Sunday, February 1, 2009

புரட்சியாளன் முத்துக்குமாருக்குக் காணிக்கை!

(ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்திற்காக 29.1.2009 அன்று, சாஸ்திரி பவன் முன்பாக, தன்னுயிரையே தீக்கிரையாக்கிய புரட்சியாளன் முத்துக்குமாருக்கு இந்த கவிதை காணிக்கை!

என்னால் இயன்றவரை முத்துக்குமாரின் எழுத்துக்கள் அனைத்தையும் நகலெடுத்து மக்களுக்குப் பரவச் செய்யும் பணியை முத்துகுமாரின் இறுதி நிகழ்ச்சியிலேயே தொடங்கி விட்டேன். இதனை நமது கடமையாக நினைத்து அனைவரும் தொடர வேண்டுகிறேன்.)

முத்துக்குமார்!
ஈழ ஆதரவுப்போரில்
தமிழரின் தன்மானத்தை
ஏளனம் செய்தோரை
தன் மரணத்தால்
வாயடைக்கச் செய்தவன் நீ!

ஈழத்தமிழரின்
படுகொலைகள் கண்டு
மனம் பதறினாய்
இந்தியாவின்
பயங்கரவாத முகங்கண்டு
மனம்புழுங்கினாய்
உன் புழுக்கம் தீரவே
நீ குளித்தாயோ?
தீயில்
உன்னை நனைத்தாயோ?

உன்
கருகிய முகம் கண்டேன்
மூடாத உன் விழிகள்
ஒருகணம்
என்னோடும் பேசியது
"என்முன்னே
கூட்டத்தைப் பார்" என்றது...

ஆம்;
தன் வீட்டுத் துக்கமென
தூக்கம் தொலைத்த
மாணவர் கூட்டம் கண்டேன்!

உன்னைத் துருப்புச்சீட்டாக்க
உன் இருப்பையே
ஒருநாள் நீட்டித்த
மாணவர்தம்
ஆவேச முகமும் கண்டேன்!

நீ விரும்பிய தமிழர்கள்
இறுதியாய் உனைக்காண
அடக்கிய தமிழுணர்வெல்லாம்
வெடித்துச் சிதறக் கண்டேன்!

பிரபாகரன் எங்கோ இல்லை...
இங்கே இருக்கிறோமென
இறுமாப்போடு
பிரபாகரன் படந்தாங்கி
பெருமைபேசி
தமிழர்கள் உலவக் கண்டேன்!
எல்லாம்
நீ கொடுத்த தைரியம்தான்!

கட்சிக் கொடிகள்
தன் அடையாளந்தொலைத்து
கருமை பூசிக்கொண்டன
உனக்காக!

துதிபாடிகள் புடைசூழ
தன்னைத் தமிழனென்றும்
தானைத் தலைவனென்றும்
தம்பட்டமடித்து
தமிழால் பிழைத்தவர்கள்
தப்பிப் பயந்தோடிய
நிகழ்வு கண்டேன்!

காந்தியின் பெயராலே
தமிழனிடம் ஓட்டுவாங்கி
தமிழனுக்கே வேட்டுவைக்கும்
இந்திய இறையாண்மை
மயிர்களெல்லாம்
பிடுங்கி எறியப்பட்டு
பொசுக்கப்பட்ட
புரட்சி கண்டேன்!
தேர்தல் வரட்டும்
நேரில் வரட்டும்
செருப்படி நிச்சயம்!

வாக்களிக்கப்
பணம்வாங்கியே
பழகிப்போன தமிழ்ஜாதி
முதல்முறையாக
வெட்கப்பட்டது...
விலைபோக மறுத்த
உன் தந்தையைப் பார்த்து!

நீ
பற்ற வைத்த நெருப்பு
உன் தந்தையை மட்டுமா?
தமிழுலகம் முழுதுமன்றோ
தொற்றிவிட்டது!

உன்னை மட்டுமா பொசுக்கியது?
ஜாதிமதமென்றும்
கட்சியென்றும்
தமிழனைப் பிரித்தாண்ட
சூழ்ச்சியனைத்தையுமன்றோ
பொசுக்கியது!

திலீபனைப்போல்
ஈழத்தமிழர் வரலாற்றில்
உனக்கும்
ஓர் இடம் உண்டு!