Tuesday, October 25, 2011

தீபாவளிக் கவிதைகள்



கம்பி மத்தாப்பின் பொறிகளை
ரசிக்கப் பிடிக்கும்,
அந்த வெளிச்சத்தில்
அவள் முகம் காணும்போது!
லட்சுமி வெடியைப் பற்றவைக்கையில்
உதறும் கைகள், பதறும் நெஞ்சம்
சிதறியோடும் துள்ளல்
அத்தனையையும் ரசிக்கலாம்
அவள் வெடிக்கும் வரையில்!
********

முதல்முறை அணைந்தது;
முனை கிள்ளிப் பற்றவைக்க
மறுபடி அணைந்தது;
தீக்குச்சி கொளுத்த
புசுபுசுவெனப் பொறிந்து
முடிவில் அணைந்தது;
அடுப்பிலே விட்டெறிந்தும்
இறுதிவரை வெடிக்கவேயில்லை
இனாமாய் கிடைத்த பட்டாசு!
********

தற்காத்து
தற்கொண்டார் பேணும் இயற்கை
விட்டுவிட்டு மழை பொழிந்து
ஓசோனையும் ஓலைக்குடிசையையும்
பொசுங்காமல் காத்தபடி!
********

கல்யாணக்கல் காணாமப் போச்சு;
காளை அடக்குவதையும்
கட்டுப்படுத்தியாச்சு;
வீரத்தைக் காட்ட
வேறு வழியில்லை இளைஞர்க்கு,
உள்ளங்கையில் பிடித்து
அணுகுண்டு வெடிப்பதைத் தவிர!
********

பாதுகாப்பான தீபாவளி
பாதுகாப்பான தீபாவளி
அனல் பறக்கும்
காவல்த்துறை பிரச்சாரம்
காணாமல் போகும்
பட்டாசு தயாரிக்கும்
தொழிலாளர் பாதுகாப்பில்!

3 comments:

விஜி said...

தீபாவளி...
சுற்றி இருப்போரை ரசித்து விட்டீர்...
அவள் அனிந்த பட்டு புடவையையும்
அவள் செய்த தீபாவளி பலகாரத்தையும் தவிர...

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

:)))

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...
This comment has been removed by the author.