Tuesday, November 27, 2007
கொஞ்சம் பயணம்... கொஞ்சம் தூக்கம்!
விடாப்பிடியான தூக்கத்தில்...
பெண்கள் இருக்கையில் அவன்!
ஓடும் பேருந்தில் தூங்கிய குழந்தை
அடித்தெழுப்பப்பட்டது...
அரைடிக்கெட்டுக்கு அளவெடுக்க!
என்னருகே அமர்ந்திருப்பவர்
எனக்கும் முன்பே தூங்கிவிட்டார்...
தூங்காமல் நான்!
Friday, November 16, 2007
கவிஞர் வைரமுத்து அவர்களோடு நான்...
Wednesday, November 14, 2007
Friday, October 19, 2007
வயக்காட்டுப் பக்கம்…
Sunday, October 7, 2007
கம்பளிப்புழு!
என் சிந்தனை வலையை அறுத்தபடி
குறுக்குக் கட்டையில்
மெல்ல நகருது கம்பளிப்புழு!
கம்பளி போர்த்திய புழுவே!
குத்திட்டு நிற்கும்
மயிர்க்கால்களே உன் ஆயுதம்!
உன்னைப் பார்த்த மறுநொடி
என்னையும் மீறி
எனது ரோமங்களனைத்தும்
எழுந்து நின்று
பயமரியாதை செய்யும்!
கம்பளிப் புழுவல்ல...
நீ ஒரு கம்பீரப்புழு!
மழைக்காலத்திலே
மண்டிய புதர்ச்செடியிலே
இலைமறைகாயாக
தலைமறைவாகத் தான்
தலைமுறை தலைமுறையாக
உனது
வளர்சிதை மாற்றமெல்லாம்!
நீ பதுங்குவது
பாய்வதற்கா?
இல்லை, பறப்பதற்கு!
அஹிம்சாவாதி நீ!
மழைக்காலத்தின் அடையாளமே!
வெயில் காலத்தின்
புழுக்கமான இரவுகளில்
கனவில் நீ வந்தாலும்
என் ரோமக்கால்களனைத்தும்
சிலிர்த்து நிற்க...
நானும் உன்னைப் போலவே...
தூக்கத்தில் நெளிந்தபடி!
Friday, October 5, 2007
செந்தில், வடிவேலுவுக்குப் போட்டியாக புட்டபர்த்தி சாய்பாபா!
ஒரு படத்தில் ஊருக்கு அருகே இருக்கின்ற மலையைத் தூக்குவதாகச் சொல்லி ஊர் மக்களை ஏமாற்றுவதாக நடிகர் செந்தில் காமடி பண்ணியிருப்பார்! இன்னொரு படத்தில் நடிகர் வடிவேலு, தனது கண்ணில் கடவுள் தெரிவதாகச் சொல்லி ஊர் மக்களை ஏமாற்றுவார்! இதையெல்லாம் மிஞ்சும்படியாக நேற்று சாய்பாபா வழக்கம்போல ஒரு "தில்லாலங்கடி" வேலை செய்திருக்கிறார்!
நேற்று (04.10.2007) சாய்பாபா குடியிருக்கும் பிரசாந்தி நிலையத்திலிருந்து, மாலை 6.30 மணிக்கு "விஸ்வரூப விராதி" நிகழ்ச்சி நடக்கவிருப்பதாக அறிவிப்பு வந்தது. அதாகப்பட்டது, பால்கனி வழியே "தரிசனம்" கொடுத்து வந்த சாய்பாபா நேற்று மாலை 6.30 மணிக்கு நிலவிலிருந்து தரிசனம் தரப்போவதாக அறிவிக்கப்பட்டது!
வழக்கம்போல இதுபற்றி அறிவுப்பார்வை பார்க்க மறுக்கும் அவரது பக்தகோடிகள் பலரும் பிரசாந்தி நிலையத்திலிருக்கும் மைதானத்தில் கூடி விட்டனர். இவர்களோடு ஏமாற்றுக்கார சாய்பாபாவும் அங்கு வந்து சேர்ந்து கொண்டார்! பூமியில் இருக்கும் பாபா நிலவில் காட்சி தரும் அற்புதத்தைப் பார்க்கும் ஆர்வத்தோடு அனைவரும் வானத்தைப்பார்க்க, அங்கு நிலா ஆப்சென்ட்!!
நம்மளை வைத்து பாபா "காமடி கீமடி" பண்றாரோ என நினைத்துக் கொண்ட நிலா மேகத்தினுள் மறைந்துகொண்டு வெளியே தலைகாட்டவேயில்லை!! நிலவில் தரிசனம் தரக்கூடிய சாய்பாபாவாலும் நிலவை மூடி மறைத்திருக்கும் மேகக்கூட்டத்தை ஊதித்தள்ளி விலக்க முடியவில்லை!! இறுதியாக, இன்னொரு நாள் காட்சி தருவதாக பாபா சொன்னதும் கூட்டம் ஏமாற்றத்துடன் கலைந்தது!!!
தமிழ்த் திரைப்படத்துறையினர் இந்த காமெடி நிகழ்ச்சியை தங்கள் அடுத்த படத்தில் சேர்த்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்!!!
Friday, September 28, 2007
மீண்டும் ஹைக்கூ!
யேசுபிரான்...
சில்லரைகளையும் சேர்த்துச் சுமந்தபடி!
சிறுபுள்ளி கூட சிக்காததால்
செல்வி
தற்போதைக்கு "செலவி"யாக!
குழந்தை அழுதது...
அதட்டினார் அப்பா..
சமாதானம் பேசினான் பலூன்காரன்!
குழாயடிச் சண்டை
தயங்கியபடி
நல்ல தண்ணீர்!
அப்பா அம்மா சண்டை
கன்னம் வீங்கியது
எனக்கு!
Wednesday, September 26, 2007
ஹைக்கூ
வாஸ்து பார்க்கவும் நேரமில்லாமல்
கூட்டு முயற்சியில்
தேனீக்கள்!
வெளிச்சத்தை விழுங்கிவிட்டு
விடிய விடியத் தூக்கமில்லாமல்
நிலவு!
விருந்துக்கு யாருமே வரவில்லை
கவலையில்
வலையில் சிலந்தி!
முல்லைக்குத்
தேர் கொடுத்தவன் நினைப்பு
பேருந்தில் தொங்கும்போது!
பரிணாம வளர்ச்சியா?
பரிதாப வளர்ச்சியா?
துப்பட்டாவாக தாவணி!
நறுக்! நறுக்!
உயரமான கம்பியில் தான்
அவள் நடக்கிறாள்...
தெருவே நெருக்கடியில்!
ஏ டி எம்
விடிய விடிய
தூக்கமில்லாமல்...
புதுப்பணக்காரன்!
கோடை காலம்
வழிநெடுக
வியர்த்துக்கொட்டியபடி...
தண்ணீர் லாரி!
கிளி ஜோசியம்
அள்ளிக் கொடுத்துக் கொடுத்துச்
சிவந்து போனது
கிளியின் மூக்கு!
கருவாடு
ஈரமில்லாததால்...
ஈரமில்லாததால்...
கருவாடாக இன்று!


