Tuesday, October 25, 2011

தீபாவளிக் கவிதைகள்



கம்பி மத்தாப்பின் பொறிகளை
ரசிக்கப் பிடிக்கும்,
அந்த வெளிச்சத்தில்
அவள் முகம் காணும்போது!
லட்சுமி வெடியைப் பற்றவைக்கையில்
உதறும் கைகள், பதறும் நெஞ்சம்
சிதறியோடும் துள்ளல்
அத்தனையையும் ரசிக்கலாம்
அவள் வெடிக்கும் வரையில்!
********

முதல்முறை அணைந்தது;
முனை கிள்ளிப் பற்றவைக்க
மறுபடி அணைந்தது;
தீக்குச்சி கொளுத்த
புசுபுசுவெனப் பொறிந்து
முடிவில் அணைந்தது;
அடுப்பிலே விட்டெறிந்தும்
இறுதிவரை வெடிக்கவேயில்லை
இனாமாய் கிடைத்த பட்டாசு!
********

தற்காத்து
தற்கொண்டார் பேணும் இயற்கை
விட்டுவிட்டு மழை பொழிந்து
ஓசோனையும் ஓலைக்குடிசையையும்
பொசுங்காமல் காத்தபடி!
********

கல்யாணக்கல் காணாமப் போச்சு;
காளை அடக்குவதையும்
கட்டுப்படுத்தியாச்சு;
வீரத்தைக் காட்ட
வேறு வழியில்லை இளைஞர்க்கு,
உள்ளங்கையில் பிடித்து
அணுகுண்டு வெடிப்பதைத் தவிர!
********

பாதுகாப்பான தீபாவளி
பாதுகாப்பான தீபாவளி
அனல் பறக்கும்
காவல்த்துறை பிரச்சாரம்
காணாமல் போகும்
பட்டாசு தயாரிக்கும்
தொழிலாளர் பாதுகாப்பில்!

Monday, October 10, 2011

வேண்டாம் இன்னொருமுறை!


அலைகளும் பலமுறை வந்து
ஏமாந்து திரும்பி விட்டன
... உனக்காகக் காத்திருந்த நிமிடங்களில்!

காணும் வரை இறுகிய முகம்
நீ நெருங்கவும் நொறுங்கியது
கடற்கரையில் மணலாய்!

சின்னச் சிணுங்களில்
சின்னாபின்னமாகி போனது
சேமித்து வைத்திருந்த கோபமெல்லாம்!

திட்டித் தீர்க்க வேண்டுமென்ற
திட்டமும் தவிடுபொடியானது
செல்லத் தீண்டலில்!

கொட்டிக் குவிக்க வைத்திருந்த
வர்த்தைகளெல்லாம்
முடிச்சே அவிழ்க்கப்படாமல்!

என் கோபமே
என்னைக் கேலி செய்கிறது
உன்னோடு சேர்ந்துகொண்டு!

இனியொரு முறை தவிக்க விடாதே
தோற்றே பழகிப்போன
வீராப்புகளை என்னோடு!
See more

பேருந்து நிமிடங்களில்...

திருவிழா அரங்க முகப்பில்
குலை தள்ளிய வாழைகளாக
வாயில்களில் தொங்கும் கூட்டம்!
---

டிக்கெட்டுக்காகக் கொடுத்தனுப்பும் பணம்
நல்வாய்ப்பாக ஆசிர்வதிக்கப்படும்
அழகிய பெண்ணின் கரத்தால்!
---

பறக்கவில்லை
ஊர்ந்துதான் செல்கிறது
சிக்னல்கள்தோறும் கவுண்ட் டவுன்!
---

வழிநெடுக ஒட்டப்பட்ட போஸ்டர்களும்
சிறுநீர் கழிக்காதே எச்சரிக்கையும்
திரும்பத் திரும்ப வாசிக்கப்படும்!
---

பயணச்சீட்ட்டு வங்கிய குற்றவாளிகளால்
தள்ளப்படும்
மா"நகரா"ப் பேருந்துகள்!
---

பக்கத்து இருக்கையில் அமர்ந்து
தூங்கிச் சரிபவரின்
கனவைக் கலைத்தபடி நான்!

