சொல்லாமல் வந்தது மழை...
நினைவுகளில்
குடை சுமக்கும் மனிதர்கள்
நிராயுதபாணியாய்
ஒதுங்க இடந்தேடியபடி!
நொடிகளில் சாலைகள் நனைய,
நிமிடங்களில்
முட்டி மூழ்கும் உடனடி வெள்ளம்!
நடைபாதைக் கடைகள் மூட
நடக்கத் தடை நீங்கியது...
நடக்கத்தான் யாருமில்லை!
ஓட்டுனரின்
கோபத்தையும் சாபத்தையும்
சேர்த்துச் சுமக்கும்
படிதாண்டா பத்தினி(!)கள்...
வேறுவழியின்றி
படி தாண்டி
உள்ளே முண்டியபடி!
அடித்துத் துவைத்துத்
தொங்கவிடப்பட்ட துணிகள்
வியர்வை சொட்டச் சொட்ட
அவசரமாய் அள்ளப்பட்டன!
மிஞ்சிய சோற்றைப்
பக்குவமாய்ச் சேர்த்து
பார்த்துப் பார்த்து
வார்த்த வடகம்...
மொட்டை மாடி முழுக்கச் சேறாக!
கூரை ஓட்டைவழியே
அத்துமீறிய
அம்பு மழையை
கேடயமாய்த் தடுத்திட
வீட்டிலுள்ள பாத்திரங்கள்
அத்தனையும் அணிவகுத்தன!
வழக்கம்போல்
தோற்றுப்போன மழை
சொல்லாமல்
சொல்லிச் சென்றது...
"திரும்பவும் வருவேன்!"
No comments:
Post a Comment