Wednesday, February 28, 2007

3 மாநில தேர்தல் முடிவுகளும் - தமிழக அரசியல் ஜோதிடமும்

பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி கிடைத்துள்ளது. மத்திய அரசுக்கு நெருக்கடி இல்லையென்று சொல்கிறார் மன்மோகன்சிங். அவரோட கஷ்டம் அவருக்கு!

இந்த தேர்தல் முடிவு தமிழ்நாட்டில் பாதிப்பை ஏற்படுத்துமா? கண்டிப்பாக.

தமிழக பாஜக - 50% மகிழ்ச்சி: குருபார்வை மீண்டும் கிடைக்க வாய்ப்பிருக்குது! அதிமுகவுடன் தேர்தல் கூட்டணிக்கு தயார் என்று தமிழக பாஜக அறிவித்துள்ள நிலையில் வெளிவந்துள்ள முடிவு, இன்னமும் இந்தியாவில் பாஜகதான் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இதுவே தமிழ்நாட்டில் அனாதையாக நிற்கும் பாஜகவை அணிசேர வைக்க உதவுமென்று நம்பலாம்! நிச்சயமா நம்பலாம்!

அதிமுக - 50% மகிழ்ச்சி: மேற்கூறிய காரணங்கள் தவிர வைகோ என்ற பியூஸ் போன பல்பை நம்புவதைவிட பாஜக போன்ற அரிக்கேன் விளக்குகளை நம்பலாம் என்ற முடிவுக்கு ஜெயலலிதா வந்திருப்பார். 60ஆவது வயதை நெருங்கும் காலத்தில் இந்திய அளவில் அரசியலில் நுழைந்தால் பிரதமராக மாறலாம் என்ற எண்ணமும் தோன்றலாம்! நிச்சயமா தோன்றலாம்! அதோட தொல்லை பண்ற ஆந்திர காங்கிரஸ் அரசையும் கொஞ்சம் அதட்டிப் பார்க்கலாம்!

திமுக - 50% மகிழ்ச்சி: சனியோட உக்கிரம் குறைய வாய்ப்பிருக்குது! காமராஜர் காலத்துக்குப் பிறகு கொஞ்சம்கொஞ்சமாக வட மாநிலத் தலைவர்களிடம் மதிப்பிழந்து வரும் தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு கூட்டணி மந்திரிசபை கனவு சில காலமாக அடிக்கடி வந்து திமுகவை இம்சை பண்ணுகிறது. பத்திரிக்கையில் பேட்டி அளிக்க வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கூட்டணி மந்திரிசபை பற்றி பேசி சந்தோசப்பட்டுக்கொள்ளும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இனி மறந்தும் அதுபற்றி வாய்திறந்து பேசமாட்டார்கள். இவர்கள் பேச, சோனியாவிடம் தயாநிதிமாறன் போட்டுக்குடுக்க யார் டோஸ் வாங்குவது?!

தமிழக காங்கிரஸ் - 50% வருத்தம்: மேற்கூறிய காரணங்கள் தான்! சனி வழக்கம்போல உச்சத்துலயே இருக்குது!

Saturday, February 24, 2007

தலைக்கவசம் - மூளைக்கு மரியாதை!

குழியினுள் புதைந்தும்
மேடாக உயர்ந்தும்
ஓடாகத் தேய்ந்தும்
இலைமறைகாயாக
மாநகரச் சாலைகள்!

திரும்பிய திசையெல்லாம்
கண்களைக் கவர்ந்து
கவனத்தைச் சிதறடிக்கும்
கவர்ச்சி விளம்பரங்களும்
விளம்பர நடிகைகளும்
வழிநெடுக... வானுயர பேனர்களில்!


அலுவலக அவசரத்தில்
பறந்து வருவதும்
குறுக்கே புகுந்து வருவதும்
சிக்னலில் சிக்கி வருவதும்...
குழம்பிய குட்டையாய்
சாலைப் பாதுகாப்பு!

சாலை விதிகள்
நமக்குத் தெரியும்
எதிரே வருபவருக்கு?
மோதினால்தான் தெரியும்...
தெரியாதென்பது!

