எம்ஜியார் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுவந்த வேளையில் நடைபெற்ற தேர்தலின்பொது எம்ஜியார் மறைந்துவிட்டார் என்றும், எம்ஜியாரின் மரணத்தை மறைத்துவைத்து தேர்தலில் போட்டி போடுகிறார்கள் என்றும் எம்ஜியார் பற்றி வதந்தியை பரப்பி விட்டு அன்றைய காலகட்டத்தில் கருணாநிதி அரசியல் செய்தார். அந்தோ பரிதாபம்! இப்போது தான் நல்லநிலையில் இருந்தபோதும், தனக்கு நோவு வந்ததென தனக்குத்தானே கூறிக் கொண்டு மருத்துவமனைக்கட்டிலில் தொடர்ந்து இருந்தபடி பரிதாபத்தைச் சம்பாத்தித்து தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய நிலை.
ஏன் இந்த இழிநிலை?
தன்னை காலங்காலமாக தமிழினத்தலைவராக தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய திமுக தொண்டர்களையே மனம் நொந்துபோகும்படியல்லவா காங்கிரசோடு இவர் பின்னிப் பிணைந்துள்ளார். தமிழ் உணர்வு, ஈழத்தமிழர் ஆதரவு என்பது ஒவ்வொரு திமுகவினருக்கும் இவரால் ஊட்டப்பட்ட உணர்வு என்றால் மிகையாகாது. ஆனால் அந்த உணர்விற்கே இவர் துரோகம் செய்வதை திமுகவினராலேயே தாங்கிக் கொள்ள முடியாத நிலை. ஆம், கருணாநிதியைப் போல அனைவராலும் உணர்வுகளை மழுங்கச் செய்ய இயலாதல்லா? அவருக்கும் ஒருகாலத்தில் உணர்வு இருந்தது. ஆனால் தற்போது அவரது குடும்பத்தினர் அக்மார்க் வியாபாரிகளாக மாறிவிட்ட சூழலில் உணர்வாவது, மண்ணாங்கட்டியாவது என்ற கருணாநிதியின் நிலையை அவரது ஒவ்வொரு நாடகமும் தோலுரித்துக் காட்டத் தொடங்கி விட்டது!
இப்போது, திமுகவின் ஆதரவாளராக அறியப்பட்ட சீமானே ஜெயலலிதாவுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறார். இவர் ஜெயலலிதா ஆசியுடனும், பணத்துடனும் பிரச்சாரத்தில் இறங்கவில்லை. கம்பம் ராமகிருஷ்னன் போன்றவர்களை, ஜெகத்ரட்சகன் போன்றவர்களை சீமானோடு ஒப்பிடக்கூடாது. அவர்கள் கருணாநிதி பணம் கொட்டியதால் சேர்ந்தவர்கள்... சீமானோ, கருணாநிதியின் குணம் கெட்டதால் விலகியவர். இவரைப் போல பல திமுக தொண்டர்களும் மனதளவில் கருணாநிதியை விட்டு வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பது தான் இப்போதய நிலை.
எம்ஜியார் பிரிந்தபோது கருணாநநிதியின் அரசியல் பிடிக்காமல் எம்ஜியாரோடு ஒரு பெரும் பிரிவினர் எம்ஜியார் பக்கம் சேர்ந்தார்கள். அதன்பிறகு வைகோ பிரிந்தபோதும் ஓரளவு அந்த மாதிரி நிலை ஏற்பட்டது. இப்போது யாரும் கருணாநிதியை விட்டுப் பிரியவில்லை, இருந்தும் இப்போதும் பல திமுகவினர் கருணாநிதியை விட்டு விலகி ஜெயலலிதாவையோ, விஜயகாந்தையோ ஆதரிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
எதனால்???
ஆம்! கருணாநிதி இப்போது திமுகவைவிட்டு, திமுகவின் கொள்கையை விட்டுப் பிரிந்துவிட்டார்!
2 comments:
85 வயது முதியவருக்கு உடல் உபாதையே வராதா? எப்படிங்க அவ்வளவு உறுதியா நாடகமாடுறாருனு சொல்றீங்க?
-- ராஜா
அவரது கஷ்டம் தெரிகிறது. அவர் ஓய்வெடுக்கலாம் இல்லையா? ஆட்சியைக் கைமாற்ற பேராசிரியர் இருக்கிறாரே? அல்லது அவரது மகன் ஸ்டாலின் இருக்கிறாரே?
Post a Comment