Showing posts with label அம்மா. Show all posts
Showing posts with label அம்மா. Show all posts

Sunday, May 10, 2009

இப்படிக்கு... அம்மா!

இரவுபகலறியாமல்
கருவறையிலிருந்த குழந்தை
நள்ளிரவில் அழுதவுடன்
சட்டென விழித்து
பாலூட்டியமர்த்துவாள்...
இரவுபகலறியாமல்!
------------------

நான்
நித்தம் காணும் நிலவு
இன்றுவரை
கறை துடைக்கப்படாமல்
அப்படியே இருக்கிறது...
யாரோவொரு தாய்
இன்றும்கூட
நிலாச்சோறு ஊட்டியிருக்கிறாள்!
------------------

மழலையிடம் மொழி பழக
தவழுகையில் துள்ளிக்குதிக்க
புன்னகையைப் படம்பிடிக்க
வீதியிலிறங்கிச் சோறூட்ட
வாரக்கடைசி வரத்திற்காக
ஒவ்வொருநாளும் வேண்டியபடி...
பணிக்குச் செல்லும் அம்மா!
------------------

உருண்டு புரண்டு விளையாடி
அழுக்காக்கிய உடையுடன்
வீடு திரும்பியவனை
அதட்டி அடித்தவளின்
வீட்டுக் கொடியில்
மறுநாள்
பளிச்செனக் காயும் உடைகள்...
மீண்டும் அழுக்காகத் தயாராய்!
------------------

மகளுக்கு முதல் தோழியாய்
உலகைப் புரியவைத்து
செல்லமாய் கண்டித்து
சிலநேரம் கண்காணித்து...
தலை நரைத்தபின்னும்
தொடர்கிறது
தலைமுறை தாண்டிய பய(ண)ம்!