Monday, March 19, 2007

பருத்தி வீரனும் பொணந்திண்ணியும்

பருத்திவீரன் படம் நேற்று பார்த்தேன். இயல்பான கிராமத்து வாழ்க்கைமுறைகளை வெளிப்படுத்தும் மிகச்சில படங்களின் வரிசையில் பருத்திவீரனும் அமைந்துள்ளது. "ரோஜாப்பூ ரவிக்கைக்காரி" படத்தில் சிவகுமாருக்கு கிடைத்த நல்ல கதாபாத்திரம், சிவகுமாரின் மைந்தர் கார்த்திக்கு முதல் படத்திலேயே கிடைத்திருப்பது நல்ல தொடக்கம்.

ரோ.ர. படத்திற்கும் பருத்திவீரனுக்கும் சில ஒற்றுமையை என்னால் உணரமுடிந்தது. இரண்டு படமுமே பொருந்தமில்லாத ஜோடிகளின் தோல்வியைத்தான் காட்டுகின்றன. முன்னது, திருமணமானபின் மணவாழ்க்கையின் தோல்வியென்றால், பின்னது காதலின் தோல்வி. முன்னதில், மனதிற்கு பிடிக்காத கணவனைவிட்டு விலகி தவறான உறவில் வீழும் மனைவியையும், பின்னதில், காதலைப் புரிந்துகொள்ளாத காதலன், தறிகெட்டு, முறைகெட்டுத் திரிவதையும் காட்டுகிறார்கள்.

சிவகுமாரின் கதாபாத்திரம், வெளிஉலகம் தெரியாத, கிடைத்ததை உண்டு உறங்கும் அப்பாவியை வெளிப்படுத்தும். கார்த்தியின் கதாபாத்திரமும் கிடைத்ததை அனுபவித்து ஒரு வரையரையின்றி காலத்தை கடத்தும் ஒருவனின் வாழ்க்கைதான். ஆனால் இவன் அப்பாவிக்கு நேர் எதிரான முரடன். இவனிடம் கள்ளங்கபடம் நிறைய உண்டு.

கார்த்திக்கு ஜோடியாக வரும் பிரியாமணி தனது எதிர்காலத்தைப் பற்றிக் கவலைப்படாமல் மேக்கப் இல்லாமல் முகத்தைக் கட்டியிருப்பதற்காகவே பாராட்டலாம். சரிக்குச்சரியாக தகப்பனோடு வாதம் செய்யும்போது நடிப்பில் எகிறுகிறார்!

மற்றபடி, ஜாதியைத் தோளில் சுமக்கும் பொன்வண்ணன் கதாபாத்திரமும், சித்தப்பாவாக வரும் சரவணனின் கதாபாத்திரமும், பல படங்களில் பார்த்ததுதான். இதில் குறிப்பிடும்படியான இன்னும் இருவர், அம்மாவாக வரும் பெண்ணின் பதைபதைப்பும், பொன்வண்ணனுக்கு ஆலோசனை சொல்லும் பொணந்திண்ணியின் நடிப்பும்.

பொணந்திண்ணி, பெயர்க்காரணமே வித்தியாசமாக உள்ளது. நானும்கூட எனது கிராமத்தில் இதுபோன்ற சொந்த பெயர் மறந்து, பட்டபெயர் மட்டுமே நிலைக்க வாழும் பலரைப் பார்த்திருக்கிறேன். பொணந்திண்ணி போன்ற ஆலோசனை சொல்லும் பெரிய மனிதர்களை எல்லா சமூகத்திலும் நாம் காணலாம். இவர்கள், தன்னால் வெல்லமுடியாத காரியத்தை, அடுத்தவரை உசுப்பேற்றி வெற்றிபெற முயற்சிக்கும் ரகம். பெரிய மனிதனாக காட்டிக்கொள்ளும் குள்ளநரிகள்!

மொத்தத்தில், இந்த படத்தில் கதை சொல்லியிருப்பதை விட, கிராமங்களில் இன்னமும் வாழும் சில மறக்கமுடியாத கதாபாத்திரங்களை கண்முண் நிறுத்தியிருப்பது இயக்குனரின் பார்வையைக் காட்டுகிறது.

கதையிலும் கூட வழக்கம்போல, தேவர் சமூகத்தையே கிராமமாகக் காட்டியிருந்தாலும், ப்ளாஷ்பேக்கில், தேவர் சமூகத்து வாலிபன், தனது சமுகத்தின் எதிர்ப்பைமீறி, உறவுகளை ஒதுக்கி, தன்னை முன்னுக்குக் கொண்டுவந்த குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற பெண்ணை மணப்பதாகக் காட்டியிருப்பது வித்தியாசமான முயற்சி.

பருத்திவீரனை ஹீரோ என்று போற்றாமல் போக்கிரித்தனமானவனாகத்தான் இப்படத்தில் காட்டியிருக்கிறார்கள். ஆனால், இப்போது வருகின்ற ஹீரோயிசத் திரைப்படங்களில் இதுபோன்ற போக்கிரிகளைத்தான் ஹீரோ என்று சொல்லி பஞ்ச் வசனங்களைப் பேசவைக்கிறார்கள்!!

2 comments:

வெங்காய வெடி said...

Gautham!! lets meet this bloggers meet.. Please be there. For more details visit this page

http://balabharathi.blogspot.com/2007/04/22.html

Palani-Watrap said...

Hi Gautham,

If you have mentioned some nike names in Watrap which wiped out a person's original name. For example Kolakkatti, Sandhai Kodalu, Issu etc