Monday, July 23, 2007

ரசம் பூசிய கண்ணாடி

மீண்டும்
பெண் பார்க்கும் படலம்
இது
ஏழாவது என நினைக்கிறேன்...

வழக்கம்போல்
கண்ணாடிமுன் அமர்ந்து
ஒற்றை வகிடெடுத்து
சிறு கற்றை முடி
நெற்றியில் தவழவிட்டு
படியத் தலைவாரி
சவுரியைத் தொங்கவிட்டு
பூக்களால் மூடிமறைத்து
இமைக்குக் கருமையிட்டு
முகத்துக்கு வெண்மையிட்டு
படபடக்கும் இதயத்தால்
வழியும் வியர்வையில்
முகப்பூச்சு நனையாமல்
ஒரு கையால் துடைத்தபடி...
மறு கையால் விசிறியபடி...
இதோ
தயாராக நான்!

எனது மனக்குமுறல்
என் வீட்டுக் கண்ணாடிக்கு
மட்டுமே புரியும்...
பிறர் பார்வைக்காக
அலங்கரிக்கும் எனக்கும்
ரசம் பூசிய கண்ணாடிக்கும்
வித்தியாசம் அதிகமில்லை!

பொய்நிலவு

நிலவு
எனக்கு அறிமுகமான காலத்தில்
பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்!
இரவுகளில்
உண்ண மறுத்தபோது
எனக்கான உணவை
என்னோடு பகிர்ந்து சினேகமானது!
மொட்டை மாடியில்...
தூக்கம் தொலைந்த இரவுகளில்
நிலவோடு நான்
கண்ணாமூச்சி விளையாடியிருக்கிறேன்!
ராகுவும் கேதுவும்
விழுங்கிய நேரங்களில்
முழுதாகத் திரும்பும்வரை
கண் விழித்திருக்கிறேன்!
இன்றும்கூட
நிலவினைப் பார்க்கும்போதெல்லாம்
காதல் பிறக்கிறது...
உடன் கவிதையும் பிறக்கிறது!
உண்மை ஒருபுறம் இருக்கட்டும்...
பொய்நிலவு தான்
எனக்குப் பிடித்திருக்கிறது!

Tuesday, July 17, 2007

ஞாபகம் வருதே!

பேருந்திலே பயணம்;
பேருந்து முன்னோக்கிச் செல்ல
என் மனமோ பின்னொக்கிய பயணத்தில்...
யாரோ வீடு கட்ட
குவித்து வைத்த மணல்...
எங்களது மைதானமாகும்!

அடுக்கி வைத்த செங்கலை
பேருந்தாக உருமாற்றி...
மணல்குன்று முழுவதும்
கொண்டை ஊசி வலைவுப் பாதையமைத்து
வண்டி ஓட்டி விளையாடிய நினைவு!

வளைந்து நெளிந்து ஓட்டுவதும்,
இடிக்காமல் திருப்புவதும்,
மோத விட்டுச் சிரிப்பதும்,
மணல், மண்ணாகும் வரை தொடரும்!

இன்றும் என் மகன்
வண்டி ஓட்டி விளையாடுகிறான்;
கணிணித் திரையில்
கண்களைப புதையவிட்டு!
அவனது மைதானம்
"மவுஸ்பேட்" அளவு தான்!
என்னொடு ஒப்பிடும்போது
கொடுத்து வைக்காதவன் அவனே!
கொடுத்து வைத்தவனும் அவனே!

"டிக்கெட்ட எடுப்பா"
நினைவுகள் நொறுங்க,
நிகழ்காலத்தில் நான்;
பயணச்சீட்டு வாங்க மறந்தது
இப்போது என் ஞாபகத்தில்!!

Thursday, July 12, 2007

தெருவோரக் கவிதை

பறையோசையின் அதிர்வில்
அவிழும் கைலியைப் பற்றியபடி
தொடரும் குத்தாட்டம்...
இவர்களின் சாராய நெடி கரைக்க
ரோஜாப்பூவைச் சுமந்தபடி
பிணம் பின்னால் வரும்!
கடைசிவரை
அழவைத்த பெற்ற உறவு
முதன்முறையாய்
அழுதபடி முன்செல்லும்!
தலையைக் காட்ட வந்த உறவுக்கூட்டம்...
ஊருக்குக் கிளம்பும்
நேரம் பார்த்தபடி உடன்செல்லும்!
பாதை மறித்து
இறுதி யாத்திரை செல்ல...
காத்திருப்போரின் சாபத்தையும்
பிணம் சுமந்து செல்லும்!

