வருகிறது...
இன்னுமொரு சுதந்திர தினம்!
நாள்தொறும்
வன்முறையையும்
தீவிரவாதத்தையும்
கட்டவிழ்த்துவிடும்
அரசியல்வாதிகளால்
அன்றொருநாள் மட்டும்
மலர்கள் கட்டவிழ்த்துவிடப்படும்!
"வசூலித்த" பணத்திலிருந்து
மிட்டாய்கள் வழங்கப்படும்!
லஞ்சத்தில் ஊஞ்சலாடும்
அரசு அலுவலகங்களனைத்தும்
அன்று மட்டும்
தேசிய வர்ணத்தால்
வேசங்கட்டும்!
வடநாட்டவர்க்கு
ஹோலி பண்டிகை
இவர்களுக்கோ
இது ஒரு போலிப் பண்டிகை!
பள்ளிகளில்
மேலும் சில மணித்துளிகள்
கூடுதல் வழிபாடு நடக்கும்...
அனைவரின் சட்டைப்பையிலும்
கோடி குத்தப்பட்டிருக்கும்
காவிநிறம் மேல்வருமா?
பச்சை நிறம் மேல்வருமா?
பட்டிமன்றமும் நடக்கும்!
கால்கடுக்க நிற்கவைத்தாலும்
விடுமுறையை நினைத்தால்
வலி மறக்கும்!
இந்திய சுதந்திர வரலாறு
சொல்ல மறந்த தொலைக்காட்சிகள்
இந்தியத் திரைப்பட வரலாற்றில்
முதல்முறையாக
ஏதேனும் சாதனை செய்யும்!
உடையைத் தியாகம் செய்த
இறக்குமதி நடிகைகளும்
தயாரிப்பாளர்களை
"செக்"கிழுக்கவைத்த நடிகர்களும்
அவ்வப்போது தமிழ்பேசி
ஆச்சர்யப்படுத்துவார்கள்!
விளம்பரதாரர்களால்
சுதந்திரதின வாழ்த்துக்கள்
இரு நிமிடங்களுக்கு ஒருமுறை
கூவிக்கூவி விற்கப்படும்!
அன்றும்கூட சுதந்திரமின்றி
அடுப்படிக்கும் தொலைக்காட்சிக்குமாய்
அல்லாடியபடி
வீட்டில் "சும்மா" இருக்கும்
இல்லத்தரசிகள் இயங்கிவர,
சுதந்திரமாக ஆண்வர்க்கம்
வழக்கம்போல
இன்னுமொரு சுதந்திரத்தை
கொண்டாடி மகிழும்!