறைந்து
பளபளப்பாய் இருந்திருக்கும்...
கிளை தாங்கிய பறவைக்கு
குடைதாங்கி
களைப்பாற்றி இருந்திருக்கும்...
எச்சங்கள் கூட சுமந்திருக்கும்...
காற்றின் கரம் பற்றி
விண்ணை எட்டிப் பிடிக்கவும்
முயன்றிருக்கும்...
கலகலத்து கதைபேசி
களிப்போடு மகிழ்ந்திருக்கும்...
இப்போது பச்சையம்
பழுதாகி, பழையதாகி,
இத்தனை காலமாய்
பிடித்திருந்த கிளை
பிடிக்காமல் கை விரிக்க
பிடி நழுவி, நழுவி
தரை வீழ்ந்த இலை
இன்றோ நாளையோ
அப்புறப்படுத்தப்படலாம்...
அத்தனை காலமாய்
கதை பேசிக் கலகலத்த
ஏதோ ஒரு
காற்றலையின் கரம் பற்றி!

Monday, February 6, 2012

இலையுதிர்க்காலம்...

இலையுதிர்க்கால இரவில்
எலும்பும் தோலுமாய்
நிலவு!
*****
இலையுதிர் காலத்திலும்
உதிராத சருகுகள்
பறவையின் கூட்டில்!
*****

இலையுதிர்க்கால முடிவில்
பொறிக்ககூடும் இலைகள்...
அடைகாத்தபடி மரம்!
*****

விருந்தினரில்லாத
வீடாகிப் போனது
இலையுதிர்க்கால மரம்!

உன்னோடு நிமிடங்கள்...

உன்னோடு பேசிக்கொண்டிருந்த
நிமிடங்களை
சுற்றிச் சுற்றி வருகிறது
கடிகாரம்!

இப்போது கேட்கும்
இந்த விமானச்சத்தம்
அப்போது எட்டவில்லை
என் செவிகளை!

நாம் அமர்ந்த இடத்தில்
இப்போது
வேறு யாரேனும்
அமர்ந்திருப்பார்கள்...
அவர்களாவது ரசிக்கட்டும்
அங்கு மலர்ந்த பூக்களை!

இன்றும்
நானே அதிகம் பேசினேன்
அதிகமாக சிரித்தேன்
எனோ
மவுனம் சுமக்கமுடியவில்லை...
ரசிப்பது நீயெனும்போது!

ஒளிந்து விளையாடிய
சிறுவர்களில் சிலர்
நம் பின்னாலும்
மறைந்திருந்து பிடிபட்டனர்...
இன்னமும் பிடிபடவில்லை
நம்முள் மறைந்துள்ள நாம்!

Friday, January 20, 2012

தந்தையாகிறேன்...

தந்தையின்
திடீர் மரணச் செய்தியை சுமந்தபடி
அவசர ரயில் பயணம்;
நான் ரசித்த
முதல் ஆண்மகன்,
முதல் அறிவாளி,
முதல் சாகசககரன்,
முதல் எல்லாம் தெரிந்தவன்,
தன் இயலாமையை உணர்ந்த
முதுமையிலும்கூட
எனக்குத் தெரியாத
இன்னும் பலவற்றை
ஓயாமல் கற்றுத் தந்தவன்
ஓய்ந்திருப்பதை காணச் செல்கையில்
ஜன்னல்வழி விரியும் உலகில்
எதிர்ப்படும் பசுமைகள்
என் ரசிப்புக்காகக் காத்திராமல்
ஒன்றன்பின் ஒன்றாக வந்துவந்து
துக்கம் விசாரித்து அகன்றபடியிருந்தன;
அவ்வப்போது முட்டிவரும் கண்ணீரை
என் கரம் துடைக்குமுன்னே
ஆறுதலாய் துடைத்துவிட்டு
சட்டென மறைகிறது எதிர்க்காற்று;
என் தந்தையைக் காயப்படுத்திய
குஷிப்படுத்திய
அத்தனை நினைவுகளையும்
மீட்டெடுத்தபடியே
என் தந்தையின் வயதொத்த
சக பயணிகளிடமும்
தேனீர், முறுக்கு வியாபாரிகளிடமும்
அவரைத் தேடிக்கொண்டே பயணிக்கிறேன்;
நினைவுச் சுழலில் சிக்கிய
என் தொடையில்
தன் பிஞ்சுக் கரத்தால் தட்டி
"அப்பா ஒண்ணுக்கு"
என்றழைக்கும் பையனிடம்
என் பால்யம் வந்து ஒட்டிக்கொள்ள
என் தந்தையாகிறேன் நான்!

Thursday, January 19, 2012

லாஸ்ட் பெஞ்ச் குறிப்புகள்!


