Friday, February 29, 2008

இப்படியும் கூட கவிதை எழுதுவோம்!

வட்ட நிலா
சுற்றி நிறைய நட்சத்திரம்
இரவு!

மலை
உடைச்சா சிலை
அதுதான் கலை!

நண்பா!
விடிந்தது உனக்கு!
விழித்தெழு!
எழுந்து நில்!
நிமிர்ந்து நில்!
விரைந்து செல்!
தொடர்ந்து செல்!
கவுரி கிளாசுக்குக் கிளம்பிட்டா!!

தோழா!
ஆத்திரப்படு...
ஆணவம் விடு!
தீப்பந்தம் எடு...
தீமையைச் சுடு!
தீக்குச்சி எடு...
சிகரெட்டைப் பத்தவை!

கண்ணே மதி!
நீ எந்தன் பாதி
நான் உந்தன் மீதி
உன் பேச்சைக் கேட்காட்டா
"நங்கு நங்கு"ன்னு மிதி!

நீ அடுப்பானால்
நான் குக்கராவேன்!
நீ துடுப்பானால்
நான் படகாவேன்!
நீ கடுப்பானால்
நான் "எஸ்கேப்" ஆவேன்!

Thursday, February 28, 2008

என் அலுவலகக் சிரிப்புகள்!

கல்லூரி நாட்களில் கடுப்படிக்கும் பாடவேளைகளில்தான் கவிதை ஊற்றெடுக்கும், உடனே எழுதத் தோன்றும்! அதுதான் அப்போதைய ஆறுதல்!


அதுபோலவே தற்போது கணிப்பொறி நிறுவனத்தில் வேலை பார்க்கும் எனக்கும், எல்லோரையும்போல காதில் தலைபேசி(head phone!) மாட்டிக்கொண்டு, மனதின் மூடுக்குத் தக்கபடி பாடலை ரசித்தபடி வேலை(!) செய்வது மனதிற்கு சற்று ஆறுதலாக இருக்கும்! ஹெட்போனில் பாடலை அலறவிட்டபடி(அருகிலிருப்பவருக்கும் பாடல் கேட்கும்படியாக!) ரசிப்பதும் பழக்கமாகி விட்டது! இதனால் பிற்காலத்தில் காது கேட்பதில் கோளாறு வரலாமென சிலர் கோளாறு சொன்னாலும் மனம் கேட்க மறுக்கிறது!


இதுவே போகப்போக, ஹெட்போன் மாட்டினால் தான் வேலையே செய்ய முடியும் என்ற அளவிற்கு ஹெட்போனுக்குத் தலைவணங்கும் நிலை ஏற்பட்டு விட்டது! பாடல் கேட்க விரும்பாத நேரங்களிலும்கூட ஹெட்போன் எனது தலையிலேயே மாட்டியபடி இருக்கும்! ஹெட்போன் மாட்டி வேலை செய்யும்போது ஏதோ விமானத்தில் பறக்கும் பைலட்டின் நினைப்பு மனதினுள்!!


ஒருநாள், என் உடன் பணியாற்றும் நண்பர், விளையாட்டாக திடீரென எனது ஹெட்போனைப் பிடுங்கி தனது தலையில் மாட்டிக்கொண்டு நான் கேட்கும் பாடலை ரசிக்க முனைந்தார்... பெரிய பல்ப்!!! பாடல் ஒன்றுமே கேட்கவில்லை! குழப்பத்தோடு பார்க்க, ஹெட்போன் பாட்டு கேட்க மட்டுமல்ல, தலைக்கு ஒரு "கிரிப்" கிடைப்பதற்காகவும் மாட்டலாம் எனச் சொல்ல, அவர் நொந்து விட்டார்!


அலுவலகத்திற்கு வரும்போது ஹெல்மெட் மாட்டுவதும், அலுவலகத்தினுள் ஹெட்போன் மாட்டுவதும் வழக்கமாகி விட்டதால், அது இல்லாத நேரங்களில் கிரீடம் இழந்த மன்னனைப் போல மனம் வேதனைப்படுகிறது!!


