Tuesday, May 19, 2009

பொய்யாகிப் போகாதோ?

பொய்யாகிப் போகாதோ?
உன் மரணம்
பொய்யாகிப் போகாதோ?
நீ
பக்கத்திலிருந்த தைரியத்தால்
வீரம் பேசித் திரிந்தோமே...
வீணாய்ப் போனதே
அத்தனையும்!
வீணாய்ப் போனதேன்
அத்தனையும்?

இறுதிவரை நீ
ஈழ மண்ணை விட்டு
ஓடவில்லை!
உன் உறுதி
கர்வப்பட வைக்கிறது...
நீ ஓடி
உயிர்தப்பியிருக்கக்கூடாதா?
என்
உள்மனம் ஏங்குகிறது!

மெய் சிலிர்த்துக் கிடந்தோமே!
தமிழனுக்கென்று அரசாங்கம்
தமிழனுக்கொரு ராணுவம்
தமிழனுக்கொரு தலைவன்
பொய்யாகிப் போனதே
அத்தனையும்!

இனப்படுகொலையின்
வலியை உணர்ந்தாய் நீ...
வலியை உணர்ந்தவர்கள்
உன் பின்னால் சேர
வலிமையானாய் நீ!
தமிழனைக் காக்கத்தானே
நீ
துப்பாக்கி தூக்கினாய்?
உன் பின்னால்
பீரங்கியே அணிவகுத்ததே
பின்னாளில்!
இன்று
எட்டி நின்று
வேடிக்கை பார்க்கும் தமிழகம்
அன்று உன்னை
தட்டிக் கொடுத்ததே!

உலகத்தின் சுழற்சியால்
சூழ்ச்சியால்
இனப்போராளி உன்னை
தீவிரவாதியென்றல்லவா
தடை செய்தது!
அடிமேல் அடி விழுந்தாலும்
"ஓயாத அலை"யாக
சுழன்றடித்த நீ
இன்று அமைதியானாயே!

பதுங்கு குழிகள்
பாதுகாப்பு வளையமென
தமிழரைக் கொன்றொழித்து
உன்னைப் பழியாக்கி
பலியாக்கிய
உலகத்தின் சூழ்ச்சியை
எப்படிச் சொல்வேன்?
வெட்கக்கேடு!

எழுதப்படும் வரலாறுகள்
உன்னை
எப்படி வேண்டுமானாலும்
சொல்லட்டும்...
உன் உறுதியை
உன் வலிமையை
உன் பெருமையை
என் பேரனுக்கும்
சொல்லிக்கொடுத்து உரமேற்றுவேன்...
அதுபோதும் எனக்கு!

2 comments:

கலகலப்ரியா said...

அது பொய்யாகிப்போய் ரொம்ப நாளாச்சு சார்..!!! இது சும்மா ஒரு நம்பிக்கையில் சொல்லவில்லை! நிச்சயமாகத் தெரிந்த உண்மை!!! சற்றுப் பொறுத்திருங்கள்!!! தன்னால வெளி வரும்!!

Anonymous said...

engal thalaivan eezhaththu jesu.avar meendum uyirppaar.-raavan rajhkumar-jaffna