Tuesday, January 29, 2008

வடிவேலுவாக மாறிய ஹர்பஜன்சிங்!!!

ஹர்பஜன்சிங் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஹர்பஜன்சிங் விவகாரத்தில் நடந்த விசாரணையில் யாரும் அறியாத சில ரசிக்கத்தக்க(!) தகவல்களை இப்பகுதியில் கொடுத்துள்ளேன்! ரகசியமாக இருக்கட்டும்!!
-----------------------------------------------------------------------------------------------
நீதிபதி: நீ சைமெண்ஸ திட்டுனியா?
ஹர்பஜன்சிங்: என்ன திட்டுனியா?!
நீதிபதி: ஏப்பா, நீ சைமெண்ஸ திட்டுனியா இல்லியா?
ஹர்பஜன்சிங்: என்ன திட்டுனியா இல்லியா?!
நீதிபதி: ஏப்பா பாண்டிங்கு, நான் சரியாதானப்பா கேக்குறேன்?
ஹர்பஜன்சிங்: என்ன சரியாதானப்பா கேக்குறேன்?!
நீதிபதி: சொன்னதயே திரும்பத் திரும்ப பேசுற நீ!
ஹர்பஜன்சிங்: என்ன திரும்பத் திரும்ப பேசுற நீ?!
பாண்டிங்: நீதிபதிய கலாய்ச்சா பார்த்துக்கிட்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம்.
ஹர்பஜன்சிங்: சும்ம எதுக்கு இருக்குற? கைல பேட்டத் தூக்கிக்கிட்டு அலைய வேண்டியது தான?!
பாண்டிங்: இப்ப கரெக்டா பதில் சொல்றான் சார்! இப்போ கேளுங்க!
ஹர்பஜன்சிங்: என்ன இப்போ கேளுங்க?!(இதைப்பார்த்துக்கொண்டே இருக்கும்போது சைமெண்ஸ் முகத்தில் கடுப்பேறுகிறது)
சைமெண்ஸ்: டேய், உன்னை கிரவுண்டுலயே போட்டிருக்கணும். இவ்ளோ தூரம் உன்னைப் பேச விட்டது தப்பு!
ஹர்பஜன்சிங்: ஏய்! ஸ்டாப் இட் மேன்! நீ மட்டும் இவ்ளோ தூரம் முடிவளர்த்து சடை போட்டிருக்கியே, உன்னை எதாவது கேட்டமா?
(உடனே சைமெண்ஸ் அடிக்கப் பாய்கிறார். தெண்டுல்கர் குறுக்கே விழுந்து தடுக்கிறார். ஹர்பஜன்சிங் உடனே நீளமான கோடு ஒன்றைக் கிழிக்கிறார்!)
ஹர்பஜன்சிங்: இந்த கோட்டைத்தாண்டி நீயும் வரக்கூடாது... நாங்களும் வரமாட்டோம்! பேச்சு பேச்சோட இருக்கணும்!
சைமெண்ஸ்: கோட்டைத்தாண்டி அந்தப் பக்கம் வந்தா?
ஹர்பஜன்சிங்: வந்தா நீயும் எங்க பக்கம் இருப்ப! என்ன இது சின்னப்புள்ளத்தனமா?
தெண்டுல்கர்: பாஜ்ஜி அவனுங்கள கலாய்ச்சது போதும். விட்டுடு.(மீண்டும் நீதிபதி கேட்கிறார்)
நீதிபதி: இப்போ சொல்லு, நீ சைமெண்ஸ திட்டுனியா?
ஹர்பஜன்சிங்: ஆமா திட்டுனேன்!
நீதிபதி: எதுக்கு இவனை திட்டுன?
ஹர்பஜன்சிங்: நீங்களே பாருங்க இவனோட தலைய! எங்க "தல"யே தன்னோட கூந்தல 'கட்' பண்ணிட்டு அமைதியா இருக்குறப்ப இவனுக்கு இது தேவயா?
நீதிபதி: இதுக்கு தோனி தான கோபப்படணும்? உங்களுக்கு எதுக்கு கோபம் வருது?
ஹர்பஜன்சிங்: பெரிய மனுஷன் கேக்குற கேள்வியாய்யா இது? என்னோட தலைய பாருயா! எப்படி அடக்கமா மூடிப்போட்டு இருக்குறேன்! இவன் என்னடான்னா இப்படி பப்பரப்பான்னு விரிச்சிப் போட்டுக்கிட்டு இருக்கானே!!! கம்பளிப்பூச்சி மாதிரி முடியத்தொங்கப் போட்டுக்கிட்டு பேட்டிங் பண்ணினால் எவனுக்குதான்யா பந்து போட மனசு வரும்?!!
நீதிபதி: அதுசரி, இவரப் பார்த்து குரங்குன்னு எதுக்கு சொன்ன?
ஹர்பஜன்சிங்: யோவ்! இதெல்லாம் ஒரு வசவா? எங்க ஊருப்பக்கம் வந்து பாரு! கவுண்டமணி,கவுண்டமணின்னு ஒரு அண்ணண் இருக்காரு! அவரு வய்யாத வசவாய்யா?
நீதிபதி: அப்படி என்ன திட்டிட்டாரு?
ஹர்பஜன்சிங்: போடா கோமுட்டித்தலயா! அடுப்பவாயா! நாறவாயா! தீச்சட்டித்தலயா! மொள்ளமாரி... (இப்படியே விடாமல் திட்டிக்கொண்டேபோக... இறுதியில் நீதிபதி காதில் ரத்தம் வழிகிறது!)
சைமெண்ஸ்: பிளட்! சேம் பிளட்!(நீதிபதி கண்ணீர் விடுகிறார்!)
ஹர்பஜன்சிங்: ஏய்! என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு?! விடு, விடு, இதுக்குத்தான் விசாரணை வைக்காதீங்கடானு பலதடவை சொன்னேன்! கேட்டால் தான!!
(இறுதியில், வேறு வழியில்லாமல் ஹர்பஜன்சிங் மீதான தடையை நீதிபதி நீக்குகிறார்.)
இதுதாங்க உண்மையில் நடந்தது!!!