இதுபற்றி யோசிக்கும்போது,"நீரு இல்லாத நெற்றி பாழ்" என்று, நெற்றியில் திருநீறு பூசாமல் இருந்தால் ஏதோ நிர்வாணமாக இருப்பதாக உணர்வதாக திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் சொன்னதாக பத்திரிக்கையில் படித்த செய்திதான் நினைவுக்கு வருகிறது!!!

Monday, February 25, 2008

போகிற போக்கில்...

தினமும் பைக்கில் அலுவலகத்திற்குச் செல்வது தான் வழக்கம். 12 கிலோ மீட்டர் பயணம். வேடிக்கை பார்த்தப்டி செல்வதால் அலுப்பு தட்டுவதில்லை, எனினும் டிராபிக் சிக்னல்களில் நிற்கும்போது மட்டுமே சற்று கடுப்பாக இருக்கும்.

இது பற்றி நான் எழுதிய கவிதை ஒன்று இப்போது நினைவிற்கு வருகிறது...

"ஒவ்வொரு நிறுத்தத்திலும்
ஏதோ ஒரு பெண்ணிருப்பாள்
கோபம் மறக்க!"

எப்படியோ தெரியவில்லை, கடந்த சில மதங்களாக ஒரு வித்தியாசமான பழக்கம் என்னைத் தொற்றிக்கொண்டது! ஆம், நெருக்கடியான நேரங்களிலும், சிக்னலில் நிற்க்கும்போதும் அப்படியே ஒரு நோட்டம் விடுவேன்... யார் யார் என்ன என்ன கம்பெனி ஹெல்மெட் அணிந்திருக்கிறார்கள் என்று!

பெரும்பாலும் நான் அணிகின்ற ரேங்குலர் ஹெல்மெட்டுகள்தான் முன்னிலையில் இருக்கும். (அதில் ஒரு பெருமை எனக்கு!) அடுத்ததாக வேகா, ஸ்டட்ஸ், கிமி வகை ஹெல்மெட்டுகள் பரவலாக உள்ளன. பொழுதுபோகாத பொம்மு போல இப்படி எண்ணிக்கை பார்ப்பது இப்போது வழக்கமாகவே ஆகி விட்டது! எங்கே நீங்களும் ட்ரை பண்ணிப் பாருக்களேன்!

கொசுறு தகவல்: கிமி வகை ஹெல்மெட்டுகளில் போலியாக கிவி என்ற பெயரில் சில ஹெல்மெட்டுக்களையும் பார்த்தேன்!

Thursday, February 21, 2008

தமிழக காங்கிரஸ் கட்சியையும் ஏலம் விடலாமே?

பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களின் வரலாற்று நாவல்களில் பெண்களை ஏலத்தில் எடுக்கும் செய்தியை/கொடுமையை விளக்கமாகச் சொல்லியிருப்பார். அதற்கு ஏற்படும் பலத்த போட்டி படிக்கின்ற அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும்!

தற்போது IPL சார்பாக இந்திய வீரர்களின் ஏலம் பற்றிய செய்தியைப் படித்ததும் எனக்கும் அந்த நினைவுதான் வந்தது! இதற்கு முன்பு நடந்த அணி நிர்வாகிகளுக்கான ஏலமும் இதே ரகம்தான். இந்த அணி நிர்வாகிகள் பட்டியலில் பணத்தில் புரளும் விஜய் மல்லையா மாதிரி பிசினெஸ் காந்தங்கள்(!) மட்டுமல்லாது சாருக்கான் போன்ற கிரிக்கெட் ரசிகர்களும் இருக்கிறார்கள்.

கொல்கத்தா அணியை விலைக்கு வாங்கிய சாருக்கான், இந்திய அணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்ட கங்குலியின் திறமையை பாராட்டியதோடல்லாமல் அவரை அணிக்குத் தலைமையேற்கவும் வைத்துள்ளார். அவர் திறமைக்கேற்ப மதிப்பான சம்பளமும் வழங்கியுள்ளார்.

ஒவ்வொரு அணி நிர்வாகிகளும் வீரர்களின் ஆட்டத்திறனை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை இப்போதே தொடங்கி விட்டனர். இதையெல்லாம் பார்க்கும்போது, சரியான தலைமை இல்லாமல் தவிக்கும் தமிழக காங்கிரசையும் ஏன் "வெளிப்படையான" ஏலத்தில் விடக்கூடாதென்ற யோசனை என்னுள் தோன்றியது.

