Thursday, August 5, 2010

வறுமை!


வேற்றுக்கிரகத்திலல்ல,

என்னுலகில் தான்
இவர்களும்!

பூமிக்கு இருதுருவமென்று படித்திருக்கிறேன்
தவறு
இரு உருவங்கள்!

உடல் இளைத்த நாகரீகமும்
மறுபுறம்
உடல் இளைக்கும் நாகரீகமும்!

உலகம் சுருங்குகிறதாம்;
உடற்சுருக்கங்கள் சிரிக்கின்றன
எனைப் பார்த்து!

வறுமை தான்
தின்று கொண்டிருக்கிறது...
தினம் இவர்களை!

இனி
சிதறும் உணவுப் பருக்கைகளில்
இவர்கள் முகம் தெரியட்டும்!

படமெடுத்தவர்களைப் பார்த்தால்
கேட்க வேண்டும்
உணவளித்தீர்களா என்று!

புகையும் அடுப்படி!


நள்ளிரவு வானமாய்
கரிப்பிடித்த அடுப்படிகள்
விடிஞ்சு போச்சு!

திரிகையும், அம்மியும்
உரலும், குழவியும்கூட
உருமாறிப்போச்சு!

புகைக்கூண்டுகளும்
உசுப்பேத்தும் ஊதுகுழலும்
ஒழிஞ்சே போச்சு!

சமையல் வெந்ததை சத்தமிட்டு
சமையலே சொல்லும்
காலம் வந்துடுச்சு...

"இன்னுமா ஆகல?"
அதட்டுவது ஆணாகவும்
"இதோ ஆயிடுச்சு!"
படபடப்பது பெண்ணாகவும்
இன்னும் அப்படியே!

காமராஜர் என்றொரு அரசியல்வாதி!

நான் பிறக்குமுன்பே இறந்துபோன
காமராஜரைப் பற்றித்தான்
இன்றுகூட என் அப்பா
பெருமை பேசிப்பேசி
மாய்கிறார்!

ஒரு பினாமி இல்லை
புறம்போக்கு நிலமுமில்லை
பள்ளி கல்லூரி
எதுவுமில்லை
பட்டாசு கொளுத்திப் போடக்கூட
பட்டாளமில்லை!
பிறகெப்படி நம்புவேன்
இவர் அரசியல்வாதியென்று!

இவர் படிக்காத மேதையாம்!
அரசியலிலிருந்தும்
ஒரு டிகிரி கூட 'வாங்க'த் தெரியாத
இவர் அரசியலில் பேதையென்பேன்!
மதிய உணவு கொடுத்து
பள்ளிக்கு அழைத்தாராமே பிள்ளைகளை?
படிக்காத கூட்டமிருக்கும்வரையே
பதவி நிலைக்குமென்ற
அரிச்சுவடி கூட தெரியாத
இவரெல்லாமா அரசியல்வாதி?!

ஒருமுறை கூட
திருமணமாகவில்லை
வாரிசும் இல்லை
சொத்துமில்லை, பத்துமில்லை
சொந்தபந்தத்திற்கு
ஒரு பதவியுமில்லை!
இவரைப் போய்
"கிங் மேக்கர்" என்கிறார்கள்!

இன்றோ
இவர் ஆட்சியை அமைக்க
கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லை
கொள்கையைப் பின்பற்றத்தான்
எவருமில்லை!
இவரணிந்த கதராடையை,
பாதயாத்திரை பக்தர்களின்
சீருடைபோல்
அவ்வப்போது மட்டுமே அணிகிறார்கள்
அடையாளத்திற்கு!

என் அப்பாவிடம் சொன்னேன்
இவர் அன்று
ஒருமுறைதான் தோற்றார்...
இன்றுவரை இருந்திருந்தால்
எல்லாத் தேர்தல்களிலும்
சொல்லிவைத்தாற்போல்
தோற்றுக்கொண்டே இருந்திருப்பார்!
விருந்து வைக்கத்தெரிந்தும்
'மருந்து' வைக்கத் தெரியாத
இவர் அரசியல்வாதியல்ல,
அரசியல் அப்பாவி!