அன்று
போருக்கு மட்டுமே தலைக்கவசம்
மற்ற நாளெல்லாம்
பேருக்கு... அலங்காரமாய்!
இன்றோ
சாலைப்பயணமே
போருக்குச் சமம்!
நேருக்கு நேர்,
கெரில்ல யுத்தம்,
விழுப்புண்
அனைத்துமே உண்டு...
கப்பமும் கட்டலாம்!

இன்னுமென்ன தயக்கம்?
தலைக்கவசமணிவதே உன்னதம்!
இது சுமையல்ல...
மூளைக்கு மரியாதை!

Friday, February 23, 2007

உரத்த சிந்தனை!

ஆத்தா குடுத்த ஒத்த ரூவா
ராட்டினம் சுத்தயில தொலஞ்சுடுச்சு
அன்று
தொலஞ்சது ஒரு உண்மை!
இன்னமும்
தொலைக்கப்படும் உண்மைகள்
வயதுக்கேற்ப வளர்ந்தபடி...
ராட்டினம் சுத்தியது தவறா?
ஒத்த ரூவா தொலச்சது தவறா?
உதைக்குப் பயந்துஉண்மை தொலச்சது தவறா?
குறுக்கிட்டது பெண்குரல்;
"சார், சிதம்பரம் லைன்ல இருக்கார்"
"நான் இல்லைன்னு சொல்லு"
தொடர்ந்தது உரத்த சிந்தனை!

Thursday, February 22, 2007

"மாங்கா மன்னன்" நான்காம் மகேந்திரவர்மன்

"மன்னர் இன்றிரவு மாறுவேடத்தில் இந்த தெருவிற்குதான் நகர்வலம் வரப் போகிறார்னு எப்படி அடித்து சொல்கிறாய்?"

"அவசர அவசரமாக தெருவை சுத்தப்படுத்தி புதுசா சாலைகள் போடுறாங்க பார்!"
.......................................................
"மன்னர் சிம்மாசனத்தில் அமராமல் அரசவையில் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டே இருக்கிறாரே! ஏதேனும் வியாதியோ?!"

"மண்ணாங்கட்டி! "F TV" பார்த்து பார்த்து இப்படிக் கெட்டுப்போய் விட்டார்!"
.......................................................
"புலி வேட்டையாடக் கிளம்பிய மன்னர் ஏன் பாதியிலேயே திரும்பி விட்டார்?"

"போகும் வழியில் பூனை ஒன்று குறுக்கே வந்துவிட்டதாம்!"
.......................................................

Tuesday, February 20, 2007

பசுமை

அகண்டபூமியின் பரந்த புல்வெளியில்
முகம்பார்த்து
என் கருவிழியில் தீட்டிய பசுமையை
திட்டுத்திட்டாக அழித்தபடி
இறங்கும் மழைத்துளிகள்!

விஜய டி ராஜேந்தர் Vs நயந்தாரா Fun @ Fun only!

கடந்த ஞாயிற்றுக்கிழமை தற்செயலாக சன் டிவியில் அரட்டை அரங்கம் பார்க்க நேர்ந்தது. விசு இருந்தவரை தாய்குலத்தைக் கட்டிப்போட்டு கண்கலங்க வைத்துக்கொண்டிருந்த அந்நிகழ்ச்சியில், விசு கழன்றுகொண்ட பிறகு பெருத்த தொய்வு. சாலமன் பாப்பையாவினாலும் நிலைமையை சரிக்கட்டமுடியவில்லை போலும். திடீரென விஜய டி ராஜேந்தரை அங்கு இழுத்து விட்டார்கள்! (விஜய டி ராஜேந்தர் இப்போது எந்தப்பக்கம் என்று சரியாகக் கணித்துச் சொல்பவர்களுக்குப் பரிசு கொடுக்கலாம்!)

இவரும் அடுக்குமொழியில் பேசுவார் என அனைவரையும்போல ஆவலோடு எதிர்பார்த்து பார்த்துக்கொண்டு இருந்தால், சிறிது நேரத்தில் ஜீன்ஸ் பேன்ட்டினுள் பதுக்கிவைத்திருந்த மிக நீளமான கைக்குட்டையை எடுத்து கண்ணீரைத் துடைக்கத் தொடங்கி விட்டார்! விசுவுக்கு அக்மார்க் அண்ணன்!