Tuesday, July 10, 2007

வழக்கம் போல!

யாரோ
யார் மீதோ மோத
நடுத்தெருவில் ரத்த ஆறு
எல்லோரும் கூடி நின்று
'உச்'சுக் கொட்ட,
எல்லோரும் எதிர்பார்த்த
யாரோ ஒருவர்
அவர்களை
ஆட்டோவில் தூக்கிச் சென்றார்...
பார்த்ததைப் பகிர்ந்தபடி
எல்லோரும் கலைந்தோம்,
வழக்கம் போல!

Monday, July 9, 2007

ஜனனம்

காலடியில் பூமி பிளக்க

அதலபாதாளச் சறுக்கலில்

அடங்கா உயிர்வலியின் அலறல்...

பூமி விலகவிலகத்

தொடரும் உரசலில்

கீறல்களில் உயிர் கசிய...

முடிவில்லா ஆழத்தில்

இமை இறுக்கி உடல்குறுக்கி

இதயமும் சற்று சுருங்க...

இடைவிடாது அலறியபடி

முடிவிலாது விலகும்

புவியின் பாதம்வரை தொட்டு

மறுபக்கம் கீறி விண்ணில் வீழ,

மெல்லிய அழுகைச் சத்தம்

உலகம் நிரப்பும்!

வலியின் வீரியம் மரத்து

விழி நீர்பிரிக்க...

உதடுகள் விரிந்து மெல்லச் சிரிக்கும்!

மரணம் வென்ற ஜனனம்...

வலிமையின் அடையாளமே!

அபார்ட்மென்ட் வாழ்க்கை!

ஐந்தடுக்கு அபார்ட்மென்ட்டில்
எனது இறுதி நாட்கள்...
படுக்கையிலே நான்;
கைக்கெட்டும் தூரத்தில்
டைஜின் மாத்திரைகளும்
இருமல் சிரப்புகளும்...
மகனும் மருமகளும்
நாள் முழுக்க
அலுவலகத்திலே...
அடுத்த தலைமுறைக்குப்
பொருள் சேர்க்க!
புது ஏசி போட்டதிலிருந்து
இறுகப் பூட்டிய கதவுகளால்
கொசு வருவதில்லை...
வியர்வையும் கூட!
இதனையும் மீறி
முறுக்கேறிய ஆட்டோ அலறலும்,
தள்ளுவண்டி
வியாபாரிகளின் கூவலும்,
மேண்டலின் சீனிவாசின்
மெல்லிசையும்,
பக்கத்து வீட்டு
மீன் குழம்பு வாசனையும்,
செவியோடும், நாசியோடும்
பேசிச் செல்லும்!
அறையினுள்ளே
நடைபயிலும் போது
இடிக்கப்படும் எதிர்வீடு
என் கண்களோடு பேசும்...
எனக்கு மட்டுமே
அதன் வலி புரியும்!
இப்போது சில நாட்களாக
ஏதுமில்லா தனிமையிலே
என் மனதோடு பேச
மரணம் மட்டுமே இங்கு வரும்...
மறக்காமல்
விடைபெற்றுச் செல்லும்!

Sunday, July 8, 2007

அம்மா...

குழந்தைப் பருவந்தொட்டே
தொட்டதெற்கெல்லாம்
அம்மாவிடம் அடிவாங்கியே
வளர்ந்து வந்தவன்...
பென்சில் தின்றதற்காக
இடக்கையிலே சூடுபட்டது
உற்றுநோக்கினால் இன்றும் தெரியும்!
இன்று அதே அம்மா
என் குழந்தையோடு குழந்தையாக...
கண்ணில் கண்ணீர்வர
கொஞ்சிக் கொஞ்சிச் சிரிக்கிறாள்!
சாக்பீஸ் தின்றாலும
சோற்றைக் கொட்டினாலும்
அதட்டாமல் திருத்துகிறாள்!
கை சூப்பச் சொல்லி
வேடிக்கை பார்க்கிறாள்!
எனக்கும் வேடிக்கையாக இருக்குது...
இத்தனை நாளாய்
இந்த மனதை
எங்கே ஒளித்திருந்தாய்?

