Friday, June 18, 2010

இலவசமாய்!

"இருக்கிறவங்கல்லாம் கையத் தூக்கு!"
யாரோ கேட்டதுபோல்
கைதூக்கிப் பெருமை பேசிய
மொட்டை மாடிகள்...
விடிவெள்ளிக்காக
இரவெல்லாம் காத்திருந்து
விடிந்த பொழுதில்
கூடுதலாய் காட்சியளித்த
ஒரு பாடலை ஒரு வாரம் முழுக்க
பேசிக் களித்த என் மூஞ்சியில்
ஒன்றரை டன் வெயிட்டான குத்துவிட்டு
ஐந்து நிமிடத்திற்கொருமுறை
அலறிக் குத்தாட்டமிட்டு
காட்சியளிக்குது நடுவீட்டில்!
போக்கிய பொழுதுகளை
ஆக்க முடியாத அவஸ்தையில்
அவ்விடம் அகன்று வாசல் திறந்தால்
இன்னொன்று இளித்து நிற்குது
இலவசமாய்!

அரிதார புருஷர்கள்!

கிழிந்து கந்தலான
நிர்வாணச் சாலைகள்
அவசர அவசரமாக
ஆடையணிந்து கொண்டன

சாலை நடுவே
பொறிக்கக் காத்திருந்த
கொசு முட்டைகளோடு
திறந்து கிடந்த
கழிவுநீர்ச் சமாதிகள்
கல் போட்டு மூடப்பட்டன

முகத்தில் பிளீச்சிங் பவுடர்
பூசிய மூத்திரச்சந்து
பளிச்செனச் சிரித்தது
வழிநெடுக

தங்க நகைகளின்
விலையேற்றம் பற்றி
சற்றும் கவலையின்றி,
நாய்ச்சங்கிலி மாட்டிய தலைகள்
டிஜிட்டலில் சிரித்தன
வரிசையாய்

பேனருக்குக் கீழே
காவலிருக்கும் காக்கிகள்
காத்திருந்தன
எந்நேரமும் கடக்கவுள்ள
கார்க்கண்ணாடிக்கு
விறைப்பான வணக்கம் சொல்ல

வெறிச்சோடிய சாலையில்
சைரன் ஒலிக்க
வெறிபிடித்தோடிய வாகனம்
கையாட்டியபடி
கணநேரத்தில் மறைந்தது...
மீண்டும் குப்பையானது சாலை!

Tuesday, April 27, 2010

கொஞ்சம் கவிதை!

புள்ளிகள் புணரப் புணர
பிறந்துகொண்டேயிருக்கிறது
கோடு!
----------------------------------

தேரோட்ட நெரிசலில்
சாமி பார்த்த சந்தோசம்...
சிக்னலில்
பச்சை விளக்கைப் பார்க்கும்போது!
----------------------------------

எதிர்வீட்டுத் தொலைக்காட்சிச் சத்தம்
இன்றும் உச்சத்தில்...
இறுதியில் குறைந்தது
விசும்பல் ஒலி!

Friday, March 19, 2010

இயற்கை

பனித்துளி கனக்கிறது...
விடியும்வரை வியர்த்துக்கொட்டியபடி
புல்வெளி!

சில்லரை

சிக்னல் விலகுமுன்பே
கைக்குழந்தையுடன்
என்னை நெருங்கிய
பிச்சைக்காரியின்
தவிப்பைவிடப் பெரியது
பையில் சில்லரையில்லாத
என் தவிப்பு!

Friday, January 15, 2010

வயக்காடு வாழ்த்துகிறது!

மாடு கட்டிப் போரடித்தால்
மாளாது செந்நெல்லென்று
யானை கட்டிப் போரடித்த கூட்டம்
இன்று
வீடு கட்டிப் போரடிக்கிறது
என் மேல்!

வயலும்
வயல் சார்ந்ததும் மருதம்...
தொழிலும்
தொழில் சார்ந்தோரும்
பிழைக்க
என் வயிற்றில்
'பாலை" வார்ப்பது
என்ன நியாயம்?

வறண்ட கோடுகளால்
இயற்கையன்னை வதைப்பது போதும்:
இல்லாத கோடுகளால்
தண்ணீர் இல்லாமல் செய்வது
என்ன கொடுமை?
அணைக்கட்டுகள்
என்னை அரவணைக்காததை
என்னவென்பது?
மொழிகளால்
பிரிந்த உங்களிடம்
எந்த மொழியில் வேண்டுவது?
என்னிடம்
ஆழப்பாய்ந்து நீரள்ளிப் பருகும்
வேரில்லை:
நீர்த்தாகம் தீர
உங்களை விட்டால்
கதி வேறில்லை!

பசுமை தந்தேன்
இன்று
சுமையாகிப் போனேன்!
என்னை
வருடிச் சென்ற தென்றல்
நெருடலாய் கேட்கிறது
ஏன் கம்பிகளாய்
மாறி வருகிறாயென்று!

ஏரு பூட்டி சேறு பூசி
என்னை
கிச்சுக்கிச்சுக்காட்டி
விளையாடிய நீங்களா
இன்று
உயிருடன் பிரேதப்பரிசோதனை செய்வது?

பெற்றவள் கைவிட்டாள்...
பெற்றவனோ
விற்றுவிற்று வெற்றிடமாக்கி
மீண்டும் விற்றுவிட்டான்!

இன்னமும் இருக்கிறேன்...
ஊருக்கு ஒதுக்குப்புறமாய்
சுடுகாடு இடுகாடுபோல்
தீண்டத்தகாத வயக்காடாக!

ஒரே ஆறுதல்:
பொங்கல் பண்டிகையை
இன்றுவரை
பெயர் மாற்றவில்லை...
செங்கல் பண்டிகையென்று!

Tuesday, December 8, 2009

அதிபர்களின் அரசாங்கம்

உரிமை கேட்ட கூட்டத்தை
கொன்று தின்றதுபோக
மிஞ்சியதை
காலுடைத்து, கையுடைத்து
முள்வேலிக் கொட்டிலுக்குள்
சாகடிக்கும் அரசாங்கம்!
உச்சுக்கொட்டும் ஐநா சபை
விசாரிக்க வக்கற்று
வக்காலத்து வாங்குது
"பேஷ்! பேஷ்!" என்று!

சீனா, பாகிஸ்தானோடு
போட்டி போட்டு
ராணுவ பலத்தையெல்லாம்
கூட்டிக் கொடுத்த
கூட்டுக் களவாணி இந்தியா
கோடிகோடியாய்
கொட்டிக் கொடுக்குது...
இன்னும் புடுங்கப்போவதாய்
பேசித் திரியுது!
கண்ணி வெடிகளைப்
புடுங்கப்போவதாய் பேசித் திரியுது!
காஷ்மீரில்
எல்லை தாண்டிய தீவிரவாதமென்றால்
காலடியில்
ஈழத்தமிழரை கொன்றொழிப்பது
பௌத்த காருண்யமா?!

தன்னாட்டு மக்களை
கொன்றொழித்த பாவத்தை
திருப்பதி உண்டியலில்
கொட்ட வந்தவனுக்கு
அதிரடிப் பாதுகாப்பு!
அப்பாவி மீனவருக்கோ
துப்பாக்கிச்சூடு தான்
தினசரிப் பரிசு!

வரி ஏய்ப்பு செய்பவர்கள்
வருமானம் பெருக்க
'வடக்கின் வசந்தம்" வீசுது!
தொழிலதிபர் துயர்நீக்க
நற்சான்றிதழ் கொடுப்பதற்கே
இன்பச்சுற்றுலா சென்றுவந்தது
எம்பிக்கள் குழு!

இனி
சன் நெட்வொர்க்கில்
சிங்களமும் சேரும்!
குடும்பத்துக்கொரு
அமைச்சர் பதவி கேட்டு
கொழும்பிலும் கொட்டமடிக்கும்!
'பட்சே" சகோதரர்களுக்கு
'கொலைமாமணி"
விருது கொடுத்து குதூகலிக்கும்!

எதையோ சாதித்ததற்காக
நாளொரு பட்டமும்
பொழுதொரு பாராட்டுவிழாவுமாய்
சுற்றித் திரிபவர்
உலகத் தமிழ் மாநாட்டில்
ஒருவேளை அறிவிக்கலாம்...
ரகசிய முகாம் பற்றி
ஏதோவொரு வாரப் பத்திரிக்கையில்
படித்துப் பதைபதைத்ததாய்!
செம்மறித் தமிழறிஞர் கூட்;டம்
மன்னிக்கவும்,
செம்மொழித் தமிழறிஞர் கூட்டம்
'உச்சு"க் கொட்டி உருகலாம்!

Monday, December 7, 2009

உறவுகள்

அவரைப் போலொரு அப்பா;
இவரைப் போலொரு அம்மா;
அவனைப் போலொரு மகன்;
ஏங்கச் செய்யும் உறவுகள்
எதிர்ப்படும் வேளைகளில்
பிறவிப்பிழை
இலைவிட்டுக் கிளைவிட்டு
விருட்சமாய் விரியும்;
உறவுகள்
தேடிக் களைத்த வேர்கள்
ஓரிடத்தே நிலைப்பெற,
எங்கிருந்தோ வந்தமர்ந்த
ஏக்கப் பறவைகள்
சற்றே இளைப்பாறி,
கலைந்து செல்லும்
கனிசூழ் விருட்சத்தின்
உறவு தேடி!

