Tuesday, April 22, 2008

இது ஒரு கோடைகாலம்!

கோடை விடுமுறையின்
உச்சகட்டக் கொண்டாட்டத்தில்
தெருவெங்கும்
பறக்கும் பந்துகளைத்
தடுக்கும் சிறுவர்கள்...
தயவுசெய்து
தெருவில் நடக்காதீர்கள்!

உழைக்கப் பயந்து
வீட்டினுள் முடங்கும்
சொம்பேறிகளையும்
உழைக்கமலேயே
உடல் வியர்க்க வைக்கும்;
நம்மை வியக்க வைக்கும்!

வியர்வையை ஒற்றி ஒற்றி
கைக்குட்டைகள்
நீர் நிரம்பிய
குட்டைகளாகச சொட்டியபடி!
சொட்டுநீர் சேகரித்தால்
வீராணத்தை நிரப்பலாம்!

வீட்டுத் தொலைக்காட்சிகளில்
ஷாருக்கான் முதல்
நம்மூர் திரிஷா வரை
வெயிலை விரட்டிட
யோசனை சொல்கிறார்கள்;
விஞ்ஞான ரீதியாக அல்ல,
விளம்பரரீதியாக!

ரேடியோ மிர்ச்சி மட்டுமல்ல
சூரியனும் கூட
இப்போ
செம ஹாட் மச்சி!

Wednesday, April 16, 2008

நிலா

இருட்டு உலகில்
சூரியனின் திருட்டு பார்வையே
நீ!
கவிஞர்கள் கூட்டத்தின்
முதல் காரணம் நீ!
அவர்கள் கண்பட்டதாலேயே
நீ கறைபட்டுப் போனாய்!

மாதத்தில் பாதிநாள்
அள்ளி அள்ளிக் கொடுக்கிறாய்
மீதிநாள்
மெல்ல மெல்ல நிறைகிறாய்...
அமுதசுரபியும் நீயே!

இங்கு
தினம் தினமுன்னை
பெருமூச்சுடன்
பார்ப்பவர் கோடி!
உடல் இளைக்கவும்
உடன் பருக்கவும்
சூட்சுமத்தை சொல்லாயோ?!

ராகுவும் கேதுவும்
உனைக் கொன்றதும்
தின்றதும்
இறுதியில் வென்றதும்
நீ
காணாமல் போனதால்
கிடைத்த கதையல்லவா?!

கற்பனாவாதி உன்னை
பெண்ணாக வர்ணிக்கிறான்!
ஆன்மீகவாதி உன்னை
கையெடுத்து கும்பிடுகிறான்!
குழந்தையோ உன்னை
கை நீட்டி அழைக்கிறது!
இருந்தும் ஏனோ
உன் முகத்தில் சோகம்?
ஓ!
அறிவியல் உன்னை
காலால் மிதித்து விட்டதோ?!

Thursday, April 10, 2008

ஒகெனக்கல் உனக்குச் சொந்தமா?

ஒகெனக்கல்
உனக்குச் சொந்தமா?
பஞ்சுப் பொதியென
குதித்தோடும் அருவியை
சற்று உற்று பார்!
விட்டால் போதுமென
தமிழகம் நோக்கி
தஞ்சம் தேடும் காவிரியின்
நெஞ்சு துடிக்கும் ஓசை கேள்!
எல்லை
உனக்கும் எனக்குமே...
இயற்கைக்கு எல்லையில்லை!

இதயங்களை
ஓட்டுப்பெட்டிக்குள்
பூட்டிவிட்டால்
வாக்குச் சீட்டுகளே
னாக்கினை ஆளும்!
ஒட்டுப்போட்ட இந்தியாவில்
ஓட்டு அரசியல்...
வாடிக்கையாளர்களாய்
மக்களை (ஏ)மாற்றி
வேடிக்கை பார்க்குது!

கட்டிக்கொடுத்த பெண்ணுக்கே
விருந்தழைப்பு
முதல் மூன்றாண்டுகள்
மட்டும் தான்...
ஆண்டாண்டு காலமாய்
அழைப்பதும்,
அலைக்கழிப்பதுமாய்...
ஏனிந்த புத்தி?
புரிந்துகொள்;
நாம் சம்பந்திகளல்ல,
பங்காளிகள்!

காவிரி நீர் வற்ற வற்ற
வற்றிப்போகும் ஈரம்
பீறிட்டு வழியுதோ
வெள்ள நாட்களில்?
உள்ளபோது
தரமறுக்கும் உள்ளம்
ஏன் மாறுது
வெள்ள நாட்களில்?
தமிழகமென்ன கழிப்பிடமா?

மேகங்களின் முத்தமே,
மண் உமிழ்ந்த
மிச்சமே காவிரி...
உச்சத்திலிருப்பதாலேயே
உனக்குச் சொந்தமில்லை!
பிச்சை கேட்கவில்லை,
பயிர் வாடப் பார்த்திருந்தோம்;
உயிர் வாழவும் காத்திருப்பதோ?
பங்கினைக் கேட்கிறோம்!
உரிமையோடு எடுக்கிறோம்!
கொடுப்பதற்கும் எடுப்பதற்கும்
தேவை வீரமல்ல...
ஒரு துளி ஈரம்!