இடையிடையே பக்திச் சொற்பொழிவு! இவரால் சன்டிவிக்கு வரப்போகுது அழிவு!

என் மனதில்பட்ட ஒரு சின்ன யோசனை:
தனக்கு சிம்பு தருகின்ற தொல்லைகளைப் பற்றி விஜய டி ராஜேந்தரின் அரட்டை அரங்கத்தில், நயந்தாரா கண்ணீர் விட்டுக் கதறிப்பேசி, விஜய டிஆரைரையும் அழவைத்து, அதற்குத் தீர்வு காணலாம் அல்லவா?

Saturday, February 17, 2007

தீர்ப்பெழுதும் நேரம்...

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து
தலைவனின் மனதைப் பிடிக்கும்
போட்டா போட்டி...
குறுக்கே விழுந்த மனிதனைக் கடித்து
மலர்களைக் கருக்கி
அடங்காமல் ஓடிச்சு பதவிப் பசி...
தப்பிக்க விட்டது அரசியல்
போராடிப்பிடித்து இழுக்குது சுத்தியல்
பிடி இறுகுவதும் நழுவுவதுமாய்...
மக்கள் முழிக்கும்முன்னே
பட்டிமன்றம் அரசியல் மேடையிலே
தவறு தொண்டன் மேலா?
தலைவன் மேலா?
யோசித்தது போதும் மக்களே!
இது
நீங்கள் தீர்ப்பெழுதும் நேரம்...
தூக்கிலிடுங்கள் அடிவருடி அரசியலை!

Friday, February 16, 2007

"மாங்கா மன்னன்" நான்காம் மகேந்திரவர்மன்

1. "மன்னர் பயங்கர "மூட்-அவுட்"ல் இருக்கிறார்!"
"என்ன காரணம்?"

"அந்தப்புரத்தில் யாரோ ரகசிய கேமரா வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாம்!"


2. "மன்னருக்கு பயங்கர பணக்கஷ்டம்"

"அதற்காக "கொக்ககோலா" விளம்பரப்படத்தில் குத்தாட்டம் போட்டு நடித்திருப்பது டூ மச்!


3. "சபையில் இன்று ஏன் எல்லோரும் ஒருவித பதட்டத்தோடு அமர்ந்திருக்கிறார்கள்?"

"மன்னருக்கு "வீக் எண்ட்" சோமபான மப்பு இன்னமும் குறையவில்லையாம்! அவர் திடீரென "உவ்வே" பண்ண வாய்ப்பிருக்கிறதாம்!"

Thursday, February 15, 2007

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்!

தற்போது திமுக ஆட்சிக்கு வந்ததும் தனது மைனாரிட்டி நிலையை உணர்ந்து பல விஷயங்களை மிகவும் நேர்த்தியாக, சாதுர்யமாக கையாண்டு வருகிறது. பல்வேறு இலவச திட்டங்களுக்காக பணத்தை செலவழித்து வந்தாலும் நிதிநிலையை மறைமுகமாக சரிக்கட்டி வருகிறது. அதில் ஒன்று தான் தமிழக அரசின் போக்குவரத்துத்துறை. கடந்த சில ஆண்டுகளாக பேருந்து கட்டண உயர்வு இல்லாமல் இத்துறை செயல்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பற்றாக்குறையை "ஒரே கல்லில் இரண்டு மாங்காய்" என்ற விதத்தில் சரிக்கட்டுகிறது. ஆம், புதிதாக அறிமுகம் செய்துவைத்துள்ள பேருந்துகளை நினைத்து நாம் ஒருபக்கம் பெருமையாக நினைத்தாலும், இந்த பேருந்துகள் அனைத்துமே "மஞ்சள் பலகை", "பச்சை பலகை", "மஞ்சள் நிற சிறப்பு பேருந்து" "நீல நிற சிறப்பு பேருந்து" என்ற அதிக கட்டணம் வசூலிக்கும் வகையை சேர்ந்த பேருந்துகளாகவே இருப்பதை நீங்கள் கவனிக்கலாம்!

இந்நேரம் பழைய ஜெயலலிதாவாக இருந்தால் பல பக்கங்களுக்கு காட்டமான அறிக்கைகள் விட்டு பந்த் போராட்டம், ஆர்ப்பாட்டம் என இறங்கி இருப்பார். பாவம், விஜயகாந்த் வருகையால் "கால்குலேஷன்" போட்டுப்போட்டுப் பார்த்து பெருமூச்சு விட்டுக்கொண்டு இருக்கிறார்! விஜயகாந்தோ தனது மனைவி பெயரில் உள்ள மண்டபத்தை காப்பாற்றி தன் மனைவியிடம் நல்ல பெயர் எடுக்கும் போராட்டத்திலேயே குறியாக இருக்கிறார். இதுபோதாதா கலைஞருக்கு! மனிதர் மிகவும் தெம்பாக இருக்கிறார்!

மக்கள்தான் உடல் சொகுசாக சீட்டில் குந்தினாலும், மனதால் குமுறிக்கொண்டு பயணம் செல்கிறார்கள்!

Wednesday, February 14, 2007

இப்படிக்குக் காதல்!

உன் உதடும் என் உதடும்
பேசாத தருணங்களில்
பேசட்டும் நம் உதடுகள்!


நிறையை மட்டும் பேசுவதல்ல
நிறைய பேசுவதே
காதல்!


தலைக்கவசம் உனக்கு அவசியம்
பலரையும்
விபத்திலிருந்து காப்பாற்றும்!


உன்னைப் பார்க்கும்போதெல்லாம்
மறந்து விடுகின்றேன்
இமைப்பதற்கு!


இது உனது கவிதை
உன்னைப் பார்த்துப் பார்த்து
எழுதியது!

Tuesday, February 13, 2007

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சமூக சேவை!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பாக வெளிநாட்டுக் கலாச்சாரமான "காதலர் தினத்தை" எதிர்த்து, காதலர் தினத்தன்று சென்னை நகர வீதிகளில் ஜோடியாக திரியும் காதலர்களைப் பிடித்து கட்டாயத் திருமணம் நடத்தி வைக்கும் சமூக சேவை நடக்க இருக்கிறதாம்! அவர்களின் விழிப்புணர்ச்சியைப் பாராட்டுகிறேன். அவர்களின் நன்மை கருதி கூடுதலாக சில யோசனைகளையும், கோரிக்கைகளையும் தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.

1. ஜோடிகளைப் பிடித்து கட்டாய திருமணம் செய்யும் முன்பு அவர்கள் காதலர்கள் தானா என்பதை தெரிந்து கொள்ளுங்கள். அண்ணன், தங்கைகூட சாலையில் சேர்ந்து செல்லக்கூடும், அப்புறம் உங்களுக்கு தர்ம அடி விழுவது நிச்சயம்!

2. ஜோடி மேஜர் தானா என்பதையும் தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் பால்ய விவாகம் செய்து வைத்த குற்றத்திற்கு ஆளாகக்கூடும்! ஜெயிலில் கம்பி எண்ண வேண்டும்!

3. ஜோடிகளின் பெற்றோர் எந்த கட்சி என்பதை கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள். இல்லையென்றால் சொந்த கட்சிக்குள்ளேயே அடிதடி நடக்கவும் வாய்ப்புண்டு!

4. உங்கள் சமூக சேவையை இதோடு நிறுத்தாமல் தொடர வேண்டும். உதாரணமாக, தமிழ் மக்கள் வீட்டிற்குள்ளேயே அமைதியாக கும்பிட்டு, கொண்டாடி வந்த பிள்ளையார் சதுர்த்தி திருநாளை வடநாட்டு கலாச்சாரதோடு குழப்பி ஆயிரக்கணக்கில் பிரம்மாண்டமான பிள்ளையார்களைச் செய்து, ஊர்வலம் நடத்தி மக்களின் நிம்மதியையும், பிள்ளையாரின் நன்மதிப்பையும் கெடுக்கும் சக்திகளை ஒடுக்க முன்வர வேண்டும்!

5. தமிழ் மக்களின் மஞ்சள் நீரூற்றும் பொங்கல் விழாக்களை அழித்து, வண்ணக்கலவைகளை ஊற்றும் வட நாட்டு ஹோலிப்பண்டிகைகளை வளர்க்கும் சக்திகளை ஒடுக்க வேண்டும்!