Friday, January 25, 2008

காதலிக்கும் காலத்தில்...

காதலிக்கும் காலத்தில்
எனக்கான காதலியாய் மட்டுமே
உனைப் பார்த்தேன்...
உனை மட்டுமே பார்த்தேன்...
இன்று
என் பெற்றோரின் மருமகளாய்
உடன்பிறப்புக்கு அண்ணியாய்
நம் குழந்தைக்குத் தாயாய்
இத்தனையாய் பார்க்கிறேன்...
இத்தனைக்காகவும் பார்க்கிறேன்...
இடையிடையே
எனக்கான காதலியாகவும்!

சொல்ல மறந்த கதை!

ஆதாமும் ஏவாளும்
ஓடிப்பிடித்து
ஆடிக்கொண்டிருக்கிறார்கள்
நிர்வாணமாக...
பழத்தைக் கொடுக்க மறந்த பாம்பு
வேடிக்கை பார்க்கிறது
தின்றபடி!

Friday, January 11, 2008

ஜல்லிக்கட்டுக்குத் தடை! - "விவசாயி வதை தடைச் சட்டம்" வருமா?

பொங்கல் திருநாளில்
ஜல்லிக்கட்டுக்குத் தடை!
காளைகளுக்காக
கண்ணீர் சிந்தியது போதும்...
பெருமாள் கோவிலில்
பிச்சையெடுக்கும்
யானைகளுக்காகவும்
கொஞ்சம் அழுது தொலையுங்கள்!

தூர்வாராத ஏரிகளை
ஏறி மிதித்துப்
பல்லிளிக்கும் கட்டடங்கள்
ஒருபுறம்...
நிலத்தடி நீர் தேடி,
நீர் தேடி,
ஏர் மறந்த நிலங்களை
தேடி வளைக்கும்
சிறப்பு பொருளாதார மண்டலங்கள்
மறுபுறம்!
விவசாயிகளே!
பயிர் வளர்த்தது போதும்...
டாடா கம்பெனியிலே
டயர் துடைக்க வாருங்கள்!

கோதுமைக்கு குவிண்டாலுக்கு
ஆயிரத்திற்கு மேல்...
நெல்லுக்கு மட்டும்
ஆயிரத்தெட்டு யோசனைகள்!
பயிரிலும்கூட
வடநாடு தென்னாடு
பேதமிருக்கு!
ஆறுதலாக ஒரு செய்தி;
விவசாயிகள் தற்கொலையில் மட்டும்
வேற்றுமையில் ஒற்றுமையாய்!

உங்களுக்கு
என் பொங்கல் செய்தி...
மேனகா காந்தியிடம்
கேட்டுப் பாருங்கள்;
அடுத்த பொங்கலுக்குள்
"விவசாயி வதை தடைச் சட்டம்"
வந்தாலும் வரலாம்
உங்களையும் காப்பாற்ற!
பொங்கலோ பொங்கலென
பொங்கட்டும் சிந்தனை...
எல்லோர் மனதிலும்!

Thursday, January 10, 2008

உரசிப் பார்க்கப்படும் உண்மை!

கலந்தாய்வு முடிந்து
படுக்கையில் கவிழும்போதுதான்
இது
வெறும் சதைச்சூடென்ற
உண்மை உறைக்கிறது...
இருந்தும்
ஒவ்வொரு இரவிலும்
உரசிப்பார்க்கப்படுகிறது உண்மை!

Tuesday, January 8, 2008

சவேரா - சாவே வா! - புத்தாண்டுக் கொண்டாட்டம்!

சவேரா - சாவே வா! - புத்தாண்டுக் கொண்டாட்டம்!------------------------------------------------------
ஆடை சரிந்தாலும்

அலட்டிக்கொள்ளாமல்

ஆட்டம் போட்ட கூட்டம்

அலறியடித்தது...

மேடை சரிந்ததால்!

உள்ளேயும் தண்ணி...

வெளியேயும் தண்ணி...

பாடை கட்டப்பட்டது

மூவருக்கு!!


...............................


பதினாறும் பெற்று

பெருவாழ்வு வாழும்

கங்காருவின்

பயணம் தொடர்கிறது...

வயிற்றுப்பையில்

நடுவர்களைச் சுமந்தபடி!


.....................................


தஙத்தின் விலை

கிராமுக்கு ஆயிரத்தைத் தொட்டது!

சிலருக்கு

பொன்னாசை விட்டது!

பலருக்கு

திருமண ஆசை விட்டது!