Thursday, July 5, 2007

குட்டிச்சுவர்

நான்கு சுவற்றுக்குள்
என்ன கஷ்டமோ தெரியவில்லை
மூன்று தரைமட்டமாக,
ஒன்று மட்டும்
இன்று குட்டிச்சுவராக!
பத்தாண்டுகளுக்கும் மேலாக
இதே மாதிரிதான்;
இதே இடத்தில்தான்;
ஒன்றிரண்டு
செங்கல் மட்டுமே குறைகிறது!

ராஜா வாழ்ந்திருக்க வாய்ப்பில்லை;
தனிச் சரித்திரம்
இருந்திடவும் வாய்ப்பில்லை!
ராஜா மாதிரி
யாரோ வாழ்ந்திருக்கலாம்...
தலைமுறை இடைவெளியால்
பாகப்பிரிவினை வந்திருக்கலாம்;
பங்குச் சண்டையால்
குட்டிச்சுவரு
இன்றுவரை குட்டிச்சுவராகவே...
இதைத்தவிர தல புராணம்
வேறிருக்க வாய்ப்பில்லை!

வாரப்பத்திரிக்கை,
திரைப்படங்கள்,
அரசியல்,
அனைத்து விளம்பரங்களும்
ஒட்டப்பட்டும்
கிழித்தெறியப்பட்டும்
போர்க்களமாயத் தெரிகிறது!
சுருக்கமாகச் சொன்னால்
சுவரொட்டி பலத்தால்தான்
சுவரே நிற்கிறது!

தேர்தல் நேரங்களில்
இதற்கும் புதுவாழ்வு வரும்...
முன்பதிவு செய்யப்பட்டு
வெள்ளையடிக்கப்படும்!
உடன்
ஏதேதோ பெயர்களைக் கிறுக்கி
திருஷ்டி கழிக்கப்படும்!
குட்டிச் சுவற்றின் ராசியால்
சில நேரங்களில்
சிலர் வெல்வதும் நடக்கும்!

வெற்றுச் சுவர்தான்...
இன்றும்
'நெருக்கடி' நேரங்களில்
'அவசரமாய்' ஒதுங்க
இதைவிட்டால் வழியில்லை...
செத்தும் கொடுத்த சீதக்காதி போல்!

2 comments:

நளாயினி said...

வெற்றுச் சுவர்தான்...
இன்றும்
'நெருக்கடி' நேரங்களில்
'அவசரமாய்' ஒதுங்க
இதைவிட்டால் வழியில்லை...
செத்தும் கொடுத்த சீதக்காதி போல்!
புரிகிறது.

அனாலும் அந்த பழமொழிதான் கேட்டறியாத பழமொழி. கொஞ்சம் புரியவையுங்களேன்.

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

புரிந்தவரை புரிந்து கொள்ளுங்கள்! சேதக்காதி வள்ளல் குறித்து சிறுவயதில் பாடத்தில் படித்த நினைவு. கண்டிப்பாக விளக்கம் பெற்று உங்களுக்குச் சொல்கிறேன். அதுவரை...புரிந்தவரை புரிந்து கொள்ளுங்கள்!!