Tuesday, March 25, 2008

தப்பு தப்பாக!

(பேருந்து நிறுத்தம்)

பெரும்பாலும்
பேருந்துகள் நிற்பதில்லை...
புரியாத மனிதர்கள் மட்டும்!

தொலைக்காட்சியால் பேச மறந்ததை
செல்பேசியில்
பேசும் உறவுகள்!

பேருந்துகளை ஓரங்கட்டி ஓரங்கட்டி
மக்களால் ஓரங்கட்டப்பட்ட
பயணச்சீட்டு ஆய்வாளர்கள்!

நொடிக்கு நொடி
கடிகாரத்தில் முகம் பார்க்கும்
தாமதவாதிகள்!

சில்லரை மிச்சங்களை
ஏ(ஓ)லத்தில் எடுக்கும்
பிச்சைக்காரர்கள்!

Friday, March 14, 2008

திருமண மண்டபம்

திருமண மண்டபம்
ஒருநாள் கூத்துக்கு
வேடதாரிகளாக
பார்வையாளர்களும்!

செம்பு கலந்த பொன்நகை
வம்பு கலந்த
புன்னகைப் பெண்கள்!

பிரசவ வேதனையிலும்
சிரித்தபடி
மணப்பெண்ணின் தந்தை!

அட்சதை அரிசியை எறிந்தும்
விலகாத
புகைப்படக்காரர்!

பாட்டுக்கச்சேரி முடியவும்
சீட்டுக்கச்சேரி
விடிய விடிய!

கூட்டத்தின் பொய்யும் மெய்யும்
இறுதியில் அளக்கப்படும்
மொய்யாலே!