Thursday, October 6, 2011

ஹைக்கூ சரம்!

மதுபானக் கூடுதல் விற்பனையில்
அள்ளப்படுகிறது
கிள்ளிக் கொடுத்த போனஸ்!

அதிகாலையில் ஓடுபவர்களை
துரத்தும்
நாய் நோய் பயம்!

நடுத்தெருவில் உடைத்த பூசணிகளும்
சிதறிய சில்லறைகளும்
கண்ணகிகள் அரியணையில்!

Tuesday, October 4, 2011

ஹைக்கூ சரம்!

பாகற்காயினுள்ளிருந்த புழு
எட்டிப் பார்க்கவேயில்லை
விலைபேசி வாங்கி முடிக்கும்வரை!
-----------------------------------

மெல்ல ஊற்றெடுக்கும் மகிழ்ச்சி
தங்கம் விலை
வற்ற வற்ற!
-------------------------------

மழை நின்ற வெயிற்பொழுதில்
இலைகளைக் காய வைக்கும்
மரம்!
-------------------------------

மகிழ்ச்சியைத் தவிர
வேறொன்றுமில்லை
மழலையின் சிரிப்பில்!
--------------------------------

பந்திக்கு முந்தாமல் தடுக்க
கையில் திணிக்கப்பட்டது
அட்சதை அரிசி!
--------------------------------

ஊருக்கெல்லாம் பெய்த மழையில்
என்னை நனைத்தன
எனக்கான மழைத்துளிகள்!
---------------------------------

இரவு வரும்போதெல்லாம்
பீதியை போர்த்திக் கொள்ளும்
தூங்காத அசைவுகள்!
---------------------------------

ஊனமுற்ற பிச்சைக்காரரை
கடக்கையில் ஊனமாகிறேன்
பையில் சில்லறையில்லாத போது!

உனக்காக...

முந்த முயற்சித்து
முட்டிமோதிச் சிதறும் எழுத்துக்கள்
வார்த்தைகளில்
இடைபுகுந்தும், இடம்மாறியும்
பெரும்பாலும் தப்பும் தவறுமாகவே
உனக்காக
நான் எழுதும் கவிதைகள்!

துளித் துளியாய் கவிதைகள்!

மெல்லத் தலை நகர்த்திப் பிறந்து
விழி திறவாமல் சிரித்து
தானே தவழ்ந்து எழுந்து
நடைபயிலும் குழந்தை
ஒவ்வொரு விடியலிலும்!
--------------------------

எதாவது குழந்தையின் வீட்டில்
ஒதுங்கியிருக்கும் நிலவு
மழை நேரத்தில்!
--------------------------

எந்நேரமும் மவுனம் உடைபடலாம்
சிறு தீண்டல் போதும்
காத்திருகும் கார்மேகங்கள்!
--------------------------

தோகை விரித்தாடும் மயில்
தேடிக் களைந்த வாடைக்காற்று
வீடு நுழையும் அந்தி!
--------------------------

அகிம்சை போர்த்தித் திரியும்
இம்சைகள்
காந்தியின் பெயராலே!

சரஸ்வதி பூஜை

சரஸ்வதி பூஜையில்
அண்ணனின் பங்காக
அஞ்சாம் வகுப்புப் புத்தகங்களும்
தங்கையின் பங்காக
ஒண்ணாம் வகுப்புப் புத்தகங்களும்
அம்மாவின் பங்காக
சமையல் குறிப்புப் புத்தகங்களும்
வரிசைகட்டி நின்றன;
அப்பாவின் பங்காக வைக்க
வேறொன்றுமில்லை...
கல்விக் கட்டண ரசீதுகளைத் தவிர!
------------------------------------------------

சரஸ்வதி பூஜைக்கு
பள்ளியில் மாணவர் சேர்க்கை
லட்சுமி பூஜை!