Saturday, August 15, 2009

இது எங்க சுதந்திர தினம்!

இது
முதலாளிகள் மாற்றத்தை
அடிமைகள் கொண்டாடும்
திருநாள்!

குண்டு துளைக்காத
கண்ணாடி கூண்டுக்குள்
வீராவேசமாக பிரதமர்!
வேடிக்கை பார்க்கும்
வெளிநாட்டுத் தலைவர்கள்!
பதட்டத்துடன்
பட்டொளிவீசிப் பறக்கும்
தேசியக்கொடி!

உணர்வு கொப்பளிக்க
கொடியட்டையை
சட்டையில் குத்துமுன்பே
காவி மேல் வருமா?
பச்சை மேல் வருமா?
என்ற குழப்பம்
மனதை "சுருக்"கென்று குத்தும்!
ஆண்டுக்கு இருமுறை மட்டுமே
தொங்கவிடும்
அடையாள அட்டையல்லவா?!

இலவசமாக
வம்பளந்த குறுஞ்செய்தி…
இன்று மட்டும்
தேச பக்தர்கள்
அம்பானி, டாட்டா,
ஏழ்மையை விரட்ட
இருபத்தைந்து பைசா
பிடுங்கப்படும்!

பள்ளிகளில்
சாலையோரங்களில்
கொடியேற்றுமிடமெல்லாம்
இனிப்பு மிட்டாய்க்காக
கத்திருக்கும் குழந்தைகள்!
காந்தி நோட்டுக்களால்
கோட்டை பிடித்தவர்கள்
கொடியேற்றி
காந்தியின் பெருமை பேசி
கையாட்டி விட்டு
காரிலேறிச் சென்றபடி...
அடுத்த ஊரில் பெருமை பேச!

விடுமுறையை முன்னிட்டு
தாமதமாக எழுமுன்னே
தேசபக்திப் பாடல்களை
முடித்துவிட்டு
நமீதாவுடன் ஒருநாளைச்
செலவிடத் தொடங்கும்
உலகத் தொலைக்காட்சிகள்!
குடும்பமே
தொலைக்காட்சி முன்னே
தவமிருக்க...
தலைவி மட்டும்
சுதந்திரமின்றி
அடுக்களைக்கும் இங்குமாய்
அலைபாய்ந்தபடி!

No comments: