வற்றிப்போன ஆற்றுக்கே தெரியாமல்
மண்ணை வெட்டி விற்கும்
மண்ணாசை மனிதரிடையே
உழுதுபோட்டு
வியர்வையோடு
உரங்களையும் கலந்து போட்டு
மண்ணை வளப்படுத்தும்
மண்ணின் மைந்தர்களாம்
உழவர்களின் திருவிழா!
வயல்வரப்பிலும்
ஊரணி மேட்டிலும்கூட
சாகடிக்கப்பட்டுவரும்
விளைநிலங்களின் நினைவாக
எழும்பியுள்ள அளவைக்கல்
மனதை வருத்தினாலும்
சுனாமியாகி சுற்றியடித்தாலும்
புயலாகிப் பெயர்த்தெடுத்தாலும்
இன்னமும் கலங்காமல்
பசுமை வளர்க்கும்
இயற்கையின் காவலர்களாம்
உழவர்களின் திருவிழா!
பகட்டான உடையில்லை
ஆடம்பர அணிகளில்லை
வரப்புமேட்டிலேயே வாழ்ந்தாலும்
மேட்டுக்குடி செருக்கில்லை
உச்சிவெயில் பார்த்தே
நேரத்தைச் சொல்லிடும்
நேர்த்தியின்னும் குறையவில்லை
அத்தனையும் விளைவித்தாலும்
விலை நிர்ணயிக்கும் உரிமையில்லை
இருந்தும்
வயல்வெளிவிட்டு விலகிட மனமில்லா
வெள்ளந்தி மனிதர்களின்
உள்ளம்மகிழ் திருவிழா!
சேற்றினில் கால்பதிக்க,
நாற்று வளர்ந்து
நெல்மணியாகும்வரை
காத்திருக்கப் பொறுமையற்று,
விளைநிலங்களை விட்டுவிட்டும்,
விற்றுவிட்டும்
மாற்றுப் பாதை நடக்கும்
பரபரப்பு மனிதரிடையே
விதைதூவி, நாற்று பறித்து,
காலத்தே களைபறித்து,
வலிமைசேர் உரமிட்டு,
வேரின் தாகம்தீர்த்து
தேகம் சிரிக்கும் பயிரை
பார்த்துப் பார்த்து வளர்க்கும்,
பொறுத்து பூமியாள்வோரின் திருவிழா!
வாழிய உழவு! வாழிய உழவர்!
வாழ்க நற்றமிழர்!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து!