Friday, January 11, 2008

ஜல்லிக்கட்டுக்குத் தடை! - "விவசாயி வதை தடைச் சட்டம்" வருமா?

பொங்கல் திருநாளில்
ஜல்லிக்கட்டுக்குத் தடை!
காளைகளுக்காக
கண்ணீர் சிந்தியது போதும்...
பெருமாள் கோவிலில்
பிச்சையெடுக்கும்
யானைகளுக்காகவும்
கொஞ்சம் அழுது தொலையுங்கள்!

தூர்வாராத ஏரிகளை
ஏறி மிதித்துப்
பல்லிளிக்கும் கட்டடங்கள்
ஒருபுறம்...
நிலத்தடி நீர் தேடி,
நீர் தேடி,
ஏர் மறந்த நிலங்களை
தேடி வளைக்கும்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
மறுபுறம்!
விவசாயிகளே!
பயிர் வளர்த்தது போதும்...
டாடா கம்பெனியிலே
டயர் துடைக்க வாருங்கள்!

கோதுமைக்கு குவிண்டாலுக்கு
ஆயிரத்திற்கு மேல்...
நெல்லுக்கு மட்டும்
ஆயிரத்தெட்டு யோசனைகள்!
பயிரிலும்கூட
வடநாடு தென்னாடு
பேதமிருக்கு!
ஆறுதலாக ஒரு செய்தி;
விவசாயிகள் தற்கொலையில் மட்டும்
வேற்றுமையில் ஒற்றுமையாய்!

உங்களுக்கு
என் பொங்கல் செய்தி...
மேனகா காந்தியிடம்
கேட்டுப் பாருங்கள்;
அடுத்த பொங்கலுக்குள்
"விவசாயி வதை தடைச் சட்டம்"
வந்தாலும் வரலாம்
உங்களையும் காப்பாற்ற!
பொங்கலோ பொங்கலென
பொங்கட்டும் சிந்தனை...
எல்லோர் மனதிலும்!

1 comment:

bala said...

வத்திராயிருப்பு தெ சு கவுதமன் அய்யா,

எனக்கென்னவோ இந்த ஜல்லிக் கட்டு,ஸ்பயினிலிருந்து ஆரியம் இறக்குமதி செய்து,திராவிடத்தில் புகுத்திய விளையாட்டு என்று சந்தேகம் எழுகிறது.பேசாம குஞ்சுகள், "கோழி விரட்டு","காக்கா விரட்டு" போன்ற தூய திராவிட வீர விளையாட்டுக்களை பொங்கல் அன்று விளையாடி டூரிஸ்ட்களை மகிழ்விக்கலாம் என்று தோணுது.

பாலா