6. தமிழ் நாட்டுக் கடவுள் அல்லாத ராமருக்காக, தமிழ் மக்களின் உணர்வுகளைத் தூண்டி செங்கற்களை வாங்கிச் சென்ற கூட்டத்தைக் கண்டுபிடித்து முருகப்பெருமான் சன்னிதியில் நிறுத்த வேண்டும்! இப்போதைக்கு இது போதும்!

Sunday, February 11, 2007

பேய்க்கு டீக்குடிக்க காசு!

நேற்று தமிழக அரசின் சுற்றுலா பொருட்காட்சிக்குக் குடும்பத்தோடு சென்றிருந்தேன்.வழக்கம்போல இருமடங்கு விலையேற்றத்துடன் சில்லரை விற்பனை களைகட்டியிருந்தது.

அரசுத்துறை சார்ந்த அரங்குகளில் பெரும்பாலும் சலிப்பூட்டுவதுபோல பெரும்பாலும் புகைப்படக் கண்காட்சியாகவே இருந்தன. சுகாதாரத்துறை, துறைமுகக்கழகம் சார்ந்த அரங்குகளில் மட்டும் ஏதோ கல்லூரி அறிவியல் கண்காட்சியில் நுழைந்ததைப்போல சற்று வித்தியாசத்தை உணர முடிந்தது. ஓரளவு பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன. மக்களிடமும் கொஞ்சம் ஆர்வம் தெரிந்தது.

டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, விதவிதமான ராட்டினங்கள் தவிர கிங்காங் உலகம், வவ்வால் உலகம், அதிசய மிருகங்கள் உலகம் என சிறுவர்களைக் கவரும் சில புதிய அரங்குகளும் இருந்தன. வவ்வால் உலகத்தினுள் நாம் நுழைந்ததும் மெல்லிய இருளுக்குள் வளைத்துவளைத்து பாதை அமைத்து, ஆங்காங்கே தொங்கும் வவ்வால்களும், திடீரென நம் வழியில் குறுக்கிடும் பேய் முகமூடி போட்ட சிறுவர்களையும் வைத்து பயமுறுத்தப் பார்க்கிறார்கள். இவர்களில் ஒரு பேய் எங்களைப் பயமுறுத்திவிட்டு மறுநிமிடமே முகமூடியை கழற்றிவிட்டு டீக்குடிக்க காசு கேட்டது. நானும் "பேய்க்கு டீக்குடிக்க காசு கொடுத்த" அனுபவத்தோடு அரங்கை விட்டு வெளியேறினேன்!

காதலை நம்பாதே!

காதலை நம்பாதே!
காதலியையும் நம்பாதே!
காதல் ஒரு பித்தலாட்டம்!
ஒரு ஏமாற்று வேலை!
முட்டாள்தனமானது!
வெட்டித்தனமானது!
.....
.....
என்னிடத்திலே
வத்தி வைக்கிறது...
நீ பறிக்க மறந்த
அந்த ஒற்றை ரோஜா!

தேடல்

நீ
கை நீட்டிய திசையில்
தொலைதூரத்தில்
தொடுவானத்திலே
நீண்டு பரந்த மேகக்கூட்டம்;
ஏதோ ஒரு மேகச்சிதறலில்
உன் மனதில் பட்ட உருவத்தை
என் மனதில் பதிய வைக்க
நெடுநேரமாய் போராடுகிறாய்!
புரிந்தும் புரியாமல் நான்...
விடா முயற்சியில் நீ...
தேடல் இன்னமும் முடியாமல்...
என்னருகே நீயிருப்பதால்!

Friday, February 9, 2007

அழியாத காதல்

உனக்குத் திருமணமாகி இருக்கலாம்,
குழந்தைகள் பிறந்திருக்கலாம்,
உன் குழந்தைக்கும்கூட
திருமணமாகி இருக்கலாம்...
என் அழியாத நினைவுகளின்
இனியதொரு பக்கத்தில்
உன்னிடம் சொல்லாத காதல்
இன்னமும் கிழியாமல்!

''நறுக்'' கவிதைகள்!

எழுதுவதற்காக வாங்கிய பேனா
முதல் முறை மட்டும்
கிறுக்கப்படும்!


சொல்லாமல் வந்தது மழை
நினைவுகளில்
குடை சுமக்கும் மனிதர்கள்!

