Wednesday, August 24, 2011

என்னை நனைத்த மழைத்துளிகள்

தேங்கிய நீரை
வாரியிறைத்தபடிதான்
வாகனங்கள் நகர்கின்றன
இருந்தும் குறைவதாயில்லை
மழைநீர்க் குட்டை!

சவ ஊர்வலம்போலதான்
போக்குவரத்து ஊர்ந்து செல்லும்
ஊர்வலத்தின் முன்னே
உண்மையிலேயே
செத்துக்கிடந்தாலும் கிடக்கும்
எதாவது அரசு பேருந்து!

தேரைகள், பாம்புகள், எல்லாமே
சொல்லாமல் கொள்ளாமல்
வந்து குடியேறும்
கண்ணுக்கு அகப்படாத மூலைகளில்...
வாடகை பயம் போல!


என் சமாதானத்தை
கேட்டுக் கேட்டுப் பழகிவிட்டது
என் மனதுக்கு;
எனக்காகவே
சமாதானமானதுபோல
நடிக்கவும் கூட...
இன்னமும்
நடிக்கப் பழகாத அவளுக்காகவே
நானும் என் மனதும்
ஒவ்வொரு நொடியும்!
என்னை வழிநடத்தும்
கைத்தடியின்
முனை பற்றிய கரத்தில்
மெலிதாய் கிளம்பிய நடுக்கத்தில்
அவளிடம்
காதல் கடிதத்தை நீட்டிய பொழுது
மீண்டும் மலர்ந்தது!
மிகுந்த எச்சரிக்கையுணர்வோடு
சிந்தித்துத் திட்டமிட்டு
திரும்பவும் அது நடக்காமல்
மனதை
பக்குவப்படுத்தியே வந்தாலும்
ஏதோ ஒரு நொடியில்
எனை மறந்த சிந்தனையில்
கடித்தே விடுகிறேன்
உதடு தீண்டும் மீசையை!

Tuesday, August 16, 2011

எண்ணிலடங்கா வாகனங்கள்
கடந்துகொண்டேயிருக்கின்றன
எந்த வண்டும் வரவில்லை;
சாலையோரப் பூச்செடிகள்!

Tuesday, August 9, 2011

வெற்றிலை!

குளித்ததுமுடித்து, தலைசீவி
முகப்பூச்சு பூசி,
பொட்டுவைத்து, பூ வைத்து
அலங்காரமாய் வீதியில் திரிகிறது...
பீடாக்காரனுக்கு வாக்கப்பட்ட
வெற்றிலை!

Saturday, December 4, 2010

வாழ்வின் விபத்து!

விபத்திலடிபட்ட உடலின்

சிதைந்த மூளைச்சிதறல்களில்
இறந்துபட்டிருந்தது
வருங்காலக் கனவுகளும்
குடும்ப எதிர்பார்ப்புகளும்;
கட்டியழக்கூட
அடுக்கிக் கோர்த்தால்தான்...
ஆகப்போவது ஏதுமில்லை
கூடியிருக்கும் கூட்டத்திற்கு;
எட்டியெட்டிப்பார்த்து
உச்சுக்கொட்டி,
ஒருசில தலைகிறுகிறுத்து
நகர்ந்தபடி...
அள்ளிச் செல்லுகையில்
கசியுது ரத்தம்
குழந்தைகள் நினைவால்!



Thursday, August 5, 2010

வறுமை!


வேற்றுக்கிரகத்திலல்ல,

என்னுலகில் தான்
இவர்களும்!

பூமிக்கு இருதுருவமென்று படித்திருக்கிறேன்
தவறு
இரு உருவங்கள்!

உடல் இளைத்த நாகரீகமும்
மறுபுறம்
உடல் இளைக்கும் நாகரீகமும்!

உலகம் சுருங்குகிறதாம்;
உடற்சுருக்கங்கள் சிரிக்கின்றன
எனைப் பார்த்து!

வறுமை தான்
தின்று கொண்டிருக்கிறது...
தினம் இவர்களை!

இனி
சிதறும் உணவுப் பருக்கைகளில்
இவர்கள் முகம் தெரியட்டும்!

படமெடுத்தவர்களைப் பார்த்தால்
கேட்க வேண்டும்
உணவளித்தீர்களா என்று!

புகையும் அடுப்படி!


நள்ளிரவு வானமாய்
கரிப்பிடித்த அடுப்படிகள்
விடிஞ்சு போச்சு!

திரிகையும், அம்மியும்
உரலும், குழவியும்கூட
உருமாறிப்போச்சு!

புகைக்கூண்டுகளும்
உசுப்பேத்தும் ஊதுகுழலும்
ஒழிஞ்சே போச்சு!

சமையல் வெந்ததை சத்தமிட்டு
சமையலே சொல்லும்
காலம் வந்துடுச்சு...

"இன்னுமா ஆகல?"
அதட்டுவது ஆணாகவும்
"இதோ ஆயிடுச்சு!"
படபடப்பது பெண்ணாகவும்
இன்னும் அப்படியே!

காமராஜர் என்றொரு அரசியல்வாதி!

நான் பிறக்குமுன்பே இறந்துபோன
காமராஜரைப் பற்றித்தான்
இன்றுகூட என் அப்பா
பெருமை பேசிப்பேசி
மாய்கிறார்!

ஒரு பினாமி இல்லை
புறம்போக்கு நிலமுமில்லை
பள்ளி கல்லூரி
எதுவுமில்லை
பட்டாசு கொளுத்திப் போடக்கூட
பட்டாளமில்லை!
பிறகெப்படி நம்புவேன்
இவர் அரசியல்வாதியென்று!

இவர் படிக்காத மேதையாம்!
அரசியலிலிருந்தும்
ஒரு டிகிரி கூட 'வாங்க'த் தெரியாத
இவர் அரசியலில் பேதையென்பேன்!
மதிய உணவு கொடுத்து
பள்ளிக்கு அழைத்தாராமே பிள்ளைகளை?
படிக்காத கூட்டமிருக்கும்வரையே
பதவி நிலைக்குமென்ற
அரிச்சுவடி கூட தெரியாத
இவரெல்லாமா அரசியல்வாதி?!

ஒருமுறை கூட
திருமணமாகவில்லை
வாரிசும் இல்லை
சொத்துமில்லை, பத்துமில்லை
சொந்தபந்தத்திற்கு
ஒரு பதவியுமில்லை!
இவரைப் போய்
"கிங் மேக்கர்" என்கிறார்கள்!

இன்றோ
இவர் ஆட்சியை அமைக்க
கோஷ்டிகளுக்குப் பஞ்சமில்லை
கொள்கையைப் பின்பற்றத்தான்
எவருமில்லை!
இவரணிந்த கதராடையை,
பாதயாத்திரை பக்தர்களின்
சீருடைபோல்
அவ்வப்போது மட்டுமே அணிகிறார்கள்
அடையாளத்திற்கு!

என் அப்பாவிடம் சொன்னேன்
இவர் அன்று
ஒருமுறைதான் தோற்றார்...
இன்றுவரை இருந்திருந்தால்
எல்லாத் தேர்தல்களிலும்
சொல்லிவைத்தாற்போல்
தோற்றுக்கொண்டே இருந்திருப்பார்!
விருந்து வைக்கத்தெரிந்தும்
'மருந்து' வைக்கத் தெரியாத
இவர் அரசியல்வாதியல்ல,
அரசியல் அப்பாவி!