Thursday, September 29, 2011

பாடுபொருள் படும்பாடு!

பாடுபொருள் காதலாகிப் போனால்
சிக்கல் வந்துசேரும் கவிஞனுக்கு!
பாடப்படுபவள் யாரென்றறியும் ஆவல்
இயல்பாகவே எழுந்துவிடும் வாசிப்பவருக்கு!
எழுதும்போதெல்லாம் யோசித்ததில்லை
யோசிக்கிறேன் கேள்வியெழும்போதெல்லாம்!
எந்த உருவமும் சரியாகப் பிடிபடவில்லை
"அவங்க உங்க மனைவி தான?"
பொய்யுரைக்கத் தூண்டும் கேள்விகளும் அவ்வப்போது!
கவிஞன் ஊற்றெடுக்கும் தலைக்காவிரியாக
காதல் கவிதைகள் வழிந்தோடும் ஊரில்
மீசை அரும்புமுன் அரும்பிடுமே இந்த ஆசை!
நிஜத்தைக் காதலிக்கும் தைரியமற்று
கற்பனையில் காதலிக்கும் ஜாதியில் வளர்ந்து
கூடாமல் கூடிக் கலந்த காதலில்
கரு கூடாமல் போன சோகமும்,
கலைந்துபோன கர்ப்பத்தின் வலியும்,
குறைமாதக் குழந்தையின் பதைபதைப்பும்,
வழிமறக்கச் செய்த சுகப் பிரசவமுமாய்
அத்தனை அனுபவத்தையும் பிரசவித்தாலும்
காரணம் யாரென்றறியும் ஆர்வம் குறைவதில்லை!
காதலை உணர்த்தி, வரிகளில் வழிந்து,
கவிதையாய் நிறைந்து ஓடுபவளின் உருவம்
காண முடியாததை எப்படிச் சொல்வேன்?
தாகம் தணிக்கும் தண்ணீரின் உருவம்
இப்படித்தான் இருந்ததென்று!

காதலுடன்...


பேனாவைக் கவிழ்த்தியதுமே
காகிதமெங்கும் கொட்டியது
உனக்கான என் மனது!

நீ வாசிப்பாயென்ற நப்பாசையில்

தானாகவே வந்து
கோர்த்துக் கொண்டன எழுத்துக்கள்
உனக்கான கவிதையில்!

உன் அழகை வர்ணித்து

எதுவும் எழுதவில்லை
இயல்பான அழகுக்கு
வர்ணனைப்பூச்சு தேவையில்லை!

உன் மீதான காதலை

இக்கவிதையில் சொல்லவில்லை
உன் பெருமையை
உன்னிடமேவா சொல்லிக்காட்டுவது?

இப்படித்தான்

குழம்பிப் போகிறேன்
என் சிந்தனையில் உன் முகம்
பட்டுத் தெறிக்கும்போதெல்லாம்!

நீ பிரித்துப் படித்தால்

மகிழ்வேன்!
நாமிருவரும் சேர்ந்து படித்தால்
இக்கவிதை மகிழும்!

காதல் சொன்ன பருவம்!



முற்றிலும் அவள் நினைவாகவே
திரிந்து போனது என் மனது
நொதிக்கச் செய்த முதல் துளியை
தேடிச் சுவைக்கத் துடிக்கிறேன்!

அவள் என்ன பேசினாலும்
யோசிக்காமல் ரசிக்கப் பிடிக்கிறது
இந்த ரசனை வந்து அப்பிக்கொண்ட
முதல் வரியைத் தேடிப் பார்க்கிறேன்!

அவளை மையமாகக் கொண்டே
சில காலமாகச் சுழலுது பூமி
சுழற்சி தடம்மாறிப்போன நொடி தேடி
கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுகிறேன்!

பக்குவமாய்ப் பேசி மொட்டவிழ்த்து
மெல்லிதழ் தோகை விரியச் செய்து
சுவாசமெல்லாம் அவள் வாசத்தால்
நிரப்பிய பொழுதைப் புரட்டிப் பார்க்கிறேன்!

உந்தி உதைத்து, சிறுகச் சரிந்து
உருண்டு உடல் நழுவி, மெல்ல நகரும்
மழலையின் முதன்முயற்சியாய்
அவள் மனதை எட்டிப் பிடித்த பரவசத்தை
உணரத் துடிக்கிறேன் மீண்டும் குழந்தையாகி!

துளிப்பா கோவை!