Thursday, July 5, 2007

குட்டிச்சுவர்

நான்கு சுவற்றுக்குள்
என்ன கஷ்டமோ தெரியவில்லை
மூன்று தரைமட்டமாக,
ஒன்று மட்டும்
இன்று குட்டிச்சுவராக!
பத்தாண்டுகளுக்கும் மேலாக
இதே மாதிரிதான்;
இதே இடத்தில்தான்;
ஒன்றிரண்டு
செங்கல் மட்டுமே குறைகிறது!

ராஜா வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை;
தனிச் சரித்திரம்
இருந்திடவும் வாய்ப்பில்லை!
ராஜா மாதிரி
யாரோ வாழ்ந்திருக்கலாம்...
தலைமுறை இடைவெளியால்
பாகப்பிரிவினை வந்திருக்கலாம்;
பங்குச் சண்டையால்
குட்டிச்சுவரு
இன்றுவரை குட்டிச்சுவராகவே...
இதைத்தவிர தல புராணம்
வேறிருக்க வாய்ப்பில்லை!

வாரப்பத்திரிக்கை,
திரைப்படங்கள்,
அரசியல்,
அனைத்து விளம்பரங்களும்
ஒட்டப்பட்டும்
கிழித்தெறியப்பட்டும்
போர்க்களமாயத் தெரிகிறது!
சுருக்கமாகச் சொன்னால்
சுவரொட்டி பலத்தால்தான்
சுவரே நிற்கிறது!

தேர்தல் நேரங்களில்
இதற்கும் புதுவாழ்வு வரும்...
முன்பதிவு செய்யப்பட்டு
வெள்ளையடிக்கப்படும்!
உடன்
ஏதேதோ பெயர்களைக் கிறுக்கி
திருஷ்டி கழிக்கப்படும்!
குட்டிச் சுவற்றின் ராசியால்
சில நேரங்களில்
சிலர் வெல்வதும் நடக்கும்!

வெற்றுச் சுவர்தான்...
இன்றும்
'நெருக்கடி' நேரங்களில்
'அவசரமாய்' ஒதுங்க
இதைவிட்டால் வழியில்லை...
செத்தும் கொடுத்த சீதக்காதி போல்!

Wednesday, July 4, 2007

பள்ளிக்கூட நினைவுகள்...

அரிது அரிது
திட்டாத ஆசிரியர் அரிது!
அதனினும் அரிது
திகட்டாத ஆசிரியர்!

குருசாமி வாத்தியார்
பாடம் நடத்தினால்
படம் பார்ப்பதுபோல
அத்தனை இன்பம்!
பிரம்பினால் அடித்து
உடம்பை உழுததில்லை...
சிரிக்கப் பேசி
மனதை உளவு பார்த்து
உழுது போட்டுப்
பாடங்களை விதைப்பதில்
அவருக்கு நிகர் அவரே!

'பச்சைமா மலைபோல் மேனி..."
திருமால் வாழ்த்துப்பாடலும்
'தன்னருந்திருமேனி..."
இரட்சணிய யாத்திரிகமும்
அவர் சொல்லி நாம் கேட்டால்
மதம் கடந்து மனதினை உருக்கும்!

வீட்டுப்பாடம் தந்ததில்லை
மனப்பாடம் தேவையில்லை
அவர்நடத்திக் கேட்டது
கனவினில் கேட்டாலும்
'கடகட"வெனக் கொட்டும்!

குப்தர்கள் காலம் பொற்காலம்...
வரலாற்றில் படித்திருக்கிறேன்
எனது பள்ளி வரலாற்றில்
அவரும் ஒரு குப்தரே!

எல்லோர் பள்ளி வரலாற்றிலும்
குருசாமி வாத்தியார்
இருந்திருப்பார்
வேறு பெயர்களில்...
வேறு வேறு உருவங்களில்!

குருவும் தட்சணை கொடுக்கும்
இக்கால குருகுலக் கல்வியில்
இன்னமும் மறையாத
குருசாமி வாத்தியார்களுக்கு
வாழ்த்துக்கள்!!!

