Showing posts with label ஈழப் பிரச்சனை. Show all posts
Showing posts with label ஈழப் பிரச்சனை. Show all posts

Sunday, March 15, 2009

தேர்தல் வந்திடுச்சு!

வெள்ளித்திரை விலக்கி
"பிரச்சார பீரங்கி" பவனி!
கையசைக்கிறார்...
புன்னகைக்கிறார்...
வியர்வை துடைக்கிறார்...
சூட்டிங் முடிந்ததும்
கூட்டம் கலைகிறது
"நல்ல கலருடா!"
கொள்கை பேசியபடி!
------------------------

ஈழப் பிரச்சனைக்காக
தெருவில் நின்று
போராடிய பட்டியல்
போகுமிடமெல்லாம்
பறையடிக்கப்படும்!
தானே தமிழனென்றும்
தானைத் தலைவனென்றும்
திரும்பத்திரும்ப
நினைவுபடுத்தப்படும்!
------------------------

தேர்தல் பிரச்சாரத்தில்
யாராவதொரு
"அடுத்த பிரதமர்"
"நன்றி வணக்கம்"
என்று தமிழில் பேச,
ஒரு வரி மட்டும் புரிந்ததில்
புல்லரித்துப் போகும்
கூட்டி வந்த கூட்டம்!
------------------------

தேர்தல் கமிஷனின்
கடுமையான விதிகள்...
கெடுபிடிகள்...
கட்டுப்பாடுகளையெல்லாம்
உடைத்தெறிந்துவிட்டு
எப்பாடுபட்டாவது
காப்பாற்றப்படுகிறது
இந்திய இறையாண்மை!
------------------------

சுவற்றில் இடம்பிடிக்க
போட்டா போட்டி!
யாருக்கும் நம்பிக்கையில்லை...
மக்கள்
மனதில் இடம்பிடிக்க!
------------------------

வரிசையாகப் பலரும்
தேடித்தேடி
பொத்தானை அழுத்தினாலும்
சரியான பொத்தான்
இன்றுவரை
யாருக்கும் அகப்படவேயில்லை!
------------------------

தேர்தலன்று
நாம் செய்யும் தவறு
சில நாட்களாவது உறுத்துகிறது
கரும்புள்ளியாக!
சிலர்
வெட்கமில்லாமல்
துடைத்தபடி...
மீண்டும் கரும்புள்ளி குத்த!
------------------------

காந்தி
மறைந்தும் வாழ்கிறார்...
மறைந்து மறைந்து
வாழ்கிறார்;
ஆரத்தித் தட்டிலும்
வாழை இலைக்கடியிலுமாக!
அர்த்தம் புரிகிறது
காந்தியின் புன்னகைக்கு!