ஒகெனக்கல்
உனக்குச் சொந்தமா?
பஞ்சுப் பொதியென
குதித்தோடும் அருவியை
சற்று உற்று பார்!
விட்டால் போதுமென
தமிழகம் நோக்கி
தஞ்சம் தேடும் காவிரியின்
நெஞ்சு துடிக்கும் ஓசை கேள்!
எல்லை
உனக்கும் எனக்குமே...
இயற்கைக்கு எல்லையில்லை!
இதயங்களை
ஓட்டுப்பெட்டிக்குள்
பூட்டிவிட்டால்
வாக்குச் சீட்டுகளே
னாக்கினை ஆளும்!
ஒட்டுப்போட்ட இந்தியாவில்
ஓட்டு அரசியல்...
வாடிக்கையாளர்களாய்
மக்களை (ஏ)மாற்றி
வேடிக்கை பார்க்குது!
கட்டிக்கொடுத்த பெண்ணுக்கே
விருந்தழைப்பு
முதல் மூன்றாண்டுகள்
மட்டும் தான்...
ஆண்டாண்டு காலமாய்
அழைப்பதும்,
அலைக்கழிப்பதுமாய்...
ஏனிந்த புத்தி?
புரிந்துகொள்;
நாம் சம்பந்திகளல்ல,
பங்காளிகள்!
காவிரி நீர் வற்ற வற்ற
வற்றிப்போகும் ஈரம்
பீறிட்டு வழியுதோ
வெள்ள நாட்களில்?
உள்ளபோது
தரமறுக்கும் உள்ளம்
ஏன் மாறுது
வெள்ள நாட்களில்?
தமிழகமென்ன கழிப்பிடமா?
மேகங்களின் முத்தமே,
மண் உமிழ்ந்த
மிச்சமே காவிரி...
உச்சத்திலிருப்பதாலேயே
உனக்குச் சொந்தமில்லை!
பிச்சை கேட்கவில்லை,
பயிர் வாடப் பார்த்திருந்தோம்;
உயிர் வாழவும் காத்திருப்பதோ?
பங்கினைக் கேட்கிறோம்!
உரிமையோடு எடுக்கிறோம்!
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
தேவை வீரமல்ல...
ஒரு துளி ஈரம்!
No comments:
Post a Comment