Monday, June 30, 2008

நீ ஒன்றும் பேரழகியல்ல...
எப்படிப் புரிய வைப்பேன்
என் மனதிற்கு!

நாம் கனவிலிருக்கும்போது
கவனமாய் இரு...
கன்னத்தில் கொசுக்கடிகள்!

தினமும்
உன்னைச் சுற்றிச்சுற்றிப் பார்த்து
பொறாமைப்படுகிறது சேலை!

வந்து போகும் காதல்!

கூட்டுக் குடித்தனத்தில்
யாருமற்ற நேரம்பார்த்து
வந்து போகும் காதல்!

பரிவும் புரிதலும்
ஒதுங்கி நின்ற உரிமையும்
ஒன்றோடொன்று மோதிக்கொள்ளும்!

முன்னுரை முடிவுரை பேதமின்றி
கட்டுரை முடியும்...
நேரமின்றி!

சூரியன்

தினமும்தான் பார்க்கிறேன்...
இருந்தும்
ஏதோ ஒன்றை இழந்த தவிப்பு...
உன் மறைவைப் பார்க்கையில் மட்டும்!

தினம்தினம்
என் ஒருநாள் பொழுதை
எங்கே பதுக்குகிறாய்?
இடத்தைச் சொல்;
அள்ளி எடுத்துவந்து
நானாக ஒருமுறை
வாழ்ந்து பார்க்கிறேன்!

மின்சார ரயிலில்
பார்வையற்ற பாடகன்போல்
பயண நேரங்களில் மட்டும்
பார்வையில் படுகிறாய்...
பாவம்,
தினமும் உன்னை மட்டும்
திட்டியே பழகிவிட்டேன்!

தினமும்
நீ நடையாய் நடப்பது
ஏதேனும் வழக்கு விசயமா?
அல்லது
வழக்கமான விசயமா?

ஒரே பார்வையில்
மலர வைக்கவும்
உலர வைக்கவும்
உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது?

இது டிஜிட்டல் யுகம்;
நள்ளிரவுவரை
சன்டிவிக்காக விழித்திருப்பதால்
சூரிய நமஸ்காரமெல்லாம்
இனி நடக்காது!
வேண்டுமானால்
செல்பேசி எண் கொடு,
குறுஞ்செய்தியில் அனுப்புகிறோம்!

நவக்கிரகங்களின்
உச்ச நட்சத்திரமே!
அச்சாணியாய் நீயிருப்பதால்
அச்சமின்றி சுற்றுகிறோம்!
எங்கள் வாழ்வில் ஒளியேற்றி
தன்னைத்தானே
எரித்துக்கொள்ளும்
உன்னுள் மிளிருது தாய்மை!

நீ
தூங்கப்போவதாகச் சொல்லி
தினமும் எங்களை ஏமாற்றுகிறாய்...
நாங்களும் ஏமாறி தூங்கப்போகிறோம்!

எனக்கு மட்டும் சக்தியிருந்தால்
உன்னையும் ஒருநாள்
இருளில் இழுத்துவந்து
தூங்க வைப்பேன்!

Monday, June 16, 2008

தொலைக்காத என் கவிதை!

தொலைக்காத கவிதையைத் தேடி
தெருவில் நடந்து சென்றேன்...

எண்ணை விடாத மிதிவண்டி
முனங்கியபடி
கடந்து சென்றது என்னை!

தெருவோரக் குப்பையில்
பால்கவர் பொறுக்கிய பெண்ணை
'தீண்டாமல்' திட்டின தெருநாய்கள்!

அறுந்து கிடந்த செருப்பில்
பலமுறை குத்தியிருக்கிறது...
தையல் ஊசி!
சற்று தூரத்தில்
'உடன் குப்பை' ஏறிய
மற்றொரு செருப்பு!

பாதியிலேயே வீடு திரும்பினேன்
குப்பையில் கிடைத்த
தொலைக்காத என் கவிதையோடு!