Wednesday, July 8, 2015

பகலெங்கும்
நிரம்பி வழியும் வெயிலில்
நீந்தும் நிழல்கள்
------------
நிழலை உடுத்திக் கொண்டன
துவைத்துக் காயப்போட்ட
உடைகள்...
------------
மொட்டை மாடியில்
கொடியில் காயுது துணி
தரையில் காயுது நிழல்...
------------
வெயில் கொண்டு வந்தேன்
நிழல் கொண்டு வந்தாள்
அவள்
எனக்கும் மகனுக்குமான
ஒளிந்து விளையாட்டில்
ஒளியத் தெரியாமல் பிடிபடும்
என் பால்யம்...
வியர்வை வழிய வழிய
துடைத்தபடியேதான்
நேர்முகத் தேர்வுக்காக
அலைந்து கொண்டிருக்கிறார்கள்
வியர்க்காத ஓர் அறை வேண்டி...
வியர்வை வழிய வழிய
துடைத்தபடியேதான்
உழைத்துக் கொண்டிருக்கிறார்கள்
வியர்க்காத பெட்டியிலே
என்றோ ஓர்நாள்
உறங்கும்வரை...
வியர்க்காத அறையினுள்ளே
உழைப்பவர்களுக்கும்
வியர்க்க வியர்க்க
உழைப்பவர்களுக்குமான பணம்
ஆங்காங்கே
வியர்க்காத அறையில்
ஓய்வெடுத்தபடி...
வழிவதை இன்னமும் நிறுத்தவில்லை
வியர்வை...
நிலவு முளைக்கும்
நட்சத்திரங்கள் முளைக்கும்
உறக்கம் முளைக்கும்
கனவு முளைக்கும்
இரவு முளைக்கும்...
உன்னிடம் சிக்கிக்கொண்ட இரவுகள்
தொலைத்த தூக்கத்தை
தேடியபடியே விடிகின்றன

-----------------------
சுவரில் வரையப்பட்ட பூதத்தின் 
நீண்ட நாக்கில் 
பயமின்றி ஊர்கிறது பல்லி

----------------------
போக்குவரத்து நெருக்கடி நொடிகளில்
பீறிட்டுக் கிளம்பி
வழி கிடைத்ததும் வழிந்து ஓடிவிடுகிறது
சமுதாயச் சிந்தனை