குழியினுள் புதைந்தும்
மேடாக உயர்ந்தும்
ஓடாகத் தேய்ந்தும்
இலைமறைகாயாக
மாநகரச் சாலைகள்!
திரும்பிய திசையெல்லாம்
கண்களைக் கவர்ந்து
கவனத்தைச் சிதறடிக்கும்
கவர்ச்சி விளம்பரங்களும்
விளம்பர நடிகைகளும்
வழிநெடுக... வானுயர பேனர்களில்!
அலுவலக அவசரத்தில்
பறந்து வருவதும்
குறுக்கே புகுந்து வருவதும்
சிக்னலில் சிக்கி வருவதும்...
குழம்பிய குட்டையாய்
சாலைப் பாதுகாப்பு!
சாலை விதிகள்
நமக்குத் தெரியும்
எதிரே வருபவருக்கு?
மோதினால்தான் தெரியும்...
தெரியாதென்பது!
அன்று
போருக்கு மட்டுமே தலைக்கவசம்
மற்ற நாளெல்லாம்
பேருக்கு... அலங்காரமாய்!
இன்றோ
சாலைப்பயணமே
போருக்குச் சமம்!
நேருக்கு நேர்,
கெரில்ல யுத்தம்,
விழுப்புண்
அனைத்துமே உண்டு...
கப்பமும் கட்டலாம்!
இன்னுமென்ன தயக்கம்?
தலைக்கவசமணிவதே உன்னதம்!
இது சுமையல்ல...
மூளைக்கு மரியாதை!
1 comment:
தனி மனிதனுக்கு இருக்கும் சமூக பொறுப்பை சூசகமாக உணர்த்தும் கவிதை..
நான் ரசித்தேன் உங்கள் கவிதையை..
வாழ்த்துக்கள்.
Post a Comment