Saturday, May 16, 2009

தேர்தல் முடிவுகள்- 2009 - ஒரு கண்ணோட்டம்

ஒவ்வொரு தேர்தலுக்கும் ஏதாவதொரு சிறப்பு சொல்லப்படும். அந்தவகையில் பார்த்தால், இந்த தேர்தல், ஈழம் உள்ளிட்ட அனைத்துலக தமிழர்களாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஈழத்தமிழர்களின் வாழ்நிலையின் துயர் துடைக்கும் வழிகோலாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்தும் இருந்தது. அந்த வகையில் பார்த்தால் பெருத்த ஏமாற்றம் மிஞ்சியதை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.

மணிசங்கர் உள்ளிட்ட காங்கிரஸ் பெருந்தலைகள் உருண்டாலும் வைகோவின் தோல்விதான் இருதரப்பிலும் பெருத்த அதிர்வை ஏற்படுத்தி இருக்கிறது.அவரவர் நிலைப்பாட்டைப் பொறுத்து பெருத்த சோகமாகவோ, பெருத்த மகிழ்ச்சியாகவோ ஏற்றுக்கொள்ளப்படுகிறது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் தலை தப்பியது இறுதிக்கட்ட திருப்பம்! நிழல் அரசியல்வாதியாகவே அனைவராலும் அறியப்பட்ட மு.க. அழகிரியின் பிரம்மாண்ட வெற்றி, பணநாயகத்தின் வெற்றி என்று மட்டும் சொல்லித் தட்டிக் கழித்துவிட இயலாது. தேர்தலுக்குக்காகத் தரப்படும் பணத்தையும் பொருட்டாக மதித்து வாக்கினை அளிக்கும் மனநிலைக்கு மாறி வருவதையும், வழக்கமாக உணவகங்களில் தரப்படும் "டிப்ஸ்" போல இப்பணம் மதிக்கப்படுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

அடுத்து, அதிரடி "ஒட்டு மாங்கனி" பாமாகாவின் தோல்வி குறித்து பார்க்கலாம். ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒரு கூட்டு சேர்வதும், பெரியண்ணன், அன்புச்சகோதரி எனப் புகழ்ந்து சில தொகுதிகளைக் கேட்டுப் பெறுவதுமாக அரசியல் செய்து, மத்திய அமைச்சர் பதவியை தனது மகனுக்கு வாங்கிக் கொடுத்து அழகு பார்த்த ராமதாஸுக்கு மக்கள் தந்த "சவுக்கடி"தான் இத்தேர்தல் முடிவு! தான் போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவியிருக்கும் பாமாகாவுக்கு, இனியாவது கூட்டணித் தலைவர்கள் அளந்து அளந்து தொகுதிகளை அளிப்பார்கள் என நம்பலாம்! தொகுதிப் பங்கீட்டில் அசிங்கப்படுத்தப்பட்ட வைகோவாவது ஒரு தொகுதியில் வெற்றி பெற்று விட்டார்!

எம்ஜியாரின் இரட்டை இலை இனியும் அதிமுகவை கைதூக்கி விடுமா என்பது சந்தேகம்தான். தற்போதய திமுகவின் ஆட்சியில் பேருந்துக் கட்டண உயர்வு, மின்வெட்டு, காவிரி, ஒகெனக்கல் பிரச்சனை என எத்தனையோ பிரச்சனைகள் எழுந்தபோதும், எதிர்க்கட்சியான அதிமுகவின் தலைவி ஜெயலலிதா, செயல்படாத தலைவர் போலவே அக்கறை எடுத்துக்கொள்ளாமல் இருந்துவிட்டார். தேர்தலின்போது இரண்டு மாதம் அரசியல் பண்ணினால் மட்டும் போதுமென்று யாராவது "பத்திரிக்கை நண்பர்கள்" ஆலோசனை கொடுத்திருக்கலாம்! அதன்படியே செயல்பட்டு, அல்லல்பட்டு, இப்போது கூட்டணி பலத்தால் அடைந்திருக்க வேண்டிய பிரமாண்ட வெற்றியைக் கோட்டை விட்டு நிற்கிறார்! இப்படியே தொடர்ந்தால் கோட்டையையும் இவர் விடுவது நிச்சயம்! தேர்தலின்போது இவர் எழுப்பிய திடீர் ஈழ ஆதரவு கோசத்தை, தமிழுணர்வாளர்களைத் தவிர மற்ற எவரும் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் தொடர்ச்சியாக எழுதி வைத்து ஒப்பித்தும், கேள்வி கேட்டும் இவர் செய்த பிரச்சாரம் கேலியாகவே மக்களால் பார்க்கப்பட்டுள்ளது!
ஜெயலலிதாவிற்கு ஒரு கேள்வி: இனியும் இப்படியே மந்தமாக அரசியல் செய்வீர்களா?!