தொலைந்த காதல்

நாம்
தினம்தினம்
சந்திக்கும் பூங்காவில்
இப்போதெல்லாம்
பறவைகள் கீச்சொலி
குறைந்து விட்டதாம்!

பூக்காரப்பாட்டி,
சுண்டல்பையன்,
நம்மை நாள்தோறும் வாழ்த்தும்
பிச்சைக்காரனிடமும்
நானே சொல்லிக்கொள்கிறேன்...
கொடுக்கல் வாங்கல்
முடிந்ததென்று!

உன் வரவினை
எதிர்பார்த்தே வாழ்ந்தவன்
இனி
வரவும் இல்லை...
செலவும் இல்லை!

இனி
நிறைய நேரமிருக்கும்
உன்னால் மறந்துபோன
என்னை நினைத்துக்கொள்ள
கண்கள் நனைத்துக்கொள்ள!

நீ சொல்லியோ
நான் சொல்லியோ
ஒன்றும் ஆகப்போவதில்லை
கிடக்கட்டும்
என்னுள்
உன் நினைவுகள் மட்டுமேனும்!

Thursday, February 8, 2007

உலக காதலர்களே!

இது விளம்பர யுகம். வியாபார உலகம். வியாபாரத்தைப் பெருக்க புதுமையான விளம்பரங்களை, உத்திகளை கையாள வேண்டிய கட்டாயத்தில்தான் பல நிறுவனங்கள் உள்ளன.

வியாபாரம் குறைவாக உள்ள காலங்களில் மக்களை இழுக்க பலவிதமான "மேளா"க்களை நடத்துகிறார்கள். மேலும், வருடத்தின் 365 நாட்களுக்கும் ஏதேனும் ஒரு விஷேசத்தைக் கண்டுபிடித்து "அன்னையர் தினம்" முதல் "உலக வயிறு குலுங்க சிரிப்போர் தினம்" வரை விதவிதமான செயற்கை வரலாறுகளை உண்டாக்கி, கொண்டாட்டம் என்ற பெயரில் பணம் பறிக்கும் வேலையை தொடங்கி உள்ளன!

இதில் குறிப்பிடத்தக்க ஒருநாள் தான் காதலர் தினம்! இந்த காதலர் தினத்தை முன்னிட்டு "பணக்கார"க் காதலர்களை தங்கள் ஓட்டலுக்கு வரவழைக்க விதவிதமான நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக மண்டையைப் பிய்த்துக்கொள்வது வழக்கம்.

இம்முறை அவர்களின் குழப்பத்தைத் தீர்க்க என்னாலான யோசனைகளை இப்பகுதியில் கூறுகின்றேன். இலவசமாகத் தான்!

KISSAAN'2007

Special Quest: Jennifer Lopaz

Discothae with Contest: share kisses with ur lovely heart... One pair will be selected as "Pair of the kissaan"

They will get lot of gifts with three days jolly trip to Andamaan Island!

'Lip'erty' 07

(By numerology 'masala' converted as 'massaalaa'!)

Special Quest: Ricky Martin

Discothae with Contest: Slip & Stick Ur lovely lips on' Valentine Wall'. Lovely lips will be selected as "lips. Liperty"

Lots of fashion gifts & one day dating with "Ricky Martin"


Hot Night Massaalaa' 07

Special Quest: Shakeeraa

Hottest Pajans: 'cheenaa thaanaa' Ragasiyaa

Dance! Dance! Dance! with our guests! Anybody can pair with them...

உங்கள் யோசனைகள் வரவேற்கப்படுகின்றன.

Wednesday, February 7, 2007

சமூக சேவை

பார்வையற்ற பெரியவரை
சாலைகடத்தி விட்டதை
பலரும் பார்த்திருப்பார்கள்...
முகம் முழுக்க
சமூக சேவகனென்ற முத்திரை...
மனதுள் பறந்தபடி நடக்கையில்
'சுருக்'கென்று காலில் தைத்தது
முள்!

Tuesday, February 6, 2007

இந்த தாகம் பெருசு!

சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நமது இந்தியா பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தது. ஊருக்கு ஒரு ராஜா, பேருக்கு ஒரு ராஜா என ராஜாக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதனால் வெள்ளைக்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நாம் எளிதில் பலியாகி நமது அரசாளும் உரிமையை வெள்ளையர்களிடம் இழந்தோம். சுதந்திரம் பெற்று ஆகிவிட்டது 60 ஆண்டுகள்.. இன்னமும் நமது உள்நாட்டுக் குழப்பங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. வட இந்திய மக்களை ஒன்றுக்கும் உதவாத மதவாதம் ஆட்டுவிக்கிறது என்றால், தென்னாட்டு மக்களை வாழ்வின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனை ஆட்டுவிக்கிறது! கொக்கோகோலா, பெப்சி போன்ற அமெரிக்க கம்பெனிகள் இந்திய வயல்வெளிகளில் எலி போல துளையிட்டு நம் நீர்வளங்களை சுரண்டும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் இத்தருணத்தில் நமக்குள்ளே நாமே அடித்துக்கொள்கிறோமே, இது கொடுமை அல்லவா? ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடி அமெரிக்காவுக்கு அல்லவா கொண்டாட்டமாக இருக்கும்? பிளாச்சிமடாவும், கங்கைகொண்டானும் நமக்கு வெவ்வேறு மாநிலமாக இருக்கலாம்... அமெரிக்கக் கம்பெனிக்கு அப்படியில்லை. நம் எல்லைகளை இணைக்கும் ஆறுகளே நம்முள் பிளவுகளை வளர்க்கும் சூழ்நிலை தற்போது நிலவுகிறது. குறிப்பாக காவிரிப் பிரச்சனையில் நடுவர் மன்றம் தீர்ப்பு சொன்னபிறகு கர்நாடகத்தில் வெடித்துள்ள கலவரம் மிகவும் வருந்தத்தக்கதாகும். இப்பிரச்சனையில் தொடர்புடைய நான்கு மாநிலங்களுமே கேட்ட அளவினைவிட குறைவான அளவுதான் நீரினைப் பெறவுள்ளன. இதில் பலமுறை மன்றாடி நீரினைப் பெற்றுவந்த தமிழகம், கிடைத்ததே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது. ஆனால் கர்நாடகமும் கேரளாவும் இதனை விடுவதாக இல்லை. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மை, அத்தியாவசியப்பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் என பல்வேறு குழப்பத்தில் தென்னிந்தியா தடுமாற, கையாலாகாத மத்திய அரசாங்கம் பஞ்சாப் தேர்தல்களத்தில் மும்முரமாக இருக்கிறது! தேர்தல் முடியவும் தென்னக மக்களைத்தேடி வருவார்கள் வரிசையாக! மாநிலங்களுக்கு இடைப்பட்ட பிரச்சனைகளில் தேசியக்கட்சிகள் தெளிவில்லாமல், உறுதியில்லாமல் இருப்பது நம்நாட்டு அரசியலின் சாபக்கேடு! வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் வாசகம். இதற்கு அர்த்தம் வேற்றுமை பாராட்டுவதில் ஒற்றுமை என்பதுதானா? சகோதர யுத்தம் தவிர்ப்போம். தீர்ப்பினை ஏற்றுக்கொள்வோம். நம் எதிரி அமெரிக்க கம்பெனிகள்தான் என்பதை உணர்வோம். தணியட்டும் நம் தண்ணீர் தாகம்... பெருகட்டும் எதிரிகளை விரட்டும் தாகம்... ஆம், இந்த தாகம் தான் பெருசு!

