அவளோடு நான் - 1
அவளைச் சிந்திப்பதற்கு முன்
சிந்தித்த பின் என்றே
எனக்கான வரலாறு எழுதப்பட வேண்டும்!
அவளோடு நான் - 2
அவளைப் பற்றி
சிந்திக்கத் தொடங்கிய பின்பே
என்னைப் பற்றி
சிந்திக்கத் தொடங்கியது உலகம்!
அவளோடு நான் - 3
இப்போதெல்லாம்
அவள் மனதிலிருந்து
அவளின் உதடுகளால்
வடிகட்டித் தரும் வார்த்தைகளை
சுவைப்பதற்காகவே
காத்திருக்கிறேன் தினமும்!
அவளோடு நான் - 4
அவள் பேசும்போது
உதடுகளை எட்டியெட்டிப் பார்க்கும்
அவளது முன்நெற்றியின்
சிறு கற்றை முடிகளை
அடிக்கடி விலக்கி விடும்
விரல்களைப் போலவே
என் கண்களும் மனதும்!
அவளோடு நான் - 5
எனக்கென அவள் சிந்திய
மெல்லிய நூல் சிரிப்பிலே
நாளெல்லாம் பறக்கிறேன்
உலகினின்று விடுபட்ட
காற்றாடியாக!
அவளோடு நான் - 6
அவளால் எழுதிய கவிதையை
சொல்லித் திரிகிறேன்
எனது கவிதையென!
அவளோடு நான் - 7
எங்கள் காதுகளுக்கும்
கேட்காமல் தான்
ரகசியங்கள் பரிமாறுகிறோம்
உதடும் உதடும்
ஒட்டிய மாதிரி!
அவளோடு நான் - 8
மருதாணி பூசிக் கொள்கிறாள்
முகப்பூச்சு பூசிக்கொள்கிறாள்
நகப்பூச்சு பூசிக்கொள்கிறாள்
என்னையறியாமல்
மகிழ்ச்சியை பூசிக்கொள்கிறேன்
அவளைப் பார்த்ததுமே!
அவளோடு நான் - 9
அவளைச் சந்திக்கும்போதெல்லாம்
ஏதேனும் சிறு அன்புப் பரிசை
வாங்கித் தருகிறேன்;
அவளும்
முதல்முறை பார்க்கும்
பரவசத்துடன் தான்
ஒவ்வொருமுறையும் பார்க்கிறாள்;
பரிசையும், என்னையும்!
அவளோடு நான் - 10
என்னுள் வாசம் செய்யும்
அவளின் அருகாமை
தினம்தினம்
என்னை வசப்படுத்தும்
அவளின் வாசத்தால்!
அவளோடு நான் - 11
அவளுக்காக காத்திருந்த
நிமிடங்களின் நொடிகளுக்குள்
போட்டி நடக்கும்;
ஏதோ ஒரு நொடி
அவளை அழைத்து வந்து
என் முன் நிறுத்தும்!
3 comments:
அருமை.
உம் வரலாறு அவளை வைத்து...
அவள் வரலாறு உம் கவிதையிடத்து...
விமர்சனத்திற்கு நன்றி!
Post a Comment