Sunday, November 15, 2009

கனவுகள் தொலைப்பவன்!

நான் தேடிக்கிடைக்காத நிம்மதி
என்னைத் தேடிவரும் வரம்
கனவு!
ஒவ்வோர் இரவிலும்
சில
கனவுகளைத் தொலைத்துவிட்டுத்தான்
விழிக்கிறேன்
கசங்கிய படுக்கையை
உதறிவிட்டு மடிக்கும் போதும்
அகப்படுவதில்லை!

அள்ளக்குறையாத
தங்கக்குவியலை
ஏறிமிதித்து
சரித்து விளையாடுகையில்
கடித்த கொசுவை
நசுக்கும் நொடியில்
கனவு தொலைத்த சோகத்தை
யாரிடம் சொல்வேன்?!

உறக்கத்தின் பயணத்தில்
சிலநேரம் வானவில்லாய்
சிலநேரம் கானலாய்
எல்லாமே கணநேரமே!
ஆம்
அதிகபட்ச ஆயுசே
20 நிமிடம் தானாம்...
குறும்படம் போல்!

மனதை அரித்த நினைவுகள்
எக்கச்சக்க அச்சுப்பிழையுடன்
மறுபிரசுரமாவதை வியந்திருக்கிறேன்!
புகைப்படத்தில் சிரிக்கும் அப்பா
எப்போதாவது பேசிச் செல்வார்...
சாவின் வலியை
அவர் சொன்னதில்லை
வரும் வழியை
நான் கேட்டதுமில்லை
பேசிக் கொள்வோம்
வழக்கம்போல்
இன்றைய செய்தியையும்!

ஆசை முளைத்த நாள்முதலாய்
உறவு களைந்த உறவும்
வயது மரத்த மனமும்
காலம் கடந்த காலத்திலும்
உறுத்தாமல்...
நிறுத்தாமல்...
இந்திரனுக்கு இணையாக!
யார் தடைபோட்டது
கனவுக்கன்னியென்று?!

ஒற்றைக்கொம்பு சிறுத்தை
தொற்றிப் படரும் தென்னை
வற்றிய கிணற்றில்
தலைகுப்புற விழுந்தும்
அடிபடாத நான்!
இப்படி
எத்தனையோ ஆச்சர்யங்களை
அடுக்கலாம்...
என் கனவு அருங்காட்சியகத்தில்!

மன்னிக்கவும்
இதைப் பார்வையிட
என்னைத் தவிர
யாருக்கும் அனுமதியில்லை...
உங்களுக்காக
பயணக்கட்டுரை எழுதுவேன்
படித்துச் செல்லுங்கள்
யாரேனும் பிரசுரித்தால்!

Thursday, August 20, 2009

பிரிக்கப்படாத புத்தகங்கள்

வாடகை வீடு மாறியதும்
புத்தகங்களை
அலமாரியில் அடுக்குவதில்
அதிக ஆர்வம்...
பெரும்பாலும்
மூளைக்கொத்துக்கிடையே
இடம்பிடிக்காத
பிடிக்காத புத்தகங்களே!

அடுக்குகளில் சில
பரிசாக வந்தவை:
பல
கட்டாயம் படித்தாகவேண்டி
வாங்கியவை:
விரும்பி வாங்கிய
ஒன்றிரண்டு மட்டுமே
என் கைரேகைகளை
அவ்வப்போது பதியமிட்டபடி!

ஒருசில புத்தகங்களை
நான் தொட்டதேயில்லை
குழந்தைகளையாவது
தொட விட்டிருக்கலாம்...
என் வீட்டுக் கறையானுக்கும் கூட
இதே வருத்தம்தான்!

கல்லூரிவரை கால்பதித்தும்
அடையாளமாக
அடுக்கில் ஏதுமில்லை!
ஆம்:
புத்தகங்கள் மீதான
சிறிதான ஆர்வமும்
அற்றுப்போக விருப்பமில்லை!

அறிவுசார் புத்தகங்கள்
வாங்கும் பழக்கம்
அதிகரித்துள்ளதாக
கேள்விப்பட்டிருக்கிறேன்
படிக்கும் பழக்கமும்
பெருகியுள்ளதாக
எதிலும் படித்த நினைவில்லை!

என்றாவது ஒருநாள்
படிக்கும் ஆர்வம் வரும்...
என் பேரனுக்காவது!
அன்றுவரை
கல்வெட்டுக்காக
கால்கடுக்க நிற்கும்
தலைவர்கள் சிலைபோல்
புத்தகங்களை
அடுக்கிக்கொண்டே!