பருவமழை தொடங்கியதும்தான்
எத்தனை மாற்றங்கள்!
பருவமங்கை போல்
கொல்லையில் குவிந்துள்ள
சாணம் கரைத்து
மேனியெங்கும்
மருதாணி பூசிக்கொள்ளும்
கட்டாந்தரை!
உடைந்து
சிதறிய பானையை
மீண்டும்
கரைத்துப் பூசியதுபோல்
முதல் மழையால்
கரடுகள் கரைத்து
கீறல்கள் அடைத்து
மழைநீரை அடைகாக்கும்
பெரியகுளம் கண்மாய்!
அரிவாளின் நுனி தப்பி
உயிர்காத்து நிற்கும்
கருவேல மரங்கள்
அவசர அவசரமாய்
மனச்சுமை இறக்கி
பசுமை காட்டி
மூச்சிழுக்கும்!
அவரைப்பந்தலுக்கு
நட்டுவைத்த
கூவாப்புல் மரக்கழியும்
தன்னிலைமறந்து
களிப்போடு தழைப்பதுபோல்
வெள்ளாமை போட்டவன்
மனதின் ஒரு மூலையில்
நம்பிக்கை துளிர் விடும்!
No comments:
Post a Comment