மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
யானை கட்டிப் போரடித்த கூட்டம்
இன்று
வீடு கட்டிப் போரடிக்கிறது
என் மேல்!
வயலும்
வயல் சார்ந்ததும் மருதம்...
தொழிலும்
தொழில் சார்ந்தோரும்
பிழைக்க
என் வயிற்றில்
'பாலை" வார்ப்பது
என்ன நியாயம்?
வறண்ட கோடுகளால்
இயற்கையன்னை வதைப்பது போதும்:
இல்லாத கோடுகளால்
தண்ணீர் இல்லாமல் செய்வது
என்ன கொடுமை?
அணைக்கட்டுகள்
என்னை அரவணைக்காததை
என்னவென்பது?
மொழிகளால்
பிரிந்த உங்களிடம்
எந்த மொழியில் வேண்டுவது?
என்னிடம்
ஆழப்பாய்ந்து நீரள்ளிப் பருகும்
வேரில்லை:
நீர்த்தாகம் தீர
உங்களை விட்டால்
கதி வேறில்லை!
பசுமை தந்தேன்
இன்று
சுமையாகிப் போனேன்!
என்னை
வருடிச் சென்ற தென்றல்
நெருடலாய் கேட்கிறது
ஏன் கம்பிகளாய்
மாறி வருகிறாயென்று!
ஏரு பூட்டி சேறு பூசி
என்னை
கிச்சுக்கிச்சுக்காட்டி
விளையாடிய நீங்களா
இன்று
உயிருடன் பிரேதப்பரிசோதனை செய்வது?
பெற்றவள் கைவிட்டாள்...
பெற்றவனோ
விற்றுவிற்று வெற்றிடமாக்கி
மீண்டும் விற்றுவிட்டான்!
இன்னமும் இருக்கிறேன்...
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்
சுடுகாடு இடுகாடுபோல்
தீண்டத்தகாத வயக்காடாக!
ஒரே ஆறுதல்:
பொங்கல் பண்டிகையை
இன்றுவரை
பெயர் மாற்றவில்லை...
செங்கல் பண்டிகையென்று!