Monday, February 5, 2007

கவுண்டமணியும் நகைச்சுவையும்

நேற்று கேபிள் டிவியில் கவுண்டமணி நகைச்சுவை தொகுப்பினைக் காண நேர்ந்தது.அதில் ஒரு காட்சியில் சொந்தமாக கடை நடத்தும் சவரத் தொழிலாளியாக கவுண்டமணி நடித்திருப்பார். தங்கள் அலுவலகக் குழப்பங்களைப்பற்றி பேசிக்கொள்ளும் இருவர், இந்த வேலை பார்ப்பதற்குப் பதில் பார்பர் வேலைக்குப் போகலாம் என்று சலிப்புடன் கூறுவார்கள். சவரம் செய்தபடி இந்த பேச்சுக்களை கவனிக்கும் கவுண்டமணி, உடனே அவனைப்பார்த்து "சவரம் செய்யத் தெரியுமா என்று கெட்கிறார். அவனோ தெரியாது எனச் சொன்னதும், "பிறகு எதற்காக எங்கள் தொழிலைப் பற்றி கேவலமாக பேசுகிறாய்? நாங்க உன்னோட தொழிலைப் பற்றி எதாவது கேவலமா பேசுறோமா? இந்தத் தொழிலை பார்க்கறதுக்கு பதிலா ஒரு ஆபீசர் ஆகலாம், டாக்டர் ஆகலாம்னு சொல்றோமா? என கேள்வி கேட்டு அவர்களையும் சிந்திக்க வைத்து பார்ப்பவர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைக்கிறார். கவுண்டமணிய் என்றதும் செந்திலை உதைப்பதும், கோவை சரளா போன்ற மனைவியாக நடிக்கும் பெண்களிடம் பம்முவதும் மட்டுமே பலருக்கும் தெரியும். நகைச்சுவை உலகத்தில் சில நடிகர்கள் ப்ரேமில் வந்து நின்றாலே மக்கள் சிரிக்கத் தொடங்குவார்கள். அவர்களில் நாகேஷ், சந்திரபாபுவிற்கு அடுத்து கவுண்டமணியை சொல்லலாம். தற்போது வடிவேலு அந்த வரிசையில் வருகிறார். கோவில் பூசாரி வேடம் முதலாக சுடுகாட்டில் வெட்டியான் வேலை வரை அத்தனை கதாபாத்திரங்களையும் ஏற்று அதிலும் தனது எகத்தாளமான நகைச்சுவையை வெளிப்படுதியதாலேயே இன்றும் அடித்தட்டு மக்களால் கவுண்டமணி மிகவும் ரசிக்கப்படும் நடிகராக வலம் வருகிறார். கீரோயிசம் தோற்றுப்போன பல நாயகர்கள் கவுண்டமணியை நம்பி திரையுலகில் காலம் கடத்திய வரலாறும் உண்டு. இருந்தும் இன்றுவரை மேடை ஏறி யாரையும் துதி பாடாமலும், பேட்டி என்ற பெயரில் யாரையும் சீண்டிப் பார்க்காமலும், வீணான கிசுகிசு வம்புகளில் சிக்காமலும் இருப்பது இவரின் மதிப்பைக் காட்டுகிறது... கூட்டுகிறது.முக்கியமாக ஒன்றை சொல்வதென்றால் இதுவரை எந்த கட்சியையும் சாராமல், தனது ஜாதியையும் முன்னிருத்தாமல் இருப்பதை இவரது திரையுலக சாதனை என்றே சொல்லலாம்! மிதி வாங்க பல செந்தில்கள் வந்தாலும் உதை கொடுக்கும் கவுண்டமணியின் இடத்தை அவரால் மட்டுமே நிரப்ப முடியும். "பொறந்த வீடா? புகுந்த வீடா?" படத்தில் நடித்தது போல, குடும்பத்தலைவர் கதாபாத்திரத்தில் இனிவரும் படங்களில் நடித்து டி.எஸ். பாலையா விட்டுச்சென்ற இடத்தையும் கவுண்டமணி நிரப்ப வேண்டும்.

Friday, February 2, 2007

கவிதை

பேருந்துப் பயணத்தில்
மயிர்க்கற்றைகள்
மூச்சுத் திணரும் நிமிடங்களில்
என்னோடு நசுங்கிப்
பிரசவித்தது இக்கவிதை!

சிந்தனை

நாட்டைப் பற்றிய சிந்தனையுடன்
நாள்முழுக்க
டீக்கடை பெஞ்சிலேயே
தவம் கிடந்தாராம் என் தாத்தா
அவரைப்போல எனக்கு
அதிகமாய் சிந்திக்க நேரமில்லை...
சிக்னல் விழுந்து விட்டது.

Thursday, February 1, 2007

உதிர்ந்த மயிலிறகு...

உதிர்ந்த மயிலிறகு
பூஜையறையில்
முருகபெருமான் படத்திலே;
பிய்ந்த சில கற்றைகள்
என் குழந்தையின்
நோட்டுப் புத்தகத்தினுள்;
மயிற்பீலியால்
நாட்டு வைத்தியம் பார்த்த
என் பாட்டி