2000ல் காமராஜர் ஆட்சி, 2006ல் காமராஜர் ஆட்சி, 2011ல் காமராஜர் ஆட்சி என்று தமிழக மக்களையும் காங்கிரஸ் தொண்டர்களையும் ஏமாற்றி வரும் காங்கிரஸ் தலைமைப் பதவியை "வெளிப்படையான" ஏலத்திற்கு விட்டால் என்ன? உண்மையில் கக்கன், காமராஜர் காலத்து காங்கிரஸ் தலைவர்கள் போல ஏழ்மை நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் யாரும் இப்போது இல்லை. தங்கள் பணத்தையெல்லாம் கொஷ்டி வளர்ப்பதிலேயே செலவழித்து வீணடிக்கிறார்கள். இந்நிலையை மாற்றி தமிழக காங்கிரஸை "வெளிப்படையான" ஏலத்திற்கு விட்டால் காங்கிரஸ் கட்சி பலப்பட நிறைய வாய்ப்புள்ளது!

* ஏலத்தின் மூலமாக ஒரு பெரிய தொகை காங்கிரஸ் தலைமைக்குக் கிடைக்கும!

* இன்னும் மூன்றாண்டுகளுக்கு தலைவர் பதவியை யாரும் பறிக்க மாட்டார்கள் என்ற நிம்மதி கிடைக்கும்!

* போட்ட பணத்தை எடுக்கவேண்டிய கட்டாயத்தின் காரணமாக தேர்தலின்போது மட்டும் விழித்துக்கொள்ளும் தூங்குமூஞ்சி அரசியலுக்கு முடிவுகட்டிவிட்டு முழுநேர அரசியலுக்கு காங்கிரஸ் திரும்பும்!

* கொஷ்டிகள் வைத்துக்கொள்வதற்குக் குறிப்பிட்ட பணத்தை கட்சித்தலைமைக்குக் கட்ட வேண்டுமென தடாலடி உத்தரவு போடலாம். ஒத்துவராதவர்களை கட்சியைவிட்டே கட்டம் கட்டலாம். இதனால் கொஷ்டி ஒழியவும், பணம் பெருகவும் வாய்ப்புள்ளது.

* கூட்டணிக்காக விஜயகாந்த் போன்ற புதுக்கட்சிகளிடம் கெஞ்சிக் கொண்டிருக்காமல் பணத்தாலேயே அடித்து வளைக்கலாம்!

* தனது தயவில் கூட்டணி ஆட்சி நடந்தாலும் வெறும் கூப்பாடு மட்டுமே தங்களால் போடமுடியும் என்ற நிலைமாறி பேரம்பேசி ஒன்றிரண்டு அமைச்சர் பதவிகளை, முடிந்தால் முதல்வர் பதவியையும் விலைபேசி தனது கனவான காமராஜர் ஆட்சியையும் எளிதில் அமைக்கலாம்!

என்ன நான் சொல்றது???

Thursday, February 14, 2008

காதல் உலாவும் வீதி!

நம் பாதச்சுவடுகளை
அழித்து அழித்து
களைத்துப் போயின அலைகள்!
வா! வீடு திரும்புவோம்!
.......................................................
மணிக்கணக்கில் பேசினாலும்
பேச மறந்த ஏதோ ஒன்று
மனதை உறுத்தும்!
.......................................................
உன்னைப் பிடிக்கும்;
உனக்குப் பிடித்ததால்
என்னையும் பிடிக்கும்!
.......................................................
நீ அனுப்பிய குறுஞ்செய்தியை
பலமுறை படித்திருக்கிறேன்;
மிகவும் அருமை" என்று
முதல்முறை பதில் அனுப்பினேன்!
.......................................................
காதல் அழகானது;
அதை அணிந்து கொண்டால்
நாமும்!
.......................................................
தாஜ்மஹால் கட்டுவது இருக்கட்டும்...
முதலில்
தாலி கட்டுங்கள்!

Tuesday, February 5, 2008

தொட்டாஞ்சிணுங்கி

தொட்டாஞ்சிணுங்கியை
தொடாமல் ரசித்தேன்...
அதுவும் என்னை ரசித்தது!