பள்ளிக்கூடத்தின் சுற்றுச் சுவருக்கு
வரப்போகும் பொங்கலுக்காக
அடித்த வெள்ளையில்
காணாமல் போயின
நான் உருவாக்கிய
காதலர் சாம்ராஜ்யங்கள்!
******
தரையில் உட்கார்ந்த எனக்கு
உயர்நிலைப் பள்ளியில்
பெஞ்சு போட்டுக் கொடுத்தார்கள்;
அப்போதும் நிறுத்தவில்லை
அடிப்பதை மட்டும்!
******
ஓட்டை உடைசல் பெஞ்ச்சை
கடைசி வரிசையில்தான்
போட்டு வைத்திருக்கிறார்கள்;
எந்த வகுப்பிலும்
நல்ல பெஞ்ச் கிடைத்ததேயில்லை!
******
'மகா'விடம் அடிக்கடி வழியும்
சயின்சு வாத்தியாரை
கல்லால் அடித்தது யாரென்று
கடைசி வரை தெரியவேயில்லை;
இருந்தும்
என் மீது சந்தேகம் தீரவில்லை!
******
என்னொட ஸ்கேலை வாங்கி
என்னையே அடித்து
உடைத்த ஆசிரியரும் உண்டு;
உடைத்த ஸ்கேலை ஒருபோதும்
வாங்கித் தந்ததில்லை!
******
வகுப்பு வாத்தியாராக
வரக்கூடாதென்று
அனைவராலும் வேண்டப்படும்
கண்ணா வாத்தியார் மட்டும்
ஹெட்மாஸ்டரிடம்
வேண்டிக் கேட்டுக்கொண்டார்
இவனை வேற செக்சனுக்கு
மாத்திடுங்க என்று!

ஒற்றைக் கொம்புக் குதிரை!

அந்த அபூர்வமான
ஒற்றைக் கொம்புக் குதிரை
பல வருட இடைவெளிக்குப்பின்
என் கனவிலே வந்தது
என் பால்யத்தின்
படக்கதை நாயகனாக
ஆச்சர்யங்கள் பல செய்து
பறந்து திரிந்த
அதன் சிறகுகள் அடங்க
மெல்ல நடைபோட்டு அருகில் வர
வாஞ்சையுடன் தடவினேன்
என் முகத்தை தன் முகத்தால் உரசி
தன் அன்பை வெளிப்படுத்தியது
சற்று நேரத்திற்கெல்லாம்
இன்னமும் விலகாத
அதன் ஒற்றைக் கொம்பு ரகசியத்தை
என்னிடம் சொல்லாமலேயே
விர்ரென்று கிளம்பி
விண்ணில் பாய்ந்து மறைந்தது...
அங்கே படர்ந்திருந்த
வண்ண ஒளிக்கலவை மெல்ல கலைந்து
இருள் மீண்டும் கவ்வ
தொலைந்தது என் பால்யம் தூக்கத்தினுள்!

சத்தம்!

மனிதர்களின் பேச்சுக்குரல்கள்
வாகனங்களின் பேரிரைச்சல்
ஒலிபெருக்கியின் திரையிசைப்பாடல்
செல்பேசியின் அழைப்புகள்
குழந்தையின் அழுகை
மரக்கிளைப் பறவைகளின் கூக்குரல்
காற்றிலசையும் சருகுகள் ஓசை
ஆழ்நிலை குறட்டையொலி
அத்தனை சத்தங்களும் களைந்த
நிர்வாண உலகத்திற்கான தேடல்
மூச்சுச் சத்தம்
மவுனிக்கும்வரை கிட்டாமல் போக,
ஒப்பாரிச் சத்தத்திற்கிடையே
தூக்கிச் செல்லப்பட்ட உடலுக்கு
இறுதியாய்க் கேட்டது
'சட சட'வென ஏதோவொன்று
பற்றியெரியும் ஓசை!

இனிய பொங்கல் நல்வாழ்த்து!

வற்றிப்போன ஆற்றுக்கே தெரியாமல்
மண்ணை வெட்டி விற்கும்
மண்ணாசை மனிதரிடையே
உழுதுபோட்டு
வியர்வையோடு
உரங்களையும் கலந்து போட்டு
மண்ணை வளப்படுத்தும்
மண்ணின் மைந்தர்களாம்
உழவர்களின் திருவிழா!

வயல்வரப்பிலும்
ஊரணி மேட்டிலும்கூட
சாகடிக்கப்பட்டுவரும்
விளைநிலங்களின் நினைவாக
எழும்பியுள்ள அளவைக்கல்
மனதை வருத்தினாலும்
சுனாமியாகி சுற்றியடித்தாலும்
புயலாகிப் பெயர்த்தெடுத்தாலும்
இன்னமும் கலங்காமல்
பசுமை வளர்க்கும்
இயற்கையின் காவலர்களாம்
உழவர்களின் திருவிழா!