பந்திக்கு முந்தாமல் தடுக்க
கையில் திணிக்கப்பட்டது
அட்சதை அரிசி!
-----------------------------------

ஊருக்கெல்லாம் பெய்த மழையில்
என்னை நனைத்தன
எனக்கான மழைத்துளிகள்!
----------------------------
இரவு வரும்போதெல்லாம்
பீதியை போர்த்திக் கொள்ளும்
தூங்காத அசைவுகள்!
-------------------------------
ஊனமுற்ற பிச்சைக்காரரை
கடக்கையில் ஊனமாகிறேன்
பையில் சில்லறையில்லாத போது!
--------------------------------
இன்னமும்
தூங்காத குழந்தையின் சிணுங்கல்
விழித்தபடி நிலவு!
-------------------------------
வீட்டு உரிமையாளருக்குத் தெரியாமல்
மீன் சமைக்கும்போது
காவல் காத்தது பூனை!
-------------------------------
குழந்தைகள் தூக்காததால்
உயிர்ப் பெறாத
கொலு பொம்மைகள்!
-------------------------------
யாரோ ஒருவனை அணைத்தபடி
யாரோ ஒரு வசீகரமான பெண்
தினமும் கடந்து செல்கிறாள்
போக்குவரத்து நெரிசல்களில்!
-------------------------------------------
குட்டிக் குட்டிக் கார்களும்
அமுக்கினால் கத்தும் பொம்மைகளும்
மட்டுமே போதுமாயிருக்கிறது
என் மகனுக்கு;
நாள் முழுக்க சந்தோசமாய் கழிக்க!
-------------------------------------------
பறவைகளில்லாத நேரம்
வத்தி வைத்துச் செல்கிறது
காற்று!

Wednesday, September 21, 2011

தெருவிளக்கு எரியவில்லை
இருளில் மூழ்கியது
காக்கையின் கூடு
கோவிலில் பார்க்குமிடமெல்லாம்
உபயம் எழுதியிருக்கிறது;
எப்படி நம்பிக்கை வரும்?
சில்லறை போடக்கூட
வக்கில்லாத எனக்கு!

Monday, September 19, 2011

கூரை ஓட்டை வழியே
உறங்கும் இடந்தேடி வந்தது
நள்ளிரவின் கனத்த மழை!

Thursday, September 15, 2011

சேகரிப்பதற்கு யாருமில்லையென்றாலும்
வெண்மை நிறப் பன்னீர்ப் பூக்களை
உதிர்த்துக் கொண்டேயிருக்கிறது!

Thursday, September 8, 2011

உடைக்காத காதல்!

மனதுள் நீயே நிறைந்துவிட்டாய்
படிக்கட்டில் தொற்றியபடி
என் பயணம்!

எனக்காகத் துடித்த இதயம்
தடம் மாறித் துடிக்கிறது
சில நேரம் சிரிக்கிறது!

உன்னை விரும்பும் என்னை
உனக்கும் பிடிக்க வேண்டுமென்று
விரும்புகிறேன்!

எத்தனையோ பேரைப்போல
கடந்து செல்ல முடியவில்லை
வெறும் வழிப்போக்கனாய்!

உனக்கான என் காதல்
இன்னமும் பல்லிடைக் கடுகாக
சொல்லவும் முடியாமல்!

நம்பிக்கையோடு இருக்கிறேன்
முட்டை உடையாமலேயே
குஞ்சு பொறிக்குமென!

Tuesday, September 6, 2011

இன்னமும் மடித்து வைக்கப்படாத
அந்த இறுதிக்கட்டத் தூக்கம்
அலாதியானது...
கனவறுந்து போன பொழுதுகளில்
பகற்பொழுதின் அவசரங்கள் வந்து
அப்பிக்கொள்ளக் காத்திருக்கையில்
செல்லக் குழந்தையென
தலையணையை மெல்ல அணைத்து
இருளுக்கும் புலர்வுக்குமிடைப்பட்ட
அதிகாலையைப் பிழிந்தெடுத்து
தன்னை மறக்க வைத்த உறக்கத்தை
விழிமூடி சிலநொடிகள் அனுபவித்து
விடியலில் வழியனுப்புகையில்
இன்னும் சில கணங்கள்  நீட்டிக்கும்படி
கோரிக்கை எழுப்பத் தோன்றும்
சிணுங்கிடும் கடிகாரம் பார்த்து!

பள்ளிப்பருவம் - 1

அதே காதுகிழிக்கும் மணியோசைதான்
பள்ளி விடும்போது மட்டும்
மனதுக்கினிய இசையாக!

பள்ளிப்பருவம் - 2

எத்தனை முறை ஒடித்தும்
ஒருபோதும் திருந்தியதில்லை
பிரம்புடன் திரியும் மணி வாத்தியார்!

பள்ளிப்பருவம் - 3

கருப்பசாமிக்கு
ஆட்டுக்குட்டியை நேர்ந்துவிட்ட
எங்கப்பனின்
ஆயிரத்தெட்டு வேண்டுதல்களோடு
அஞ்சாப்பு "பி" செக்சன் வாத்தியாராக
சுப்ரமணி வாத்தியார் வரக்கூடாதென்ற
என்னோட வேண்டுதலும் அடக்கம்!

பள்ளிப்பருவம் - 4

"ஜனகணமண" அர்த்தம் விளங்கியதில்லை
தினமும் கால்கடுக்க ரசிப்பேன்...
ரமா, சந்திரா பாடும்போது!

பள்ளிப்பருவம் - 5

மூச்சடக்கி முங்கு நீச்சலடித்தவன்
சுவாசத்தைச் சுவைக்கும் மகிழ்ச்சிதான்
விளையாட்டுப் பாடவேளை நேரத்தில்!