Friday, March 16, 2007

அந்நியப்பட்ட பூமி!

ஊரில் எல்லாமே மாறிப்போச்சு!
முண்டியடிச்சு டிக்கெட் வாங்கின
தியேட்டருல
இப்போ
பத்து பேருக்காக படம் ஓடுது...
பேருக்காக படம் ஓடுது!

கந்து வட்டி புல்லட் மணி
ஹார்ட் அட்டாக்ல போயிட்டானாம்...
சந்தோசமா பேசிக்கிறாங்க!

கூடப் படிச்சவனுங்க எவனும்
இப்போ ஊருக்குள்ள இல்ல...
"கூட"ப் படிச்சதால
என்னைப் போலவே
ஏதோவொரு பட்டணத்தில்...
ஊருக்குள்ள ஒரே நண்பன்
பழனிக்கும் கல்யாணமாயிடுச்சு;
அடிக்கடி பார்க்க முடியல...

ஒரு காலத்துல
பசங்கள அலையவிட்ட கனகாவுக்கு
இப்போ ரெண்டு பசங்களாம்!
பழனி சொன்ன ஒரே
உருப்படியான தகவல்!

கிணற்று போரிங்
என்னோட சம்பளம்
எல்லாத்தியும் பேசினதுபோக
பஸ் ஸ்டாண்டு வரைக்கும்
அப்பாவும் நானும்
யோசிச்சி யோசிச்சி
இப்படிப் பேசியபடியே...

பஸ் ஸ்டாண்டு புதுசு;
நெறய பஸ்சு புதுசு;
பஸ்சுக்குள்ள
வடிவேலும் பார்த்திபனும்
வீடியோவுல கலாய்க்கிறாங்க!

எனக்கான பஸ்சும் வந்திடுச்சு
ஜன்னல் வழியே
அப்பாவைப் பார்க்கிறேன்...
எல்லாம் மாறிப்போன ஊரில்
அப்பாவின் கண்கள் மட்டும்
வழக்கம் போல...
என்னையே பார்த்தபடி...
பேருந்து மறையும் வரை!

No comments: