Saturday, March 28, 2009

கர்வப்படு; கறுப்பாய் பிறந்ததற்கு...

கறுப்பு...
நிறங்களின் தாய்
மற்றதெல்லாம் சேய்!

வண்ணக்கலவையின்
உச்சமிது
மற்றதெல்லாம் மிச்சமே!

நிறமிகளின் நிறையே
கறுப்பு
குறைபாடே வெண்மை!

இல்லாமையின் நிறம்
கறுப்பு
எல்லாமிருப்பதின் நிறமும்
கறுப்புதான்!

துக்கத்தின் நிறமென்று
யாரிதைச் சொன்னது?
தூக்கத்தின் நிறமென்றால்
அதில் உண்மையிருக்கும்!
தூக்கம் வந்தாலே
கரு'மை" பூசிய இமைகள்
கண்களுக்கு
கருமை போர்த்தும்!

வெண்மேகம்
கருமை சூடினால்
பூமியெங்கும்
பூப்பூக்கும்!

கருவண்டு
சுவைத்திடவும்
மலர்களெல்லாம்
தேன் வடிக்கும்!

கருமை மூடிய
இரவில்தான்
அடுத்த தலைமுறைக்கான
தேடல் நடக்கிறது!
கருவறை தொட்டு
உலகைக் காணும்வரை
கறுப்பின் கதகதப்புதான்
பாதுகாப்பே!

இயற்கையின்
தொலைக்காட்சியில்
பிறை நிலவும்
நட்சத்திரமும்
கருமை தந்த
அலுக்காத
நெடுந்தொடரல்லவா?!

வெண்மையை
ஆதிக்கமாகவும்
கருமையை
அடிமையாகவும்
வரலாறு பேசுகிறது!
இன்றோ
வெண்மையை
ஆதிக்கம் செய்கிறது
கறுப்பு!

கறுப்பாய் பிறந்ததற்கு
வருத்தப்பட்டால்
புன்னகை தொலைத்திருக்கும்
வைரம்!

கர்வப்படு;
கறுப்பாய் பிறந்ததற்கு...
சில நிமிடங்களாவது!

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

//வெண்மேகம்
கருமை சூடினால்
பூமியெங்கும்
பூப்பூக்கும்//

நச்..வரிகள்

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

நன்றி நண்பரே!