பகட்டான உடையில்லை
ஆடம்பர அணிகளில்லை
வரப்புமேட்டிலேயே வாழ்ந்தாலும்
மேட்டுக்குடி செருக்கில்லை
உச்சிவெயில் பார்த்தே
நேரத்தைச் சொல்லிடும்
நேர்த்தியின்னும் குறையவில்லை
அத்தனையும் விளைவித்தாலும்
விலை நிர்ணயிக்கும் உரிமையில்லை
இருந்தும்
வயல்வெளிவிட்டு விலகிட மனமில்லா
வெள்ளந்தி மனிதர்களின்
உள்ளம்மகிழ் திருவிழா!

சேற்றினில் கால்பதிக்க,
நாற்று வளர்ந்து
நெல்மணியாகும்வரை
காத்திருக்கப் பொறுமையற்று,
விளைநிலங்களை விட்டுவிட்டும்,
விற்றுவிட்டும்
மாற்றுப் பாதை நடக்கும்
பரபரப்பு மனிதரிடையே
விதைதூவி, நாற்று பறித்து,
காலத்தே களைபறித்து,
வலிமைசேர் உரமிட்டு,
வேரின் தாகம்தீர்த்து
தேகம் சிரிக்கும் பயிரை
பார்த்துப் பார்த்து வளர்க்கும்,
பொறுத்து பூமியாள்வோரின் திருவிழா!

வாழிய உழவு! வாழிய உழவர்!
வாழ்க நற்றமிழர்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து!

பட்டுச்சேலை

தன்னை நெய்த பொழுதினும்
பெரிதுவக்கின்றன
உன் வீட்டு பீரோவிலிருக்கும்
சேலைகள்!
எச்சிலை இழையாக்கி
சுற்றிக்கொண்டு உயிர்நீத்த
பட்டுப் புழுக்கள்
மோட்சம் பெற்றன
அந்த சேலைகளை
நீ சுற்றிக்கொண்ட நொடிகளில்!

நீயில்லாத பக்கத்து வீடு!



எங்கள் வீட்டிற்கு
அடுத்த வீட்டின் முகவரியே
நீ வந்த பிறகுதான்
எனக்கு அறிமுகம்!
உன் வீட்டு முகவரியால்
என் வீட்டுக்கும்
முகவரி கொடுத்தாய் நீ!

கூடுடைத்து வரும்
கோழிக்குஞ்சைப் பார்க்கும்
பரவசம்தான்
உன் வீட்டை விட்டு
ஒவ்வொருமுறை
நீ வெளிவரும்போதும்!

இழுத்துச் செருகிய தாவணி
துப்பட்டா போர்த்திய சல்வார்
முழுக்க மூடிய முந்தானை
அத்தனையிலும்
கண்ணியமாகத்தான்
வலம் வருவாய்;
கண்ணியமாக
நீ வைத்த கண்ணியில்தான்
என் கன்னி வீழ்ச்சியே
தொடங்கியது!

பேசத் துடிக்கும் வாய்
கோர்க்கத் துடிக்கும் கரங்கள்
அருகாமை தேடும் பாதங்கள்
அத்தனை உறுப்புகளும்
உன்னால் ஒருமித்திருக்க
இதயமும் உடன்சேர்ந்து
துடிக்காமல்
சிலநேரம் சிரிக்கும்!

நீ எதிர்ப்படும்போதெல்லாம்
என்னுள்ளே
பாரதப்போரே நடக்கும்;
வழக்கம்போல்
உன் முன் தோற்று
நிராயுதபாணியாகி
எனக்கு நானே
சமாதானமாகிப் போவேன்!

என் வீட்டுச் சுவற்றின்
மறுபக்கத்தில்தான்,
மிகவும் பக்கத்தில்தான்
நீயென்றாலும்
ஒருமுறை கூட
உன்னோடு பேசியதில்லை!

உன் பார்வை
என்னைச் சந்திககாத வேளைகளில்
உன்னைச் சந்தித்து வருவதே
தினசரி வேலையாக
உன்னைப் பின் தொடரும்
என் பார்வை!
மவுனப்பார்வையால்கூட
உன் பார்வையைச் சந்திக்கும்
சக்தி வாய்த்ததில்லை!

உனக்காக பலமுறை
தெருப் பசங்களோடு
சண்டையிட்டிருக்கிறேன்
அதுவும்
உனக்குத் தெரிந்திருக்க
வாய்ப்பில்லை!

வாடகை வீடுகளின் சந்திப்பும்
ஒருவித ரயில் சினேகமென்பதை
புரிந்திருந்தாலும்
நீ வீடு மாறியபோதுதான்
முதல்முறை உணர்ந்தேன்
புரியாத ஏதோவொன்றை!

நானுமில்லாத அந்த தெருவிற்கு
இப்போது சென்றாலும்கூட
நீயில்லாத பக்கத்து வீட்டையும்
நீயில்லாத தெருவையும்தான்
பார்க்க முடிகிறது!