Monday, July 2, 2007

அமெரிக்கா "மாதிரி" சென்னைப்பட்டணம்!

(இது ஒரு பாமரத்தனமான கவிதை)

அமெரிக்கா "மாதிரி"
மாறப்போகுது
சென்னைப்பட்டணம்!
அதுல வாழ்வதற்கு
நமக்கு நாமே
பெருமப்பட்டுக்கணும்!
ராசா மாதிரி வாழ்க்கை!
அதில்
தினம் நடக்குது வேடிக்கை!

தாயத்து வித்த காலம் மாறிடுச்சு...
இப்போ தகடு விக்கிறது
பேஷனாப்போச்சு!
ரேஷன் கார்டே
இன்னும் கிடைச்சபாடில்லை...
கிரடிட்டு கார்டை வைக்க
பாக்கெட்டு பத்தலை!
அடயாளம் தெரியாதவனும்
போன் போட்டுப் பேசுறான்...
கூடப்பொறந்த மாதிரி
அட்வைசு பண்ணுறான்!
கடைசியில்
வேண்டாத வீட்டுக்கு
கடன் வாங்க வைக்கிறான்!

"சிம்ரன்" மாதிரி
பார்த்துக் கட்டின மனைவி
வேர்த்துக்கொட்டுவதோ
அண்ணாச்சி கடையில்?
இன்னைக்குப் பறிச்ச "மாதிரி"
நறுக்கி வச்ச காரட்டு...
பளபளக்கும் பாக்கெட்டு
ரிலயன்சு ப்ரெஸ்சு
அது நம்ம ஸ்டேட்டசு!

பணத்துக்கில்லை திண்டாட்டம்...
சாட்டர்டேன்னாலே கொண்டாட்டம்!
தேவலோகம் மாதிரி
டிஸ்கோதே கிளப்பு...
தேவதைகள் ஜோடி சேர
பட்டையக் கெளப்பு!
ஏதுமில்லாதவனுக்கு
ரஸ்னா...மோரு...
நம்ம லெவலுக்கு
விஸ்கி... பீரு!
தள்ளாடு... தடுமாரு...
விடிய விடிய தடம்மாறு!
ரகசியம் ஏதுமில்லா
ரகசிய உலகமிது!

சண்டே என்றாலே ஷாப்பிங்கு!
கடல் மாதிரி கடைகள்...
கண்ணைப்பறிக்கும் உடைகள்!
போத்தீசு, ஜெயச்சந்திரன்,
சென்னை சில்க்ஸ்...
பேண்டலூண், குளோபஸ்சு
லேண்ட்மார்க்கு...
லொட்டு, லொசுக்கு
எல்லாமே சுத்தியாச்சு!
வாரிக்கொட்டிக்கொட்டி
குட்டிக்காரை நிறச்சாசு!
சாணை தீட்டித்தீட்டியே
கிரடிட்டுக் கார்டெல்லாம்
கூர்மழுங்கிப் போச்சு!

வெளிநாட்டுக் கம்பனியெல்லாம்
அணிவகுக்குறான்...
வெயிலு நமக்கு பலவீனம்...
அவனுக்கோ
அது தான் மூலதனம்!
குளிரவச்சு குளிப்பாட்டி
பணம் கறக்குறான்!
டீசென்ட்டா உழைச்ச பணத்த
டீசென்ட்டா கொள்ளையடிக்கிறான்
ஏசி ஷோரூமிலே!!

தீண்டாமை எனப்படுவது...

குருவாயூர் கோவிலுக்குள்
மதம் பிடித்த யானைகளுக்கு
அனுமதியுண்டு...
மதம் பிடிக்காத
மனிதர்களுக்கோ அனுமதியில்லை!


ஐயப்பன் கோவிலுக்குள்
கன்னிச் சாமிகளுக்கு
அனுமதியுண்டு...
கன்னிகள் சாமிகளாக
அனுமதியில்லை!


சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு
தமிழ்நாட்டில் இடமுண்டு...
கோவிலுக்குள் மட்டும்
தமிழுக்கு அனுமதியில்லை!


பள்ளியில் படித்த நினைவு;
தீண்டாமை
மனிதத்தன்மையற்ற செயல்...
உண்மைதான்
அது தெய்வீகச் செயல்!