நாற்று
இம்முறையும்
ஒரு படத்தில் ஊருக்கு அருகே இருக்கின்ற மலையைத் தூக்குவதாகச் சொல்லி ஊர் மக்களை ஏமாற்றுவதாக நடிகர் செந்தில் காமடி பண்ணியிருப்பார்! இன்னொரு படத்தில் நடிகர் வடிவேலு, தனது கண்ணில் கடவுள் தெரிவதாகச் சொல்லி ஊர் மக்களை ஏமாற்றுவார்! இதையெல்லாம் மிஞ்சும்படியாக நேற்று சாய்பாபா வழக்கம்போல ஒரு "தில்லாலங்கடி" வேலை செய்திருக்கிறார்!
நேற்று (04.10.2007) சாய்பாபா குடியிருக்கும் பிரசாந்தி நிலையத்திலிருந்து, மாலை 6.30 மணிக்கு "விஸ்வரூப விராதி" நிகழ்ச்சி நடக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. அதாகப்பட்டது, பால்கனி வழியே "தரிசனம்" கொடுத்து வந்த சாய்பாபா நேற்று மாலை 6.30 மணிக்கு நிலவிலிருந்து தரிசனம் தரப்போவதாக அறிவிக்கப்பட்டது!
வழக்கம்போல இதுபற்றி அறிவுப்பார்வை பார்க்க மறுக்கும் அவரது பக்தகோடிகள் பலரும் பிரசாந்தி நிலையத்திலிருக்கும் மைதானத்தில் கூடி விட்டனர். இவர்களோடு ஏமாற்றுக்கார சாய்பாபாவும் அங்கு வந்து சேர்ந்து கொண்டார்! பூமியில் இருக்கும் பாபா நிலவில் காட்சி தரும் அற்புதத்தைப் பார்க்கும் ஆர்வத்தோடு அனைவரும் வானத்தைப்பார்க்க, அங்கு நிலா ஆப்சென்ட்!!
நம்மளை வைத்து பாபா "காமடி கீமடி" பண்றாரோ என நினைத்துக் கொண்ட நிலா மேகத்தினுள் மறைந்துகொண்டு வெளியே தலைகாட்டவேயில்லை!! நிலவில் தரிசனம் தரக்கூடிய சாய்பாபாவாலும் நிலவை மூடி மறைத்திருக்கும் மேகக்கூட்டத்தை ஊதித்தள்ளி விலக்க முடியவில்லை!! இறுதியாக, இன்னொரு நாள் காட்சி தருவதாக பாபா சொன்னதும் கூட்டம் ஏமாற்றத்துடன் கலைந்தது!!!
தமிழ்த் திரைப்படத்துறையினர் இந்த காமெடி நிகழ்ச்சியை தங்கள் அடுத்த படத்தில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்!!!