Friday, September 28, 2007

மீண்டும் ஹைக்கூ!

சாலையோர ஓவியத்தில்
யேசுபிரான்...
சில்லரைகளையும் சேர்த்துச் சுமந்தபடி!

சிறுபுள்ளி கூட சிக்காததால்
செல்வி
தற்போதைக்கு "செலவி"யாக!

குழந்தை அழுதது...
அதட்டினார் அப்பா..
சமாதானம் பேசினான் பலூன்காரன்!

குழாயடிச் சண்டை
தயங்கியபடி
நல்ல தண்ணீர்!

அப்பா அம்மா சண்டை
கன்னம் வீங்கியது
எனக்கு!

Wednesday, September 26, 2007

ஹைக்கூ


வாஸ்து பார்க்கவும் நேரமில்லாமல்
கூட்டு முயற்சியில்
தேனீக்கள்!

வெளிச்சத்தை விழுங்கிவிட்டு
விடிய விடியத் தூக்கமில்லாமல்
நிலவு!

விருந்துக்கு யாருமே வரவில்லை
கவலையில்
வலையில் சிலந்தி!

முல்லைக்குத்
தேர் கொடுத்தவன் நினைப்பு
பேருந்தில் தொங்கும்போது!

பரிணாம வளர்ச்சியா?
பரிதாப வளர்ச்சியா?
துப்பட்டாவாக தாவணி!

நறுக்! நறுக்!

கழைக்கூத்தாடி
உயரமான கம்பியில் தான்
அவள் நடக்கிறாள்...
தெருவே நெருக்கடியில்!

ஏ டி எம்
விடிய விடிய
தூக்கமில்லாமல்...
புதுப்பணக்காரன்!

கோடை காலம்
வழிநெடுக
வியர்த்துக்கொட்டியபடி...
தண்ணீர் லாரி!

கிளி ஜோசியம்
அள்ளிக் கொடுத்துக் கொடுத்துச்
சிவந்து போனது
கிளியின் மூக்கு!

கருவாடு
ஈரமில்லாததால்...
ஈரமில்லாததால்...
கருவாடாக இன்று!

Monday, September 24, 2007

குங்குமம் இதழில்...

குங்குமம் இதழில் கவிஞர் வைரமுத்து அவர்களால் தேர்வு செஇயப்பட்ட எனது கவிதை.

Monday, September 17, 2007

சொல்லாமல் வந்தது மழை...

சொல்லாமல் வந்தது மழை...

நினைவுகளில்

குடை சுமக்கும் மனிதர்கள்

நிராயுதபாணியாய்

ஒதுங்க இடந்தேடியபடி!


நொடிகளில் சாலைகள் நனைய,

நிமிடங்களில்

முட்டி மூழ்கும் உடனடி வெள்ளம்!

நடைபாதைக் கடைகள் மூட

நடக்கத் தடை நீங்கியது...

நடக்கத்தான் யாருமில்லை!


ஓட்டுனரின்

கோபத்தையும் சாபத்தையும்

சேர்த்துச் சுமக்கும்

படிதாண்டா பத்தினி(!)கள்...

வேறுவழியின்றி

படி தாண்டி

உள்ளே முண்டியபடி!


அடித்துத் துவைத்துத்

தொங்கவிடப்பட்ட துணிகள்

வியர்வை சொட்டச் சொட்ட

அவசரமாய் அள்ளப்பட்டன!


மிஞ்சிய சோற்றைப்

பக்குவமாய்ச் சேர்த்து

பார்த்துப் பார்த்து

வார்த்த வடகம்...

மொட்டை மாடி முழுக்கச் சேறாக!


கூரை ஓட்டைவழியே

அத்துமீறிய

அம்பு மழையை

கேடயமாய்த் தடுத்திட

வீட்டிலுள்ள பாத்திரங்கள்

அத்தனையும் அணிவகுத்தன!

வழக்கம்போல்

தோற்றுப்போன மழை

சொல்லாமல்

சொல்லிச் சென்றது...

"திரும்பவும் வருவேன்!"