Monday, August 29, 2011

செங்கொடி உயரட்டும்!

அன்று
ஒரு முத்துக்குமார் பற்றவைத்தான்
இன்று பற்றவைத்திருக்கிறாள்
செங்கொடி!
செங்கொடியேந்திப் போராடும்
மனிதரிடையே
செங்கொடியே போராடி
வீழ்ந்திருக்கிறது!
கொடிகாத்த குமரனின் கூட்டமோ
எள்ளி நகையாடுகிறது!

படுகொலையைத் தடுக்க
தன்னையே தொலைத்திருக்கிறாய்...
ஆம்;
"என்னுயிரை எடுத்துக்கொண்டு
என் மகனைக் காப்பாற்று"
என வேண்டும் தாய்க்கும்
உனக்கும் வித்தியாசமில்லை!
இந்திய ஜனநாயகத்தின் கோரப்பசிக்கு
இன்னொரு உயிர் கிடைத்ததே
மிச்சம்!

நம் தமிழ்நாட்டிலேயேதான்
பாதுகாப்பாக இருக்கிறது...
நம் தமிழர்களை
கொல்லக் காத்திருக்கும்
தூக்குக் கயிறு!
அறுத்தெரியவும் முடியாமல்
எரிக்கவும் முடியாமல்
தன்னையே எரித்துவிட்டாயே!
உன் மனது
எவ்வளவு தூரம் எரிந்திருக்கும்?

அன்னாஹசாரேக்களால்
இருட்டடிக்கப்பட்ட
சகோதரர்களின் உயிர்ப்பிரச்சனையில்
ஊடக வெளிச்சமில்லாததால்
உன்னையே வெளிச்சமாக்கி
மாய்ந்தாயோ?

அறிவாளித்தனமாக
ஒதுங்கிச் செல்ல மட்டுமே
பழகிப்போன கூட்டம்,
முட்டாள்த்தனமென்று
எளிதாகச் சொல்லிவிடுகிறது...
துருப்பிடித்த
இரும்பு மனதோடு!

தமிழகத்தில் வாழும்
இந்திய காங்கிரஸ்வாதிகளே!
உங்கள் அரசியல் நலன்வேண்டி
பணிவான வேண்டுகோள்;
"ராஜீவ்காந்தி படுகொலை!
ராஜீவ்காந்தி படுகொலை!"
என்றே இனியும்
அரசியல் நடத்துவதற்காகவாவது
விட்டு விடச்சொல்லுங்கள்
எங்கள் சகோதரர்களை!

இன்று,
தங்களைத் தாங்களே
மாய்த்துக்கொள்பவர்கள்,
மாற்றி யோசிக்க நேரம் பிடிக்காது!

3 comments:

தமிழ்ச்செல்வி said...

என் மகனைக் காப்பாற்று"
என வேண்டும் தாய்க்கும்
உனக்கும் வித்தியாசமில்லை!
இந்திய ஜனநாயகத்தின் கோரப்பசிக்கு
இன்னொரு உயிர் கிடைத்ததே
மிச்சம்!

super

மயூ மனோ (Mayoo Mano) said...

//என் மகனைக் காப்பாற்று
என வேண்டும் தாய்க்கும்
உனக்கும் வித்தியாசமில்லை!
இந்திய ஜனநாயகத்தின் கோரப்பசிக்கு
இன்னொரு உயிர் கிடைத்ததே
மிச்சம்!//

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

தனது கோஷ்டிகளில் பத்தோடு பதினொன்றாக தமிழனை ஒதுக்கும் காங்கிரஸ், சட்டத்தின் அத்தனை ஓட்டைகளின் வழியாகவும் தப்பிக்கும் வித்தை தெரிந்தும் தன்னால் ஆகாதென கைவிரிக்கும் ஜெயலலிதா, ராஜீவ்காந்தியின் ஆன்மாவை துணைக்கிழுத்து கண்ணீர் விடும் பகுத்தறிவுக் கருணாநிதி, பொறுத்துப் பொறுத்துப்பார்த்து பொங்கும் விஜயகாந்த், வழக்கம்போல முதல் ஆளாக செங்கொடிக்கு வீரவணக்கம் செலுத்தும் திருமா, இவர்களின் நடிப்பை நம்பாமல், நீதிமன்றத்தின் இடைக்காலத்தடை தீர்ப்பினை எதிர்பார்க்கும் எண்ணற்ற அப்பாவித் தமிழர்களில் ஒருவனாக நான்!