கல்லூரி நாட்களில் கடுப்படிக்கும் பாடவேளைகளில்தான் கவிதை ஊற்றெடுக்கும், உடனே எழுதத் தோன்றும்! அதுதான் அப்போதைய ஆறுதல்!
அதுபோலவே தற்போது கணிப்பொறி நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனக்கும், எல்லோரையும்போல காதில் தலைபேசி(head phone!) மாட்டிக்கொண்டு, மனதின் மூடுக்குத் தக்கபடி பாடலை ரசித்தபடி வேலை(!) செய்வது மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கும்! ஹெட்போனில் பாடலை அலறவிட்டபடி(அருகிலிருப்பவருக்கும் பாடல் கேட்கும்படியாக!) ரசிப்பதும் பழக்கமாகி விட்டது! இதனால் பிற்காலத்தில் காது கேட்பதில் கோளாறு வரலாமென சிலர் கோளாறு சொன்னாலும் மனம் கேட்க மறுக்கிறது!
இதுவே போகப்போக, ஹெட்போன் மாட்டினால் தான் வேலையே செய்ய முடியும் என்ற அளவிற்கு ஹெட்போனுக்குத் தலைவணங்கும் நிலை ஏற்பட்டு விட்டது! பாடல் கேட்க விரும்பாத நேரங்களிலும்கூட ஹெட்போன் எனது தலையிலேயே மாட்டியபடி இருக்கும்! ஹெட்போன் மாட்டி வேலை செய்யும்போது ஏதோ விமானத்தில் பறக்கும் பைலட்டின் நினைப்பு மனதினுள்!!
ஒருநாள், என் உடன் பணியாற்றும் நண்பர், விளையாட்டாக திடீரென எனது ஹெட்போனைப் பிடுங்கி தனது தலையில் மாட்டிக்கொண்டு நான் கேட்கும் பாடலை ரசிக்க முனைந்தார்... பெரிய பல்ப்!!! பாடல் ஒன்றுமே கேட்கவில்லை! குழப்பத்தோடு பார்க்க, ஹெட்போன் பாட்டு கேட்க மட்டுமல்ல, தலைக்கு ஒரு "கிரிப்" கிடைப்பதற்காகவும் மாட்டலாம் எனச் சொல்ல, அவர் நொந்து விட்டார்!
அலுவலகத்திற்கு வரும்போது ஹெல்மெட் மாட்டுவதும், அலுவலகத்தினுள் ஹெட்போன் மாட்டுவதும் வழக்கமாகி விட்டதால், அது இல்லாத நேரங்களில் கிரீடம் இழந்த மன்னனைப் போல மனம் வேதனைப்படுகிறது!!
இதுபற்றி யோசிக்கும்போது,"நீரு இல்லாத நெற்றி பாழ்" என்று, நெற்றியில் திருநீறு பூசாமல் இருந்தால் ஏதோ நிர்வாணமாக இருப்பதாக உணர்வதாக திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் சொன்னதாக பத்திரிக்கையில் படித்த செய்திதான் நினைவுக்கு வருகிறது!!!
No comments:
Post a Comment