Tuesday, February 6, 2007
இந்த தாகம் பெருசு!
சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் நமது இந்தியா பல்வேறு சமஸ்தானங்களாக பிரிந்து இருந்தது. ஊருக்கு ஒரு ராஜா, பேருக்கு ஒரு ராஜா என ராஜாக்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இதனால் வெள்ளைக்காரனின் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு நாம் எளிதில் பலியாகி நமது அரசாளும் உரிமையை வெள்ளையர்களிடம் இழந்தோம். சுதந்திரம் பெற்று ஆகிவிட்டது 60 ஆண்டுகள்.. இன்னமும் நமது உள்நாட்டுக் குழப்பங்கள் தொடர்ந்தபடியே இருக்கின்றன. வட இந்திய மக்களை ஒன்றுக்கும் உதவாத மதவாதம் ஆட்டுவிக்கிறது என்றால், தென்னாட்டு மக்களை வாழ்வின் உயிர்நாடியான தண்ணீர் பிரச்சனை ஆட்டுவிக்கிறது! கொக்கோகோலா, பெப்சி போன்ற அமெரிக்க கம்பெனிகள் இந்திய வயல்வெளிகளில் எலி போல துளையிட்டு நம் நீர்வளங்களை சுரண்டும் முயற்சியில் தீவிரமாக இருக்கும் இத்தருணத்தில் நமக்குள்ளே நாமே அடித்துக்கொள்கிறோமே, இது கொடுமை அல்லவா? ஊரு ரெண்டுபட்டால் கூத்தாடி அமெரிக்காவுக்கு அல்லவா கொண்டாட்டமாக இருக்கும்? பிளாச்சிமடாவும், கங்கைகொண்டானும் நமக்கு வெவ்வேறு மாநிலமாக இருக்கலாம்... அமெரிக்கக் கம்பெனிக்கு அப்படியில்லை. நம் எல்லைகளை இணைக்கும் ஆறுகளே நம்முள் பிளவுகளை வளர்க்கும் சூழ்நிலை தற்போது நிலவுகிறது. குறிப்பாக காவிரிப் பிரச்சனையில் நடுவர் மன்றம் தீர்ப்பு சொன்னபிறகு கர்நாடகத்தில் வெடித்துள்ள கலவரம் மிகவும் வருந்தத்தக்கதாகும். இப்பிரச்சனையில் தொடர்புடைய நான்கு மாநிலங்களுமே கேட்ட அளவினைவிட குறைவான அளவுதான் நீரினைப் பெறவுள்ளன. இதில் பலமுறை மன்றாடி நீரினைப் பெற்றுவந்த தமிழகம், கிடைத்ததே போதும் என்ற மனநிலைக்கு வந்துவிட்டது. ஆனால் கர்நாடகமும் கேரளாவும் இதனை விடுவதாக இல்லை. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பின்மை, அத்தியாவசியப்பொருட்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் என பல்வேறு குழப்பத்தில் தென்னிந்தியா தடுமாற, கையாலாகாத மத்திய அரசாங்கம் பஞ்சாப் தேர்தல்களத்தில் மும்முரமாக இருக்கிறது! தேர்தல் முடியவும் தென்னக மக்களைத்தேடி வருவார்கள் வரிசையாக! மாநிலங்களுக்கு இடைப்பட்ட பிரச்சனைகளில் தேசியக்கட்சிகள் தெளிவில்லாமல், உறுதியில்லாமல் இருப்பது நம்நாட்டு அரசியலின் சாபக்கேடு! வேற்றுமையில் ஒற்றுமை என்பதே நாம் பெருமையாக சொல்லிக் கொள்ளும் வாசகம். இதற்கு அர்த்தம் வேற்றுமை பாராட்டுவதில் ஒற்றுமை என்பதுதானா? சகோதர யுத்தம் தவிர்ப்போம். தீர்ப்பினை ஏற்றுக்கொள்வோம். நம் எதிரி அமெரிக்க கம்பெனிகள்தான் என்பதை உணர்வோம். தணியட்டும் நம் தண்ணீர் தாகம்... பெருகட்டும் எதிரிகளை விரட்டும் தாகம்... ஆம், இந்த தாகம் தான் பெருசு!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நல்ல பதிவு.
பி.கு; அழகான வத்திராயிருப்பை இப்படி வாட்ராப்பா ஆங்கிலப் படுத்திட்டீங்களே!:)
nanri. Yenna seivathu.. vellaikkaaran vaayil vathiraayiruppu yenra peyar nulayavillaaye!!
Gautham
Post a Comment