Tuesday, December 25, 2007

கடல் மாதாவே!

(ஒரு மீனவரின் புலம்பல்!)

கடற்கரை...
பலருக்கு பொழுதுபோக்கு;
அட, உனக்குமா?!
நீ வந்து
பொழுதுபோக்கிய தினமே
டிசம்பர் 26, 2004!

ஜப்பானிய மொழி
கற்பது கடினமாம்...
சுனாமி
எனும் சொல்லை
இனி நான் மறப்பது
அதைவிட கடினம்!

படிப்பறிவு ஏதுமில்லை
மீன்
பிடிப்பறிவைத் தவிர
எங்களுக்கு நாதியில்லை...
நாங்கள்தான்
வேறுவழியில்லாமல்
மீன்பிடித்து வாழ்கிறோம்...
உனக்கென்ன வந்தது?
எங்களைப் பிடிக்க வந்தாய்!

நம்பிக்கையே வாழ்க்கை...
மரணத்தின் மீதுதான்
தினமும் பயணம்...
கட்டுமர(ண)த்தின்மீதுதான்
தினமும் பயணம்!
உறுதியாகத் தெரியாது
அது இறுதிப் பயணமாயென்று!
ஆம்,
நம்பிக்கையே வாழ்க்கை!

தினம்தினம்
வலை வீசுகிறோம்;
ஏனோ
கவலையை வீச முடியவில்லை...
மூன்றாண்டுகளாகி விட்டது
என் குழந்தைகளைக்
கடலில் தொலைத்து;
இன்றுவரை சிக்கவில்லை
என் வலையில்!

நான் காக்க மறந்த
குழந்தைகளை
உனக்கு இரையாக்கினாய்...
என் வீட்டைக் காக்கும்
இறையாக்கினாய்!
கடல் நோக்கிக்
கும்பிடுகிறேன்...
குழந்தைகள் கூப்பிடும்குரல்
தொலைதூரத்தில் கேட்கிறது!

Sunday, December 23, 2007

மார்கழி


கொடியிலே பூசணிப்பூ
விடிய விடிய காத்திருக்கிறது...
அவளுக்காக!


அடுத்த வீட்டுக் கோலத்தை
எனக்கு முன்பே
யாரோ மிதித்திருக்கிறார்கள்!


கடவுள் புண்ணியத்தில்
நாய் பயமின்றி வாக்கிங்...
பஜனை கோஷ்டி!


கோலமிட வழியில்லாத அபார்ட்மென்டில்

நீர் தெளித்துச் சென்றது

பனி!

Tuesday, December 18, 2007

பருவமழை...

பருவமழை தொடங்கியதும்தான்
எத்தனை மாற்றங்கள்!
பருவமங்கை போல்
கொல்லையில் குவிந்துள்ள
சாணம் கரைத்து
மேனியெங்கும்
மருதாணி பூசிக்கொள்ளும்
கட்டாந்தரை!

உடைந்து
சிதறிய பானையை
மீண்டும்
கரைத்துப் பூசியதுபோல்
முதல் மழையால்
கரடுகள் கரைத்து
கீறல்கள் அடைத்து
மழைநீரை அடைகாக்கும்
பெரியகுளம் கண்மாய்!


அரிவாளின் நுனி தப்பி
உயிர்காத்து நிற்கும்
கருவேல மரங்கள்
அவசர அவசரமாய்
மனச்சுமை இறக்கி
பசுமை காட்டி
மூச்சிழுக்கும்!


அவரைப்பந்தலுக்கு
நட்டுவைத்த
கூவாப்புல் மரக்கழியும்
தன்னிலைமறந்து
களிப்போடு தழைப்பதுபோல்
வெள்ளாமை போட்டவன்
மனதின் ஒரு மூலையில்
நம்பிக்கை துளிர் விடும்!

Thursday, December 13, 2007

சில நேரங்களில் சுவர்களுக்கும் காதுண்டு!இதுக்குப் பயந்துதான்
பல வீட்டுக் குடும்பச்சண்டை
நடுவீதியில்!

நன்றாகத் தேடிப் பாருங்கள்
ரகசியமாகக்
கண்ணும் இருக்கும்!

கல்லறைச் சுவர்கள் மட்டுமே
காது மூடித்
தூங்குகின்றன!

Wednesday, December 5, 2007

இது
யார் மூளைக்குள்
எரிந்த பல்பு?!

முட்டாளே!
எந்த தலைவனுக்காக
இந்த தற்கொலை முயற்சி?!

மெல்ல நட...
இழுத்துக்கட்டிய உயிர்
அறுந்துவிடாமல்!

நறுக்! நறுக்!