இருட்டு உலகில்
சூரியனின் திருட்டு பார்வையே
நீ!
கவிஞர்கள் கூட்டத்தின்
முதல் காரணம் நீ!
அவர்கள் கண்பட்டதாலேயே
நீ கறைபட்டுப் போனாய்!
மாதத்தில் பாதிநாள்
அள்ளி அள்ளிக் கொடுக்கிறாய்
மீதிநாள்
மெல்ல மெல்ல நிறைகிறாய்...
அமுதசுரபியும் நீயே!
இங்கு
தினம் தினமுன்னை
பெருமூச்சுடன்
பார்ப்பவர் கோடி!
உடல் இளைக்கவும்
உடன் பருக்கவும்
சூட்சுமத்தை சொல்லாயோ?!
ராகுவும் கேதுவும்
உனைக் கொன்றதும்
தின்றதும்
இறுதியில் வென்றதும்
நீ
காணாமல் போனதால்
கிடைத்த கதையல்லவா?!
கற்பனாவாதி உன்னை
பெண்ணாக வர்ணிக்கிறான்!
ஆன்மீகவாதி உன்னை
கையெடுத்து கும்பிடுகிறான்!
குழந்தையோ உன்னை
கை நீட்டி அழைக்கிறது!
இருந்தும் ஏனோ
உன் முகத்தில் சோகம்?
ஓ!
அறிவியல் உன்னை
காலால் மிதித்து விட்டதோ?!
No comments:
Post a Comment