நம்ம விஜயகாந்த், கார்த்திக், சரத்குமார் உள்ளிட்ட அனைவருமே காங்கிரஸ் கூட்டணிக்கு தங்களால் இயன்ற அளவு "கைமாறு" செய்திருக்கிறார்கள். அதற்கு கைமாறாக தொடர்சியாக இவர்களின் படங்களை சன் தொலைக்காட்சி குழுமத்தில் கண்டு ரசிக்கலாம்! வைகோவின் தோல்விக்கும், கார்த்திக் பெற்ற வாக்குக்கும் நேரடித் தொடர்பே இருக்கிறது. மற்ற தொகுதிகளில் விஜயகாந்த்தின் பங்கு எவ்வளவென்று, அவர் கூட்டணி வைப்பதற்காக டெல்லியில் மன்றாடிய தெய்வத்திற்குத்தான் தெரியும்!

இவ்வளவையும் சொல்லியாச்சு, கலைஞரைப் பற்றியும் சொல்லாமல் விடலாமா? கடந்த பொதுத்தேர்தலில் இவர் எழுப்பிய நாளை நமதே! நாற்பதும் நமதே! என்ற கோஷம், தற்போது ஜெயலலிதாவாலும் காப்பியடிக்கும் அளவிற்கு பரபரப்பான கோஷமாக அமைந்து விட்டது. அப்போது திமுக பெற்ற பிரமாண்ட வெற்றி போலவே, இம்முறையும் எதிர்பாராத வெற்றியைப் பெற்றிருக்கிறது. திமுகவின் வெற்றியால் தேர்தலுக்குப் பின்னால் அதிமுகவும், பாமகவும் கூட்டணி மாறும் குளறுபடிகள் தவிர்க்கப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் உள்ள மாநிலக் கட்சிகளுக்கு நிகராகத் தனது தனிப்பட்ட செல்வாக்கை, திமுக மேலும் உயர்த்தியுள்ளது. மாநிலத்திலும் மத்தியிலும் நிலையான ஆட்சிக்கு இனி பாதிப்பில்லை. இதோ, கில்லி மாதிரி கிளம்பி விட்டார் டெல்லிக்கு... விரும்பிய அமைச்சர் பதவியை பேசி வாங்கி வர. வாழ்த்துகள்! இந்த வேகத்தைத் தான் ஈழப் பிரச்சனையிலும் அனைவரும் எதிர்பார்ப்பது. தந்தி அனுப்பி விட்டு, இங்கேயே குந்தியிருந்தால் நினைத்த தொகுதியைப் பெற முடியாதென்பது, தந்திக்கு மதிப்பில்லை என்பது உங்களுக்குத் தெரியாததா என்ன?

மத்திய காங்கிரஸின் அசைக்க முடியாத வெற்றி, பாஜகாவையும், செம்படைத் தோழர்களையும் அதள பாதாளத்துக்கே தள்ளி விட்டது உண்மை! அத்வானியின் பிரதமர் கனவு, பகற்கனவாகி வருகிறது. இதோ, மோடி தயாராகி விட்டார், கனவு காண! கனவு காணுங்கள், தூங்காமல் கனவு காணுங்கள்! இனிவரும் தேர்தலில், கூட்டணித் தாவல் தடைச் சட்டம் கொண்டு வருவதும், வாக்குப் பதிவு எந்திரத்தில் வாக்களிக்க விருப்பமில்லாதவர்களுக்கான பொத்தானும் மாறுதலாக மலர வேண்டும். காலம் மாறும்போது ஜனநாயகப் பாதையிலும் மறுமலர்ச்சி வேண்டாமா?

No comments: