Monday, January 26, 2009

ஈழத்திற்காக ஓர் ஆர்ப்பாட்டம்...

இன்று (ஜனவரி 26,09) மக்கள் கலை இலக்கியக் கழகம் மற்றும் அதன் சார்பு இயக்கங்கள் இணைந்து நடத்திய ஈழத்தமிழர்கள் மீது இனவெறித் தாக்குதல் நடத்தும் இலங்கை அரசுக்கும், அதற்கு முழுக்க பக்கபலமாக இருந்து ஆயுத உதவி செய்யும் இந்திய அரசுக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவதாக வந்த குறுஞ்செய்தியையடுத்து நானும் அதில் கலந்துகொள்ளச் சென்றேன். சைதாப்பேட்டை பேருந்து நிலையத்திற்கு எதிர்ப்புறத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இலங்கைப் பிரச்சனையில் மற்ற தமிழகக் கட்சிகளிலிருந்து சற்று மாறுபட்ட கொள்கை கொண்டவர்களாக என்னால் புரிந்துகொள்ளப்பட்ட மகஇகவினரின் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதன்மூலம், இலங்கைப் பிரச்சனையில் இந்திய அரசின் செயல்பாடு குறித்து சரியான கோணத்தில் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. நான் தெரி(ளி)ந்துகொண்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வது என் கடமையென்பதால் இந்த கட்டுரை.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தோழர்.மருதையன் அவர்களின் உணர்ச்சிகரமான பேச்சிலிருந்து நான் புரிந்துகொண்ட செய்திகள்:
இந்திய அரசு வர்த்தகரீதியாக இலங்கை அரசை ஆதரிக்கும் நிலைப்பாட்டைப் போட்டுடைத்தார். தமிழக அரசியல்கட்சிகளால் பரவலாகப் பேசப்படும், தவறான வழிகாட்டுதலால்தான் மன்மோகன்சிங் இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் என்ற கருத்து தவறென்பதை எடுத்துரைத்தார்.

இந்தியப் பணமுதலைகள் அம்பானி, டாடா போன்றவர்களின் தேயிலைத் தோட்டம், சிமெண்டுத் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு வர்த்தகங்கள் பிரச்சனையேதுமின்றி தொடர இலங்கை அரசை அனுசரித்து, அதனைத் தனது கட்டுக்குள் வைத்திருப்பது என்ற இந்திய அரசின் வெளியுறவுக் கொள்ளையே இதற்கான் மூலகாரணம் என்ற விசயத்தை விளக்கினார். இதற்குச் சரியான உதாரணமே, சமீபத்தில் பணமுதலைகளுக்கு ஆதரவாக சிங்கூரில் இந்திய மக்களின்மீதே நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு. தனது கட்டுக்குள் வராத ஒரே காரணத்தினால் அமைதிப்படை என்ற பெயரில் இந்திய ராணுவத்தை அனுப்பி தமிழ்ப் போராளிகள்மீது நடத்திய தாக்குதலையும், அதையொட்டி தமிழக மக்களைக் கொடூரமாகப் படுகொலை செய்த, தமிழ்ப் பெண்களை வன்புணர்வு செய்து கொன்றுகுவித்த ராணுவ வெறியாட்டத்தையும் நினைவுபடுத்தினார்.

இன்றுவரை இந்திய அரசின் ஆயுத உதவியுடன் நடைபெற்றுவரும் தமிழ்ப் போராளிகள் மீதான தாக்குதலைத் தடுத்து நிறுத்தச் சொல்லி வெளியுறவுத்துறை அமைச்சரை இலங்கைக்கு அனுப்பச் சொல்வது கேலிக்கூத்தான விசயமென்றும், இதுவிசயமாக மன்மோகன்சிங் இலங்கைக்குச் சென்றாலும் போரைத் தொடர்ந்து நடத்தத்தான் வலியுறுத்துவார் என்ற எதார்த்தத்தைப் புரியவைத்தார். எனவே இந்திய அரசுக்கு எதிராகப் போராடும் அனைவரும், இந்திய அரசை இலங்கைப் பிரச்சனையில் தலையிடக்கூடாதென வலியுறுத்திப் போராடுவதே சரியான நிலைப்பாடு என்பதை எடுத்துரைத்தார். இதைத் தமிழகக் கட்சிகள் புரிந்துகொண்டால் சரி.

ஈழ மக்களுக்கு எதிரான போராட்டத்தில் இலங்கை ராணுவத்தின் வெற்றியைப் பெருமிதத்தோடு செய்தி வெளியிடும் இந்துராம், ஈழத்தமிழர்களுக்கு எதிராகக் கருத்துக் கொண்ட சோ, போரில் ராணுவத்தாக்குதலால் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்கமுடியாதது எனக்கூறி ஈழத்தமிழர்களைக் கிள்ளுக்கீரையாகக் கருதும் ஜெயலலிதா, அமெரிக்க ஏஜெண்ட் சு.சாமி, ராஜீவ்காந்தியின் மரணத்தால் சென்டிமென்ட் அரசியல் நடத்தும் காங்கிரஸ் என அனைவரின் முகத்திரையையும் கிழித்தார்.

விடுதலைப் போராட்டம் என்பது தேதி குறிப்பிட்டுத் தொடங்குவதல்ல, தேதி குறிப்பிட்டு நிறைவுசெய்யப்படுவதுமல்ல என்றும், தங்களது போராட்டமும் தொடருமென அறிவித்தார். ஆம், கிளிநொச்சி வீழ்ந்தாலும், முல்லைத்தீவு வீழ்ந்தாலும், ஏன், பிரபாகரனுக்குப் பிறகும்கூட அங்குள்ள மக்களின் உரிமைப்போராட்டம் என்பது தொடர்ந்து கொண்டேதான் இருக்குமென்ற உறுதியான நம்பிக்கையுடன் அங்கிருந்து கிளம்பினேன்.

இத்தனையும் சொன்ன நான், மகஇக தோழர்கள் பற்றிக் குறிப்பிடாமல் இருந்தால் சரியாக இருக்காது. இவர்களின் ஆர்ப்பாட்டத்திற்கு முதல்நாள், மாநாடு நடைபெற்றதால் அதிலும் கலந்து கொள்வதற்காக தங்கள் உடுப்புகளடங்கிய கைப்பையோடு வந்திருந்த அனைவர் முகத்திலும் ஏழ்மையை மீறிய இனஉணர்வு வெளிப்பட்டது. மிகவும் கட்டுப்பாட்டோடு, பொதுமக்களுக்கு மட்டுமென்றில்லாமல், காவல்துறையினருக்கும் எந்தவிதத்திலும் சிரமமுமில்லாமல் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். குடியரசு தினத்தன்று, இந்திய அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டம் என்பதால் பரபரப்புடன் வந்திருந்த காவல்துறையினர், தோழர் கோவனின் இனஉணர்வுமிகுந்த, கணீரென்ற பாடல்களுக்கு மெய்மறந்து நின்றதைக் காணமுடிந்தது. தன் தந்தையின் தோள்மீது தூக்கி உட்காரவைக்கப்பட்டிருந்த பையனின் கையில் செங்கொடி, ஆண்களுக்குச் சரிநிகர்சமமாக பெண்களும் இனஉணர்வோடு முன்னின்று நடத்திய ஆர்ப்பாட்ட முழக்கம் அவ்வழியாகப் பேருந்திலும், மற்ற வாகனங்களிலும் கடந்துசென்ற மக்களை வியக்க வைத்தது. அனைவரையும் கைதுசெய்ய வந்திருந்த காவல்துறை உயர்அதிகாரி ஒருவரே, தனது வியப்பினை தோழர்.மருதையனிடம் வெளிப்படுத்திய செய்தியும் என் காதுகளுக்கு எட்டியது.

4 comments:

புதுகைச் சாரல் said...

ஒரு வெளங்காவெட்டியின் இலக்கிய யாத்திரைசத்தமில்லாமல் ஒரு இடி.......காட்டில் மழைநிஜார் போட்ட மனிதனின் பேஜார்

சுந்தரவடிவேல் said...

போராட்டத்தில் கலந்துகொண்டமைக்கும், பதிவுக்கும் மிக்க நன்றி!

ஜேகே - JK said...

வெறுமையாக எழுதி பேசி ஒன்றும் பயனில்லை. தெருவில் இறங்கி போராட வேண்டிய நேரம்...

பங்கேற்பிற்கும் பதிவிற்கும் நன்றி

porattamtn said...

//விடுதலைப் போராட்டம் என்பது தேதி குறிப்பிட்டுத் தொடங்குவதல்ல, தேதி குறிப்பிட்டு நிறைவுசெய்யப்படுவதுமல்ல//

அத்தகைய விடுதலைப் போராட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டதற்கு வாழ்த்துக்கள்!