நான் தேடிக்கிடைக்காத நிம்மதி
என்னைத் தேடிவரும் வரம்
கனவு!
ஒவ்வோர் இரவிலும்
சில
கனவுகளைத் தொலைத்துவிட்டுத்தான்
விழிக்கிறேன்
கசங்கிய படுக்கையை
உதறிவிட்டு மடிக்கும் போதும்
அகப்படுவதில்லை!
அள்ளக்குறையாத
தங்கக்குவியலை
ஏறிமிதித்து
சரித்து விளையாடுகையில்
கடித்த கொசுவை
நசுக்கும் நொடியில்
கனவு தொலைத்த சோகத்தை
யாரிடம் சொல்வேன்?!
உறக்கத்தின் பயணத்தில்
சிலநேரம் வானவில்லாய்
சிலநேரம் கானலாய்
எல்லாமே கணநேரமே!
ஆம்
அதிகபட்ச ஆயுசே
20 நிமிடம் தானாம்...
குறும்படம் போல்!
மனதை அரித்த நினைவுகள்
எக்கச்சக்க அச்சுப்பிழையுடன்
மறுபிரசுரமாவதை வியந்திருக்கிறேன்!
புகைப்படத்தில் சிரிக்கும் அப்பா
எப்போதாவது பேசிச் செல்வார்...
சாவின் வலியை
அவர் சொன்னதில்லை
வரும் வழியை
நான் கேட்டதுமில்லை
பேசிக் கொள்வோம்
வழக்கம்போல்
இன்றைய செய்தியையும்!
ஆசை முளைத்த நாள்முதலாய்
உறவு களைந்த உறவும்
வயது மரத்த மனமும்
காலம் கடந்த காலத்திலும்
உறுத்தாமல்...
நிறுத்தாமல்...
இந்திரனுக்கு இணையாக!
யார் தடைபோட்டது
கனவுக்கன்னியென்று?!
ஒற்றைக்கொம்பு சிறுத்தை
தொற்றிப் படரும் தென்னை
வற்றிய கிணற்றில்
தலைகுப்புற விழுந்தும்
அடிபடாத நான்!
இப்படி
எத்தனையோ ஆச்சர்யங்களை
அடுக்கலாம்...
என் கனவு அருங்காட்சியகத்தில்!
மன்னிக்கவும்
இதைப் பார்வையிட
என்னைத் தவிர
யாருக்கும் அனுமதியில்லை...
உங்களுக்காக
பயணக்கட்டுரை எழுதுவேன்
படித்துச் செல்லுங்கள்
யாரேனும் பிரசுரித்தால்!