நேற்று தமிழக அரசின் சுற்றுலா பொருட்காட்சிக்குக் குடும்பத்தோடு சென்றிருந்தேன்.வழக்கம்போல இருமடங்கு விலையேற்றத்துடன் சில்லரை விற்பனை களைகட்டியிருந்தது.
அரசுத்துறை சார்ந்த அரங்குகளில் பெரும்பாலும் சலிப்பூட்டுவதுபோல பெரும்பாலும் புகைப்படக் கண்காட்சியாகவே இருந்தன. சுகாதாரத்துறை, துறைமுகக்கழகம் சார்ந்த அரங்குகளில் மட்டும் ஏதோ கல்லூரி அறிவியல் கண்காட்சியில் நுழைந்ததைப்போல சற்று வித்தியாசத்தை உணர முடிந்தது. ஓரளவு பயனுள்ள குறிப்புகள் கிடைத்தன. மக்களிடமும் கொஞ்சம் ஆர்வம் தெரிந்தது.
டெல்லி அப்பளம், மிளகாய் பஜ்ஜி, விதவிதமான ராட்டினங்கள் தவிர கிங்காங் உலகம், வவ்வால் உலகம், அதிசய மிருகங்கள் உலகம் என சிறுவர்களைக் கவரும் சில புதிய அரங்குகளும் இருந்தன. வவ்வால் உலகத்தினுள் நாம் நுழைந்ததும் மெல்லிய இருளுக்குள் வளைத்துவளைத்து பாதை அமைத்து, ஆங்காங்கே தொங்கும் வவ்வால்களும், திடீரென நம் வழியில் குறுக்கிடும் பேய் முகமூடி போட்ட சிறுவர்களையும் வைத்து பயமுறுத்தப் பார்க்கிறார்கள். இவர்களில் ஒரு பேய் எங்களைப் பயமுறுத்திவிட்டு மறுநிமிடமே முகமூடியை கழற்றிவிட்டு டீக்குடிக்க காசு கேட்டது. நானும் "பேய்க்கு டீக்குடிக்க காசு கொடுத்த" அனுபவத்தோடு அரங்கை விட்டு வெளியேறினேன்!
No comments:
Post a Comment